– தாமரை மதியழகன் –
என்னடா திடீரென அம்மா கடிதம் மூலம் பேசுகிறா என யோசிக்கிறீர்களா? புத்தருக்கு போதிமரத்தின் கீழ் கிடைத்த ஞானம் எனக்கு எங்கள் வீட்டு வசிப்பறையில் கிடைத்ததன் பயனே இந்த மடல்.
அன்றொருநாள் ஏதோ ஒரு கதையில் நீங்கள் “எப்படியம்மா உங்களை நாங்கள் வயோதிபர் இல்லத்திற்கு அனுப்பலாம்?” என்று கூறியது என் நெஞ்சைக் கலக்கிவிட்டது. உண்மையைச் சொன்னால் மனதின் ஒரு மூலையில் புளகாங்கிதம்தான். ஆனாலும் ஆதங்கமே அதனையும் மீறி இருந்தது. தெரிந்தோ தெரியாமலோ அப்படி ஒரு எண்ணத்தை உங்கள் மனதில் நானே விதைத்திருக்கிறேனோ என்ற எண்ணம் என்னை வாட்டுகிறது. என்னை, என் உள்ளுணர்வுகளை உங்களுக்குத் தெளிவுபடுத்த நினைக்கிறேன்.
அரை நூற்றாண்டு வாழ்க்கையில் எத்தனையோ ஏற்ற இறக்கங்கள். எத்தனையோ சவால்கள். சங்கடங்கள். சந்தோசங்கள் மற்றும் சாதனைகள். அத்தனையும் கடந்து வந்து மலை உச்சியில் நின்று பார்க்கிறேன். என்னைச் சுற்றிய உலகம் பிருந்தாவனமாய் மலர்ந்திருக்கிறது. அந்த ஆனந்தத்தை அனுபவித்த வண்ணம் எதிர்காலத்தை எட்டிப் பார்க்கிறேன். வந்த பாதையைவிடப் போகும் பாதை இன்னமும் கடினமாய்த் தெரிந்தாலும் எப்படியும் சமாளிக்கலாம் எனத் தைரியமாய் எண்ணும்போதுதான் உங்கள் வார்த்தைகள் இதை எழுதத் தூண்டியது.
நீங்கள் பிறந்து வளர்ந்த காலங்களை எண்ணிப் பார்க்கிறேன். அன்றிலிருந்து இன்றுவரை தாத்தா பாட்டியுடன் வளர்ந்ததால் அப்படி ஒரு எண்ணம் உங்களுக்குள் தோன்றியதோ? அல்லது எங்கள் சமூகத்தில் “அம்மா அப்பாவை வச்சுப்பார்க்க வேண்டும்” என்ற ஒரு கருத்து உலாவி வருகிறதே, அது காரணமோ? வச்சுப் பார்க்காவிட்டால், முதியோர் இல்லத்தில் சேர்க்கவேண்டிய தேவை ஏற்பட்டால், அது பஞ்சமாபாதகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறதே, அதுதான் காரணமோ?
எது எப்படியோ, இவையெல்லாமே மேலோட்டமான கருத்துக்கள். வாழ்க்கை சூழ்நிலைகள் எல்லோருக்கும் ஒரே மாதிரி அமைவதில்லை. எல்லாருக்கும் தாம் விரும்பியபடி எல்லாவற்றையும் நடத்தி முடிக்கும் பாக்கியமும் கிட்டுவதில்லை. உங்கள் தாத்தா பாட்டியைப்போல் தம் பிள்ளைகளுக்காக, பிள்ளைகளை நம்பி, தாங்கள் வாழ்ந்து கழித்த ஊரை விட்டுவிட்டு, வெளிநாடு வந்தவர்கள் நிலை ஒருவிதம். அவர்கள் இந்தச் சூழலுக்குப் பழக்கப்படாதவர்கள். கடைசிவரை பிள்ளைகளோடு வாழ்வதே அவர்களுக்கு மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சியை அவர்களுக்குக் கொடுக்க முடிந்தால் சிறப்பு. அதுமட்டுமின்றி தங்களுக்கென ஒரு வாழ்க்கையை வாழத்தெரியாதவர்கள் அவர்கள். பிள்ளைகள், பேரப்பிள்ளைகளை வளர்ப்பதும் பராமரிப்பதுமே தங்கள் வாழ்க்கையாய் வாழ்பவர்கள். அவர்கள் சேவைகளைக் காலம் முழுதும் அனுபவித்தவர்கள் கடைசிவரை அவர்களைச் சந்தோசமாக வைத்திருப்பதே நியாயம்.
