– அபிதாரணி சந்திரன் –
நாம் வாழும் சமுதாயம் மிக விரைவாக வளர்ந்து வருகிறது. நவீனமயமாக்கத்தினால் மருத்துவம், விஞ்ஞானம், அன்றாட வாழ்க்கைமுறைகள் போன்றவை மாறிக்கொண்டு வருகின்றன. இப்பட்டியலில் குழந்தை வளர்ப்பும் இருக்கிறது. குழந்தை வளர்ப்பு ஒரு மனிதனுடைய வாழ்வில் மிக மிக முக்கியமான விடயமாகும். ஒரு மனிதனது ஒழுக்கம், பண்பாடு, பழக்கவழக்கங்கள் அனைத்தும் தனது பெற்றோர்களது வளர்ப்பிலிருந்து தெரிகிறது. எனவே பிள்ளை வளர்ப்பு காலத்தின் வளர்ச்சியால் எப்படி மாறியுள்ளது என்பதைப் பார்ப்போம்.
கடந்த காலம்
என்னைப்போன்ற இன்றைய இளைஞர்கள் பிறந்து, வளர்ந்து வந்த காலகட்டத்தில் பிற்போக்குத்தனமான சிந்தனையோட்டங்கள் முற்போக்குத்தனமான சிந்தனையோட்டங்களுடன் பின்னிப்பிணைந்து இருந்தன. தமிழ் சமுதாயத்திலும் மேற்கத்தியச் சமுதாயத்திலும் வெவ்வேறு கலாச்சார விழுமியங்களுக்குள் சூழ்ந்திருந்த நாம், பல இன்னல்களைக் கடந்து வந்தோம். உதாரணத்திற்குப் பள்ளிக்கூடங்களில் மனநல ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. மன அழுத்தம், கவலை, சுய மரியாதை, தன்னம்பிக்கை போன்ற விடயங்களைப் பாடசாலைகளில் கற்றுக்கொடுத்தார்கள். ஆனால் பல வீடுகளில் இவ்விடயங்களைப் பெற்றோர்கள் பெரிதுபடுத்தவில்லை. “அம்மா எனக்கு stressed ஆ இருக்கு” என்று கூறினால் அவர்களிடம் இருந்து வரும் பதில், “இந்த வயசுல என்ன stress வேண்டிக் கிடக்கு? படிக்கிற உங்களுக்கு என்ன stress?”. இதுபோல் பிரச்சனைகளைப் பெரிதுபடுத்தாமல் குறைத்து மதிப்பிடுவதால் பெரிய பெரிய பிரச்சனைகளை காலப்போக்கில் இளைஞர்கள் நாம் சந்தித்துக் கொள்கிறோம். அண்மையில் “நானே வருவேன்” திரைப்படத்தைப் பார்த்திருந்தேன். அதில் ஒரு பிள்ளை மனரீதியான பிரச்சினைக்கு ஆளாகியிருந்தது. இந்த விடயம் அவளது அப்பாவிற்குத் தெரியவந்ததும், அவர், “உனது பிரச்சனையை யாரிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறாய்?” என்று கேட்டார். அந்தக் குழந்தை “ஒரு மனநல மருத்துவரைக் காணவேண்டும்” என்று கூறியதும் அந்த அப்பா அதற்கு உடனேயே ஒத்துக்கொண்டு கூட்டிக்கொண்டும் செல்கிறார். எனக்கு முற்றிலும் ஆச்சரியம். நானோ, எனது நண்பர்களோ அந்த இடத்திலிருந்தால், “ஏன், எங்களோடு பகிர்ந்து கொள்ள மாட்டியா? விசர்க் கதை கதைக்காத, மனநல மருத்துவரிடம் போனால் ஆக்கள் உனக்குப் பைத்தியம் பிடிச்சிட்டு என்று சொல்லுவினம் எல்லா?,” என்ற கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும்.
இப்படிப்பட்ட பிரச்சனைகளை எதிர்நோக்கினாலும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி பெரிதும் இருக்காததால் எமது வளர்ப்பு சிறப்பாக இருந்தது. உணவு ஊட்டும் பொழுது அம்மா கதைகள் கூறினார், தூங்கும்போது அப்பா முதுகில் தட்டி தாலாட்டு பாடினார். சகோதரர்களுடன் சேர்ந்து வெளியில் சென்று விளையாடினோம். இப்படி சந்தோசத்துடன் வளர்ந்தோம். ஆனால் நிகழ்காலத்தில்?
