Back to Issue - 25

வண்ணம்

February 8, 2024

சரணியா சத்தியன்

வண்ணம் என்ற சொல்லே மிகவும் புத்துணர்ச்சியான சொல் என்று நினைத்ததுண்டு. வண்ணம் என்று நினைத்தாலே மகிழ்ச்சியும், திருப்தியும் உண்டாகும். யாருக்குத்தான் வண்ணங்கள் பிடிக்காது. ஆனால் அதே வண்ணங்கள் என் மனதில் பயத்தை உண்டாக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. இந்த பயம் எப்பொழுது உருவானது தெரியுமா? எனக்கு பெண் குழந்தை பிறந்திருந்த பொழுது.

என்னுடைய குழந்தையை பார்க்க வந்த ஒரு தாதி என்னிடம் உங்கள் ஆண் குழந்தை அழகாக இருக்கிறான், என்றார். நானும் இல்லை, இது பெண் குழந்தை என்று கூறினேன். அவர் உடனே மன்னியுங்கள், blue கலர் ஆடை அணிந்தமையால் ஆண் என்று நினைத்துவிட்டேன் என்றார். முதலில் ஒரு கலர் ஆணையும் பெண்ணையும் வேறுபடுத்தப் போதுமானதா என்று நினைத்து சிரிப்புத்தான் வந்தது. அது கோவிட் காலமாக இல்லாது இருந்திருந்தால், பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் இருந்திருந்தால், நானும் என்னுடைய குழந்தைக்கு pink வண்ண ஆடையைத்தான் வாங்கியிருப்பேன் என்று நினைத்துக் கொண்டேன். Blue & Pink அதுவரைக்கும் என் வாழ்க்கையில் வெறும் நிறங்கள் மட்டும்தான். ஆனால் என் பெண் குழந்தை வளர வளர இந்த நிறங்கள் வெறும் எரிச்சலையும், கோபத்தையும்தான் உண்டாக்குகின்றது.

Blue & pink என்ற வட்டத்துக்குள் கண்ணை மூடி ஓடிக் கொண்டிருக்கும் இந்த சமூகத்திடம் எனக்கு ஒரு கேள்வி. இந்த பிரிவினையை யார் ஆரம்பித்தது? ஏன் உருவானது? அதிலிருக்கும் அர்த்தம் என்ன? யாராவது யோசித்ததுண்டா?

“Why pink for girls, blue for boys?”

தரவுகளின்படி 19ம் நூற்றாண்டின் இடைக்காலம்வரையில் குழந்தைகளுக்கு வெள்ளை ஆடைகள் மட்டுமே அணிவிக்கப்பட்டன. 1918ல்தான் blue, pink போன்ற மென் நிறங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதிலும் blue பெண்களுக்கும் pink ஆண்களுக்குமாக. நம்பமுடியவில்லை அல்லவா? ஏனென்றால் pink ஆழ்ந்த நிறமாக இருப்பதனால் ஆண்களுக்கும், blue அழகான நிறமாகக் கருதப்பட்டமையால் பெண்களுக்கும் என்று பிரிக்கப்பட்டது. எனினும் இது அன்றைய வர்த்தகத்தில் பாதிப்பை ஏற்படுத்தாமையாலும், pink காதலின் நிறம் என்பதாலும் pink பெண்களுக்கும், blue ஆண்களுக்குமென 1940களில் அறிமுகப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் 1960களில் பெண்களின் விடுதலைப் போராட்டத்தின்போது, பெண்கள் pink ஆடைகளை தங்களது வளர்ச்சியையும், வெற்றியையும் மட்டுப்படுதுவதாகக் கூறி வெளியே வீசினார்கள். மறுபடியும் 1980களில் மருத்துவ உலகத்தில் ஏற்பட்ட ஒரே ஒரு மாற்றம் அனைத்தையும் திருப்பிப் போட்டது. பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் பாலினத்தை கருவிலேயே அறிந்து கொள்ளலாம் என்றதின் அறிமுகம்தான் இன்றுவரை இந்த உலகத்தை blue மற்றும் pink மாயையில் வைத்திருக்கின்றது. வர்த்தக உலகம் இதனை தங்களது பெரும் வாய்ப்பாகக் கருதியது. இக்கருத்தை மக்களிடையே பிரபல்யமடையச் செய்து தங்களது விற்பனையைப் பெருக்கிக்கொண்டது. இம்மாற்றத்தை தொடர்ந்து கொண்டாடப்படும் gender revealing party இக்கருத்தை இன்னும் ஆழமாக பதித்துவிட்டது. நாங்களும் வர்த்தக உலகத்தின் அடிமைகளாகிவிட்டோம். 

நீங்கள் நினைக்கலாம் வெறும் நிறங்கள்தானே இதில் என்ன இருக்கிறது என்று. என்னைப்பொருத்தவரையில் ஏன் இருக்க வேண்டும் என்ற கேள்விதான் பெரிதாக இருக்கிறது. 

எதனை வலியுறுத்த இந்த வேறுபாடு? காலம் காலமாக “ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்” என்று தொடங்கி ஆண் பெண் சமத்துவம்வரை தொண்டத்தண்ணி வத்த கத்தி என்ன பிரயோசனம்? வெறும் நிறத்திலேயே ஆணையும் பெண்ணையும் பிரித்து வைத்திருக்கிறோம். அதுவும் எப்போதிருந்து? பிறந்ததிலிருந்து. இது என்ன மாதிரியான மனநிலையை உருவாக்கும் என்று நினைக்கிறீர்கள்?

