– வினுசாகினி ராஜராஜன் –
கூண்டுக்குள் சிக்கிய பறவைகள் நாம். சமுதாயத்தின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வாழும் நாம், எம் ஆசைகளையும் விருப்பங்களையும் முன்னிலையில் வைத்திருக்கவேண்டும்.
பாடசாலை, பல்கலைக்கழகம், வேலைத் துறைகள் என்று வாழ்க்கை முழுவதும் எதிர்பார்ப்புகளே! எதிர்பார்ப்புகளிற்குள் சிக்கித் தவிப்பது இளைஞர்கள்தான். முதற்பரிசு, வைத்தியர், நல்ல வேலை, என்று சமுதாயம் வழிவகுத்துள்ள வாழ்க்கையை நோக்கிச் செல்லும் இளைஞர்கள், சந்தோசத்தை இழந்து மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர். அவர்களின் சந்தோசத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கிணற்றுத் தவளைபோல் பெற்றோர்களின் மற்றும் சமுதாயத்தின் எதிர்பார்ப்பைப் பின்பற்றுகின்றனர்.
பாடசாலையில் கற்கும் மாணவர் நூற்றுக்கு நூறு புள்ளிகளைப் பெற வேண்டும். பல்கலைக்கழகத்திற்குச் செல்பவர்கள் மருத்துவப் பாடத்தைத் தேர்வு செய்ய வேண்டும். இதைப்போல் எண்ணுக்கடங்காத எதிர்பார்ப்புகளில் அனலில் இட்ட விளக்குபோல் வேதனையில் வாழ்கின்றனர்.
எம் இலட்சியங்களையும், திறமைகளையும் முதுகெலும்பாக நிறுத்தி, ‘பணம், புகழ், மதிப்பு’ என்ற சிந்தனையை அகற்றி, எம் மனதிற்குப் பிடித்ததைச் செய்து வாழ்வோம். ஆயிரம் கண்கள் எம்மேல் இருந்தாலும், அதைக் கண்டு அஞ்சாமல் துணிவுடன் எம் ஆசைகளை நிறைவேற்றுவோம். மனிதர்கள் அனைவரும் தனித்துவம் வாய்ந்தவர்கள். எம் திறன்களை வளர்த்து, களிப்பான வாழ்க்கையை வாழ்வோம்.
எலிகூடத் தன்னிருப்பை தனிவளையாய் தேடும்,
நீவிரும்பும் பாதை தனை உன் விருப்பின் படியே,
சிந்தித்து தேர்ந்திடுவாய் துணிவு கொண்டே,
வெற்றி உன் பக்கம் மகிழ்ச்சியுடனேயே