Back to Issue - 23

மலரின் ஓவியம்

March 16, 2023

-மோஷிகா-

மலரின் ஆசிரியர், சிறார்களிடம் அவர்களின் குடும்பத்தாரை வரையச் சொல்லிக் கேட்டிருந்தார். ஆனால் ஏனோ தெரியவில்லை, மலரால் மட்டும் அவளையும் அவளது பெற்றோரையும் வரைய முடியவில்லை. இருப்பினும் மேசையில் குவிந்திருந்த வண்ணங்களைக் கண்டதும் அவளுக்கும் வரைய ஆசையாக இருந்தது. ஆகையால் அவளுக்குப் பிடித்த மிருகமான புலியை வரைந்திருந்தாள்.

ஆனாலூம் ஏன் அவளால் அம்மா அப்பாவை வரையமுடியவில்லை எனும் கேள்வி அவளை உறுத்திக்கொண்டே இருந்தது.

இப்படி யோசித்துக்கொண்டே வீடு திரும்பிய மலருக்கு வீட்டில் இருந்து உறுமும் அப்பாவின் குரலும் புலம்பிக்கொண்டிருக்கும் அம்மாவின் சத்தமும் கேட்டது. கலவரத்துக்கு நடுவே கதவைத் திறந்து உள்ளே நுழைந்த மலருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. 

‘பளார்’ எனும் சத்தம் வீட்டில் மயான அமைதியை உருவாக்கியது. கன்னத்தைப் பிடித்தவாறு வீழ்ந்திருந்த கமலாவையும் கைகளை இறுக்கியவாறு நின்ற சிவாவையும் மலர் தன் கூர்ந்த  கண்களால் பார்த்துக்கொண்டிருந்தாள். பள்ளியில் வரைந்த ஓவியத்தை அப்பா அம்மாவிடம் காட்டவேண்டும் என்று ஆசையாக ஓடி வந்த மலருக்கு இப்போது தடுமாற்றமாக இருந்தது. தயக்கத்துடன் தந்தையிடம் நெருங்கினாள். சிவாவோ இவளை அலட்சியம் செய்தவாறே முகத்தை மறுபக்கம் திருப்பினான். கோபத்தில் தன் கைகளை இறுக்கியவாறு அவ்விடத்தை விட்டு நகர்ந்தான்.

“அம்மா?” என்று தாயின் கன்னத்தைப் பிடித்தவாறு மலர் தன் மெல்லிய குரலால் அழைத்தாள்.

 கமலா தன் மகளை இறுக்கி அணைத்தவாறு விம்மி விம்மி அழுதாள். சிவா தொலைக்காட்சியைப் பார்ப்பதுபோல் பாவனை செய்தபடி கோபத்தோடு கதிரையில் உட்கார்ந்திருந்தான்.

“மலர், மலர், இங்க வா.” என்று சிவா கத்தினான். ஆனால் தன் சிறிய கைகளால் அம்மாவின் சட்டையை இறுக்கிப் பிடித்த மலருக்கு கமலாவைப் பிரிய மனம் இல்லை.

“மலர் வா” மீண்டும் சிவா அழைத்தான்.

 மறுபடியும் அழைத்தும் மலர் வராததால் சிவா கோபத்தில் எழும்பி வந்தான்.

“நம்மிட தேவைக்காக உண்ட நகையை தராமல், வேற எவனுக்காக அந்த நகையை வைச்சுருக்க?” என்று மனைவியிடம் கத்தியவாறு குழந்தையைத் தூக்கினான்.

“என்ன பேசிக்கொண்டிருக்குறீங்க? உங்கட  தங்கைச்சிக்கு  கார் வாங்க வேணும் எண்டதுக்காக எண்ட அம்மா எனக்காகக் குடுத்த நகையை விக்கவேணுமா? அந்த நகையைப் போய் உங்கட தங்கைச்சிட்ட கேக்கவேண்டியதுதானே?”

“வாய மூடடி”, சிவா உறுமினான்.

“இப்படிக் கேட்டா, கட்டின பொண்டாட்டி எண்டுகூடப் பாக்காம என்னப் போட்டு அடிச்சு அடக்க வெளிக்கிடுறது. அங்க உங்கட தங்கச்சியின்ற புருசனப் போய்ப் பாருங்க. பொண்டாட்டிய எப்படி வெச்சிருக்கிறார் எண்டு.”

இப்படிப் புலம்பிக்கொண்டே கமலா சமையலறைக்குள் போனாள். இரவு உணவைச் செய்யத் தொடங்கினாள்.

சிவா, மலரைப் பார்த்துக் கேட்கத் தொடங்கினான், “உண்ட அம்மா கொண்டுவந்த நகை சும்மாதானே கிடக்கு. மாமிண்ட வீட்ட சரியான கஷ்டமாம். தேசிகாவும் தேவனும் ஸ்கூலுக்கு நடந்து போறதாம். பாவம்தானே?”

உடனே மலர் “அப்பா, நானும் ஸ்கூலுக்கு நடந்துதான் போறன்” என்றாள்.

தன் மச்சான் மச்சாளைப் பற்றி யோசிக்கும் அப்பா தன்னைப் பற்றிக் கவலைப்படவில்லை என்பதை யதார்த்தமாக ஏற்றுக்கொள்ளும் மலர் ஒரு பக்கம்; மகளிடமிருந்து ஆறுதலைத் தேடும் சிவா மறு பக்கம்.

சிவா பெருமூச்சு விட்டான்.  “உனக்கு இது இப்ப விளங்காதம்மா” என்றான்.

கமலா தொடர்ந்து சமையலறையிலிருந்து புலம்பிக்கொண்டிருந்தாள். சிவாவின் விளக்கம் கேட்டதும் சமையலறையிலிருந்து ஓடி வந்து, “மலர், அந்த நகை உனக்கு மட்டுந்தான்!” என்று சொன்னாள்.

“என்னடி, குழந்தைய உன்ற பக்கம் இழுக்கப் பாக்கிறியா?” சிவா கையை ஓங்கினான்.

கண்ணீர் வடிந்த முகத்துடன் சிவாவின் கைகளைக் கண்டு அசைந்தாள்.

“என்ன? நான் இந்த அடியைப் பாத்துப் பயப்பிடுவன் எண்டு நினைச்சீங்களோ? கட்டின காலத்தில இருந்து இத மட்டுந்தானே பாத்துக்கொண்டிருக்கிறன். இது ஒண்டும் எனக்குப் புதுசு இல்ல”

சிவா கமலாவை முறைத்தவாறு, “நாளைக்கு நகையை எடுத்து வை. கடைக்குப் போய் அதை விக்கிறம். அவ்வளவுதான்.” என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டுப் போனான். கமலா மீண்டும் மலரிடம் அழுது புலம்பத் தொடங்கினாள்.

யாரும் பார்க்காத மலரின் ஓவியம் மட்டும் காற்றில் படபடத்துக்கொண்டிருந்தது