Back to Issue - 25

முரண்பாடுகள்

February 8, 2024

தாமரை மதியழகன்

இரட்டைத் தரம் (double Standard) என்பது எங்களுக்குள் ஊடுருவிப்போன ஒரு விடயம். வாழ்வின் பல கட்டங்களில் எட்டிப்பார்த்துக்கொண்டே இருக்கும்.

ஒரு குழந்தை பிறந்து இரண்டு மாசத்தில் உடம்பு பிரட்டினால் பூரிப்பு. அதுவே கொஞ்சம் பிந்தினால் ஏதோ இழந்துவிட்டதுபோல் உணர்வு. ஒரு உடம்பு பிரட்டலில் ஆரம்பிப்பது அப்படியே தொடரும். அவசரமாக தவழ வேண்டும். தவழ்ந்தவுடன் நடக்க வேண்டும். இரண்டு மாதம் முன்னதாக பல் முளைக்க வேணும். இப்படி எல்லாத்திலயும் பிள்ளை வயசுக்கு மீறின அல்லது சுயமான வளர்ச்சிக்கு முந்தின விடயங்களை அவசர அவசரமாக செய்யும்போது எங்களுக்கு ஒரே புல்லரிப்பு. பிள்ளை ஏதோ மாபெரும் சாதனையை செய்துவிட்டதுபோன்ற ஆனந்தம். இரண்டாம் வகுப்பில் படிக்கும்போது நான்காம் வகுப்பு கணக்கு செய்வதோ இரண்டாம் வகுப்பில் ஐந்தாம் வகுப்பு ஆங்கிலப்புத்தகம் வாசிப்பதோ எல்லாமே எங்களுக்கு சர்வ சாதாரணம்.

படிப்பு மட்டுமல்ல, நீச்சல், காராத்தே, குங்பூ என்று தற்காப்புக்கான கலைகள், சங்கீதம், நடனம் விளையாட்டு என்று எண்ணிலடங்கா விஷயங்கள்.

பிள்ளை வளர்ந்து பதின்ம வயதை அடையும்போது கொஞ்சம் கொஞ்சமாக குழம்பத் தொடங்குகிறோம். இத்தனை நாளும் வீராதி வீரர்களாக சூரர்களாக வளர்ந்த பிள்ளைகள் திடீரென்று ஒன்றும் தெரியாத அப்பாவிகளாக நல்லது கெட்டது தெரியாத அறிவிலிகளாகத் தெரிகிறார்கள். தனியாக பாடசாலைக்கு நடந்தோ, பஸ்ஸிலோ செல்வது, நண்பர்களோடு பொழுதுபோக்குவது, நண்பர்களோடு திரைப்படம் பார்க்கப் போவது, கடைத்தெருவுக்குப் போவது என்று எதற்குமே எங்கள் பிள்ளைகள் தகுதியற்றவர்களாகிறார்கள். அவர்கள் தன்னம்பிக்கை உள்ளவர்களாக பயமற்றவர்களாக வளர வேண்டும் என்று ஊட்டி வளர்க்கிறோம். அதே நேரம் எங்கள் பாதுகாப்பு வளையத்திற்குள்ளேயே இருக்க வேண்டும் என்று கட்டுப்பாடும் போடுகிறோம்.

எதற்கு இந்த இரட்டை தரம்? (Double Standard) மூன்றாம் வகுப்பில் ஐந்தாம் வகுப்பு  பாடம் படித்த பிள்ளை கராத்தேயில் எல்லா பட்டியும் பெற்ற பிள்ளை பொது இடத்தில் பாதுகாப்பாக நடந்துகொள்ளாதா? பொறுப்பாக பாதுகாப்பாக நடக்கும் என்ற நம்பிக்கை ஏன் எங்களுக்கு இல்லாமல் போய்விட்டது? அதுவரை அந்தப் பிள்ளை செய்த சாதனைகளின் அர்த்தம்தான் என்ன?

எங்கள் குழந்தைகள் எல்லோருமே ஒரு குறிக்கோளோடும் இலட்சியதோடுதான் வளர்கிறார்கள். அதைவிட ஒரு சுயவிருப்பத்தோடும் இருக்கிறார்கள். அவர்கள் எண்ணங்கள் எம்முடையதோடு ஒத்துப்போகும்வரை சுபம். ஆனால் ஒத்துவராத இடத்தில் எல்லாவற்றிலும் தன் திறமையை நிரூபித்த ஒரு பிள்ளைக்குத் தன் லட்சியத்தை தேர்தெடுக்கத் தெரியாதென்பதே எங்கள் எண்ணமாக இருக்கிறது. அவர்கள் விபரம் தெரியாதவர்களாகிறார்கள். தங்களது பாடங்களையோ துறையையோ தெரிவுசெய்ய முடியாதவர்களாகிறார்கள்.