நிகழ்காலம்
நமது வாழ்க்கை மிக விரைவாகப் பயணித்துக்கொண்டு இருக்கிறது. உணவு ஊட்டுவதுமுதல், தூங்கும்வரை பெரும்பாலான இக்காலத்துப் பெற்றோர்கள் தமது குழந்தைகளது கைகளில் தொலைப்பேசிகளைக் கொடுத்துவிடுவார்கள். குழந்தைகள் அழ ஆரம்பித்தால் தொலைபேசியைக் காட்டி அவர்களைச் சாந்தப்படுத்துவார்கள். குழந்தையும் உடனே அழுகையை நிறுத்திவிடும். பெற்றோர் தங்களது பளுக்களைச் சுலபமாக்குவதற்கு தம்மை அறியாமலேயே தமது குழந்தைகளை பெரும் ஆபத்தில் தள்ளுகிறார்கள். வெளியே நண்பர்களுடன் ஓடி விளையாடிய காலங்கள் கழிந்து தொழில்நுட்ப சாதனங்களில் விளையாட்டுகளைச் சிறுவர்கள் விளையாடுகிறார்கள். சிறு வயதிலேயே தொழில்நுட்ப சாதனங்களுக்கு அடிமையாகின்றனர். இப்பழக்கம் எதிர்காலத்தில் இன்னும் அதிகமாகிவிடுமோ என்ற பயத்தில் பலர் இருக்கிறார்கள்.
அவர்களில் நானும் ஒருத்தி.
எதிர்காலம்
ஆனாலும் எதிர்காலத்தில் பிள்ளை வளர்ப்பு சிறப்பாக இருக்கும் என்று நம்புகிறேன். இளைஞர்களாகிய நாம் பல கஷ்டங்களைச் சந்தித்துள்ளோம். ஆங்கில நாட்டில் இரு கலாச்சாரங்களுக்கு மத்தியில் தடுமாறி, எமது அடையாளத்தைப் பேணிக் காக்க கற்றுக் கொண்டோம். எமது பெற்றோர்களது வளர்ப்பு, எம்மை எத்தகைய இளைஞர்களாக ஆக்கியது என்பதையும் அறிந்து கொண்டோம். “அனுபவமே சிறந்த ஆசான்” என்பதற்கு இணங்க எமது சொந்த அனுபவங்களை வைத்து பிள்ளைகளை வளர்க்க முயல்வோம். உதாரணத்திற்கு, பல பெற்றோர்கள் தமது குழந்தைகளை அடித்து வளர்த்தார்கள். அவர்கள் வளர வளர, அது அவர்களை மிகவும் பாதித்திருக்கும். எனவே அந்தப் பாதிப்பு தங்களது குழந்தைகளுக்கு வந்துவிடக் கூடாது என்பதை மனதில் வைத்துக்கொண்டு தமது வளர்ப்பை மாற்றிக் கொள்வார்கள். பல பெற்றோர்கள் தமது குழந்தைகளை வேறு குழந்தைகளுடன் ஒப்பிடுவார்கள். “குமுதாண்ட மகன் Nossalக்கு எடுபட்டுட்டான், ஆனா நீ எடுபடேல்ல”, “ரவி இப்ப 7000 டொலர் சேர்த்து வச்சுட்டான், ஆனா நீ, இன்னமும் வேலை தேடிக்கொண்டு இருக்கிறாய்” என்று பற்பல ஒப்பீடுகள் நடக்கிறது. இது எம்மைப்போல் இளைஞர்களது தன்னம்பிக்கை, சுய மரியாதை, பெற்றோர்கள் மீதுள்ள பாசத்தைக் கூடக் குறைக்கிறது. “நான் எதற்குமே பிரயோசனம் இல்லை” என்ற எண்ணத்தை வலியுறுத்துகிறது.
எனவே இதை அனுபவித்த இளைஞர்கள் தமது குழந்தைகளுடன் இப்படிக் கதைக்காமல், தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வண்ணம் கதைத்து, பிள்ளைகள் செய்யும் ஒவ்வொரு சின்னச் சின்ன நல்ல காரியத்தையும் பாராட்டுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. எமது கடந்த காலத்தையும் நிகழ் காலத்தில் நடக்கும் நன்மை தீமைகளை அலசி ஆராயவேண்டும். எமது பெற்றோர்கள் விட்ட பிழைகளை நாங்கள் விடமாட்டோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
குழந்தைகளை நன்கு புரிந்து கொண்டு சிறந்த முறையில் வளர்க்க முயற்சிப்போம்.