அதேநேரம் முதுமை, தள்ளாமை, நோய் நொடி என வரும்போது அவர்களை வசதியாக, சுகமாக, பாதுகாப்பாக வைத்திருப்பதும் மிக அவசியம். சிலருக்கு இருபத்துநான்கு மணிநேர அவதானிப்பும் பாதுகாப்புமே அவசியமாகக்கூடும். உங்களுக்கு ஞாபகமிருக்கிறதோ தெரியாது, உங்கள் தாத்தா ஞாபகமறதியில் எத்தனையோ நாள் வீட்டைவிட்டு வெளியேறிப் பாதைமாறித் தொலைந்து போயிருக்கிறார். எங்கள் நல்ல காலம் ஒவ்வொரு முறையும் அவரை எப்படியோ கண்டுபிடித்துவிட்டோம். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அவரை தொலைத்திருந்தோமானால் எங்களை நாங்களே மன்னித்திருக்க மாட்டோம்.
இதெல்லாவற்றையும் சீர்தூக்கிப்பார்த்தே முடிவெடுக்க வேண்டும்.
எது எப்படியிருந்தாலும் அதற்கான வசதி வாய்ப்பும் சந்தர்ப்பங்களும் அமையவில்லை என்றால் அங்கே பிழை சொல்வதில் அர்த்தமுமில்லை. குற்றவுணர்வில் கூனிக்குறுகத் தேவையுமில்லை. உலகம் ஆயிரம் பேசலாம். வேலை வாங்கிவிட்டுத் தூக்கி எறிந்துவிட்டார்கள் என்று தூற்றலாம். ஆனால் இவையெல்லாம் நான்கு சுவரிற்குள் நடப்பதைத் தெரிந்துகொள்ளாமல் எழுந்தமானமாக சொல்லப்படும் கருத்துக்கள். இவற்றை யாரும் பொருட்படுத்தத் தேவையில்லை.
எங்கள் நிலையோ வேறு. நாங்கள் சுயமாகப் புலம்பெயர்ந்து இங்கே நிரந்தரமாக வேரூன்றியவர்கள். இந்த சூழல் பழக்க வழக்கங்கள், வழிமுறைகள் எல்லாம் தெரிந்தவர்கள். வேலை, வீடு, பிள்ளைகள் என்று எங்கள் வாழ்க்கையை நாமே தீர்மானித்து இத்தனை காலம் கடத்திவிட்டோம். அது எங்கள் தேர்வே. இன்று நீங்கள் எல்லோரும் ஒரு நல்ல நிலைக்கு வந்து விட்டீர்கள். இந்த நிம்மதியும் சந்தோசமும் எங்கள் மீதி வாழ்க்கையை நடத்திச்செல்லும். எங்களால் இயன்றவரை சுயமாய் எங்கள் காரியங்களைப் பார்த்துக்கொள்வோம். இந்த உலகில் நாங்கள் பார்க்கவேண்டிய, செய்யவேண்டிய விடயங்கள் இன்னும் அநேகம் உள்ளன. இயன்றதையெல்லாம் செய்து முடிக்க ஆசைப்படுகிறோம்
ஒரு நேரம் வரும். எங்களுக்கும் இயலாமை வரும். நோய் நொடிகள் வரும். இந்த நாட்டில் எல்லா வசதிகளும் வாய்ப்புகளும் இருக்கிறது. எங்கள் மனம்போல கடைசிவரை வாழ எத்தனையோ வசதிகள் உண்டு. இன்னொருவர் எங்களை வச்சுப்பார்க்கும் தேவையும் இல்லை. அந்த ஆசையும் எங்களுக்கில்லை. அப்படியொரு சுமையை உங்களுக்குத் தருவதில் எங்களுக்கு விருப்பமுமில்லை. எந்தக்காலத்திலும் உங்களுடைய மாறாத அன்பு மட்டுமே எங்களுக்குத் தேவை.