வாழ்க்கைக்கு தேவையான அறிவைத் தராத இந்தக் கல்வியை ஒருவருடம் முந்திப் படித்தால் என்ன பிந்திப் படித்தால் என்ன என்று கேட்கத் தோன்றுகிறதோ?

இதற்கு காரணம் அவர்கள் தெரிவுகள் தவறாகிப் போய்விடும் என்ற பயமாக இருக்கலாம். இங்கேயும் “தோல்விதான் வெற்றியின் முதல்படி” என்று தத்துவம் பேசுகிறோம். ஆனால் அவர்கள் வாழ்க்கையில் விழுவதற்கு நாங்கள் விடுவதேயில்லை. தூக்கிவிட நாங்கள் அருகிலிருக்கும்போது அவர்கள் விழுந்து எழுவது நல்லதல்லவா.  நாங்கள் இல்லாதபோது விழுந்தால் யார் தூக்கிவிடுவார்கள் என்று யோசிக்கிறோமில்லையே.

இந்தப்போராட்டத்தில் முட்டிமோதி தட்டுத்தடுமாறி பெற்றோரையும் தம் விருப்புகளையும் தாம் வாழும் சூழலையும் நம் பிள்ளைகள் சமாளித்து வந்தால், அடுத்ததாக நாம் சொல்லாமல் சொல்வது படித்து முடியும்வரை காதல் செய்யாதே. அதற்கு வயது காணாது. படிப்பு விளையாட்டு சங்கீதம் நடனம் எல்லாவற்றிலும் இரண்டு வருடம் முன்னேற்றமாகச் சாதிக்க வேண்டும். மற்றதெல்லாம் மூன்று வருடம்  பிந்தியே செய்ய வேண்டும். இதையும் ஏற்றுப் பல பிள்ளைகள் கருமமே கண்ணாக படித்துப் பட்டம் பெற்று, செய் தொழிலிலும் சிறந்து விளங்குகிறார்கள். எங்களுக்கும் ஒரே பூரிப்பும் பெருமையும். கொஞ்ச நாள் இதே பெருமையில் திளைப்போம். ஆனால் அதையும் அதிக நாட்கள் அனுபவிக்கத் தெரியாது. படித்து முடித்து வேலையில் நிலைபெற்றதும் அடுத்தது திருமணம்தான். எப்போது? யார்? என்ற கேள்விகளால் பிள்ளைகளை துளைத்தெடுப்போம்.

காதல் தானாக அரும்புவது. பருவத்தே பயிர்செய் என்று சும்மவா சொன்னார்கள். எதுவுமே சரியான காலத்தில் நடக்க வேண்டும். அந்த நேரம் வேண்டாம் என்று விட்டு பிறகு எங்கே என்றால்?

பொருத்தமான ஒருவரைப் பார்க்க முடியாமல் போனதும் அதன்பின் நாங்களே யாரென்றாலும் பரவாயிலை கட்டினால் போதும் என்போம்.

எது எப்படியென்றாலும் இந்த நவீன யுகத்திலும் காதல் என்றால் எதிர்ப்புத்தான். இனம், மதம், சாதி, வயது, படிப்பு, தகுதி ஏன்று ஏதோ ஒரு காரணம் சொல்வோம். முடிந்தவரை வாழ்க்கையை நரகமாக்குவோம். ஒரு கட்டத்திற்கு பிறகு எதிர்ப்பிற்கு வலிவு குறைந்ததும் சாதி என்ன இனம் என்ன, மற்ற இனத்தவர்தான் அருமையானவர்கள். குடுமபத்திற்கு ஏற்றவர்கள் என்று நியாயப்படுத்துவோம்.

எதையும் அதன்போக்கிலேயே ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை எங்கே போனது?

திருமணம் முடிந்தால் வேறு விடயங்கள் உருவாகும். ஆணோ பெண்ணோ எங்கள் பிள்ளைகளை இளவரசனாகவோ இளவரசியாகவோதான் வளர்க்கிறோம். எல்லாவற்றிலும் அவர்கள்தான் திறம். படிப்பு, தொழில் செய்காரியம் அனைத்திலும் அவர்களே முதன்மை. இரெண்டாம் இடம் என்பது எங்கள் அகராதியிலேயே இல்லாத வார்த்தை.