என்னுடைய நண்பியின் மகளுக்கு நீல நிறம் பிடிக்கும் என்பதால் அவளுடைய பிறந்தநாளிற்கு blue cake செய்தார்கள். அன்று வருகை தந்த 80 வீதமான விருந்தினர்கள் முதலில் கேட்டதே

“Blue ஆ? நீங்கள் girl எல்லோ?”

“Blue cake ஆ? அது boy colour ஆச்சே?” 

ஏன் ஒரு பெண்ணிற்கு நீல நிறம் பிடிக்கக்கூடாதா என்ன? 

என்னுடைய மகள் Spider-Man T-shirt வேணும் என்று சொன்னதற்காக ஒஸ்ரேலியாவில் உள்ள அனைத்துக் கடைகளிலும் தேடிப்பார்த்துவிட்டேன். எங்கையுமே பெண் குழந்தைகளுக்கான பகுதியில் இல்லவே இல்லை. பெண் குழந்தைகளா, princess மட்டும்தான். ஏன் குழந்தைகள் பிரிவில் ஆண் குழந்தைகளுக்கு pink நிற ஆடைகளே இல்லை. பெண் குழந்தைகளுக்கு blue நிற ஆடைகள் குறைவு. ஏன் பெண்களுக்கு blue நிறமோ, spiderman, superman எல்லாம் பிடிக்கக்கூடாதா? அல்லது ஆண்களுக்கு pink நிறமோ, இளவரசிகளோ பிடிக்கக்கூடாதா? உங்கள் குழந்தைகளுக்கு என்ன பிடிக்கவேண்டும் என்பதைக் கூட இந்த வர்த்தக உலகம்தான் தீர்மானிக்க வேண்டுமா? 

ஆனால் வர்த்தகத்தை மட்டுமே குறை சொல்லிவிட முடியாது. அவர்கள் எதை விற்றாலும் வாங்கக்கூடிய சமூகமாக நாங்கள் இருக்கின்றோமே.

இந்த pink and blue வேற்பாட்டினூடாக உங்கள் குழந்தைகளுக்கு எதைக் கற்றுக் கொடுக்கின்றீர்கள் தெரியுமா? 

இந்த உலகத்தில் blue, pink என்று இரண்டு வண்ணங்கள் இருப்பதுபோல, இரண்டே இரண்டு பாலினம்தான் உண்டு. அவ்விரு பாலினங்கள் மட்டுமே இச்சமுகத்தினால் ஏற்றுக்கொள்ளப்படும். ஏனைய பாலினங்கள் அனைத்தும் ஒதுக்கப்படும். நீங்களும் ஒதுக்குங்கள். 

Pink மென்மையானது. பெண் குழந்தைகளே நீங்களும் மென்மையானவர்களாக, பெண்களுக்கென வரையறுக்கப்பட்ட குணங்களுடன் இருக்கவேண்டும். Blue நிறம் பிடித்தாலோ அல்லது ஆண்களுக்கான செயற்பாடுகள் பிடித்தாலோ நீங்கள் tomboy ஆகக் கருதப்படுவீர்களே தவிர தைரியமான பெண்ணாகவோ, வித்தியாசமான சிந்தனைக்கோலமுடையவர்களாகவோ கருதப்படமாட்டீர்கள். 

ஆண் குழந்தைகளே நீங்கள் blue நிறத்தைப் போன்று வலிமையானவர்களாக இருக்க வேண்டும். Pink நிறம் பிடித்தால் girly ஆக இருக்கும். உங்களுக்கு அழுவதற்குக்கூட சுதந்திரம் கிடையாது. என்னைப்பொருத்தவரையில் மனிதர்களின் உணர்வுகளிலேயே மிகச்சிறந்த உணர்வு அழுகை. ஏனோ ஆண்களுக்கு அதற்குக் கொடுத்துவைக்கவில்லை.

ஒரு பெண் குழந்தையை தைரியமாக வளரவிடுவதும் கிடையாது. ஒரு ஆண் குழந்தையை சுதந்திரமாக அழ விடுவதும் கிடையாது. 

Blue, pink இனூடாக பெண் இப்படித்தான், ஆண் இப்படித்தான் என்ற வேறுபாட்டை குழந்தைகளிடம் புகுத்தாதீர்கள். ஒரு முறை இந்த வேறுபாடு அவர்கள் மனதில் பதிந்தால் அதை அழிப்பது அவ்வளவு சுலபமல்ல. இன்றுவரை எமது சமூகம் tomboy, girly என்றுகூறி கேலி கிண்டல் செய்வதை தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. என்னைப்பொருத்தவரையில் அவை தேவையற்ற வார்த்தைகளே. ஒவ்வொரு ஆணுக்குள் இருக்கும் பெண்மையையும், ஒவ்வொரு பெண்ணுக்குள் இருக்கும் ஆண்மையையும் பார்க்கவும், போற்றவும் தவறுகின்றோம். இந்த வேற்றுமைகளைத் தகர்த்தெறிந்து ஒவ்வொரு மனிதனையும், அவனது தனித்துவத்தையும் ஏற்றுக் கொண்டாட எமது குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுப்போம். 

ஒரு சமத்துவமான, stereotypes இல்லாத உலகம் உருவாக்க வேண்டுமென்றால் blue pink நிறங்களை மட்டுமே குழந்தைகளிடம் திணிக்காதீர்கள். வண்ணங்கள் அழகானவை. அவற்றில் எதற்குப் பிரிவினை.