உங்கள் சிறுபிராயத்தில் உங்களை நல்ல மனிதர்களாக வளர்த்து, உங்களுக்கு வளமான வாழ்க்கையை அமைத்துத் தருவதே எம் குறிக்கோளாக இருந்தது. அதை நிறைவேற்ற நினைத்து நாங்கள் கையாண்ட வழிகளில் சிலவேளைகளில் அர்த்தமற்ற விடயங்களைச் சொல்லியிருக்கலாம். “எவ்வளவு கஷ்டப்பட்டுப் படிப்பித்தோம், என்னவெல்லாம் வாங்கித்தந்தோம், அதைச் செய்தோம் இதைச் செய்தோம்” என்று எத்தனையோ விடயங்களைச் சொல்லியிருப்போம். அதை எங்கள் அறிவுக்கெட்டிய வழியில் சொன்னோமேயொழிய அதன் பின்னே இருந்த அர்த்தங்களோ வேறு. நீங்கள் வாழ்க்கையின் கஷ்டங்களை புரிந்துகொள்ளவேண்டும், கிடைக்கும் நற்பலன்களின் அருமையை அறிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக நாம் அதைச் சொன்னோமே ஒழிய, நாங்கள் உதவியோ தியாகமோ செய்தோம் என்று நினைக்கவுமில்லை, சொல்லிக்காட்டவுமில்லை. நீங்கள் எங்களுக்குக் குழந்தைகளாய் வாய்த்தது இறைவன் எங்களுக்கு அளித்த வரம். நீங்கள் எங்கள் வாழ்க்கையில் அமைந்த வசந்தம். மற்றபடி இது ஒன்றும் ஒர் காப்புறுதிக்கணக்கோ investment propertyயோ அல்ல நாங்கள் செய்ததை அதற்கும் மேலாகத் திருப்பித்தருவதற்கு.
என் மனமும் உடலும் சிந்தனையும் திடமாக இருக்கும் இன்றைய நிலையில் என் எண்ணங்களை உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறேன்.
ஒருவருக்காக ஒருவர் வாழ்வதும் ஒருவரை ஒருவர் தாங்குவதும் உறவுகளின் நியதி. ஆனால் எதற்கும் ஒரு அளவு உண்டு. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதுபோல் எதுவுமே அளவோடு இருக்கும்வரைதான் எல்லோருக்குமே நல்லது. பெற்றோர் பிள்ளைகளைப் பெற்று வளர்ப்பதும் பிள்ளைகள் தலையெடுத்ததும் பெற்றோரைக் கவனிப்பதும் சாதாரணமே. ஆனால் அதுவே பெற்றோர் பிள்ளைகளுக்காக வாழ்க்கையையே தியாகம் செய்வதும் பின் அந்தச் சுமையைச் சுமக்க முடியாமல் பிள்ளைகள் தவிப்பதும் என்று ஒரு சுழலுக்குள் சிக்கித் தத்தளிக்கிறோம். இந்த “வச்சுப்பார்க்கும்” சுழலிலிருந்து எங்கோ ஓரிடத்தில் நாம் வெளியேற வேண்டும். யாரிலும் தாங்காமல் எந்தக்கஷ்டமுமில்லாமல் எல்லா வசதியோடும் வாழக்கூடிய ஒரு தேசத்தில் வாழ்கிறோம். அவரவர் வாழ்க்கையை இயன்றவரை முழுமையாக வாழ்வோம். யதார்த்தமாய் வாழ்வோம்.
ஆசிகளுடன்
அம்மா.