வீட்டுப் பொறுப்புகளிலும் பெரும்பாலும் பிள்ளைகளுக்குப் பங்கில்லை. அவர்கள் சாதிக்கப் பிறந்தவர்கள் அல்லவா? வீட்டு வேலை செய்து நேரத்தை வீணாக்கக் கூடாது. அதைவிட ‘பிள்ளைகள் பாவம். அவர்களிடம் வேலை வாங்கக்கூடாது” என்ற ஒரு மென்மை காரணமாக இருக்கலாம். ’என்ர வீட்டில் நாந்தான் எல்லாம் செய்யிறனான்’ என்பதில் பெருமைப்படும் தாய்மாரின் போக்கோ, அம்மா என்றால் எல்லா வேலையும் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பட்டிதனமான எண்ணமோ காரணமாக இருக்கலாம். எது எப்படியோ கடைசியில் பொறுப்புத்தெரியாமல் வளரும் பிள்ளைகள்தான் பின்னால் அனுபவிக்கிறார்கள்.

அந்த இளவரசனும் இளவரசியும் திருமணம் செய்ததும் வீட்டுவேலை செய்ய வேணும், விட்டுக்கொடுக்க வேண்டும். ஒத்துப்போக வேண்டும் பொறுத்துப்போக வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்க்கிறோம். நடக்கக்கூடிய காரியமா?

எங்கள் பிள்ளைகள் அறிவாளிகளாக சாதனயாளர்களாக இருக்கவேண்டும். சங்கீத நாட்டியத் தாரகைகளாக விளங்க வேண்டும். விளையாட்டென்றால் அதிலும் வீரர்களாக விளங்க வேண்டும்.  அதே நேரம் சமையல்கார்களாக வீட்டை பராமரிப்பவர்களாக குழந்தைகள் பெற்று வளர்த்து குடும்பத்தவர்களாக தேவைப்படின் தாதியராக எல்லாமாக இருக்க வேண்டும். முடியுமா இது? எங்களால் முடியுமா? ஒன்றைப் பெற இன்னொன்றை விட்டுக்கொடுக்க வேண்டுமென்பதுதானே யதார்த்தம்.

இது ஒருபுறமிருக்க கலாசாரம் பண்பாடு என்று இன்னொரு கொடி தூக்குவோம். கலாசாரதிற்கு எத்தனையோ கூறுகள் உண்டு. நாமென்னவோ நாம் உடுக்கும் உடையில்தான் அதுவும் பெண்கள் உடையில்தான் கலாசரமே உயிர்வாழ்கிறது என்று நம்புகிறோம். சட்டைக்கும் கால்சட்டைக்கும் இடையில் இடுப்புத்தெரிந்தால் கலாசார சீர்கேடு. அதுவே சேலை கட்டும்போது இடை தெரிந்தால் அல்லது blouseஇல் யன்னல் கதவு இருந்தால் பிரச்சனை இல்லை. நான் வளர்ந்த காலத்தில் சல்வார் கமீஸ் என்பது ஏற்றுக்கொள்ளப்படாத உடை. இன்று அதுவே எங்கள் கலாச்சார  உடையாகிவிட்டது. நாம் பார்த்துக்கொண்டிருக்கையிலேயே, எங்கள் காலத்திலேயே கலாசாரம் மாறிக்கொண்டிருக்கிறது. ஆனாலும் அதைப் புரிந்துகொள்ளாமல் அதைக் காப்பாற்றவேண்டும் என்று கூவுகிறோம்.அதுவும் பெண்களுக்கூடாக நடக்கவேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு. பல ஆண்களுக்கு வேட்டி என்பதே மறந்துவிட்டது. குருத்தாவே கலாசார உடையாகி விட்டது. அது என்றைக்குமே கலாசார சீர்கேடாக பார்க்கப்படுவதில்லை,

எதற்காக எங்களுக்குள் இத்தனை குழப்பங்கள், முரண்பாடுகள்? எங்களுக்கு எது தேவை என்று தெரியாத அறியாமையா? அல்லது ’கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை’ என்ற பேராசையா? இந்தக் கேள்வியை எங்களை நாங்களே கேட்டுப்பார்த்தால், சந்தோசமான நிறைவான வாழ்க்கைக்காகத்தான் இத்தனையும் என்று சொல்வோம். இது நாங்கள் ஆணித்தரமாக நம்பும் பதில்தான். ஆனால் இத்தனை முரண்பாடுகளுக்குள் சிக்கித் தவித்து வெளிவரும்போது அந்த சந்தோசம் உண்மையாகவே அங்கே இருக்குமா?