Back to Issue - 23

பறத்தல் இனிது

February 12, 2023

எங்கள் வீட்டு முன்றிலில் ஆணும் பெண்ணுமாய் இரண்டு குருவிகள் கூடு கட்டும்.  தேடித் தேடி தும்பும் தடிகளும் கொண்டுவந்து கூட்டை அமைக்கும். பெண் குருவி முட்டையிட்டு அடை காக்கும்போது ஆண் உணவு தேடிக்கொண்டுவரும். குஞ்சுகள் பொரித்தபின்னர் இரண்டு குருவிகளுமே அலைந்து திரிந்து உணவு தெரிந்து வந்து குஞ்சுகளுக்குப் பரிந்து ஊட்டும்.  பிறகு பறக்கச் சொல்லிக் கொடுக்கும். பின்னர் ஒரு நாள் குஞ்சுகள் தங்கள் கூட்டை விட்டுப் பறந்தே போய்விடும். திரும்பி வராது. அவர்களுக்கு என்று துணையும் கூடும் குஞ்சுமாய் வேறு ஒரு வாழ்வு.  எந்தச் சலனமும் இல்லாமல் மீண்டும் அடுத்த பருவ காலத்தில் இன்னொரு வடத்தை இழுக்கத் தொடங்குவர் பெற்றோர் குருவிகள்.

குருவிகள் என்று இல்லை எல்லா விலங்குகளும் உரிய காலத்தில் குட்டிகளை விட்டு விலகி தங்கள் வாழ்வை மீண்டும் தொடங்குகின்றன. இங்கு ஆஸ்திரேலியாவிலும் வேறு இன மக்களின் பிள்ளைகள் ஒரு வயதில் தனியாகச் சென்று வாழ்வை அமைத்துக் கொள்வதில் எந்த தயக்கமும் காட்டுவது இல்லை.

ஆனால் எங்கள் இலங்கை, இந்தியத் தமிழ்ச் சமூகத்தில் இந்த மாற்றத்தை எப்படி அணுகுகிறார்கள் என்ற கேள்வியுடன் சில குடும்பங்களை நாம் தொடர்புகொண்டோம்.

முதலில் ஹாம்ப்டனில்  வசிக்கும் சாரதா, சிவநம்பி தம்பதியிடம் பேசினோம். அவர்களின் மகன் தனியாகச் சென்று வேலைத்தளத்திற்கு அருகில் வசிக்கிறான். அதை ஒரு நல்ல விடயம் என்றுதான் அவர்கள் நினைக்கிறார்கள்.  மகன் அருகில் இல்லாதது சில சமயங்களில் கஷ்டமாக இருந்தாலும் அது சரியான முடிவுதான். அவன் இன்னும் பொறுப்புணர்வும் முதிர்ச்சியும் பெற இது உதவும் என்பதுதான் அவர்களின் சிந்தனை.

சாரதா, ஒரு சுவாரசியமான விடயத்தையும் கூறினார். திடீரென்று அவர் மகன் தொலைப்பேசியில் அழைத்து “அம்மா, நீங்கள் செய்யும் வைட் குருமா(white kurma) ரெசிபி சொல்ல முடியுமா? இன்றைக்கு டின்னருக்கு செய்யப்போகிறேன்” என்றும் மற்றொரு நாள் “அரிசி எத்தனை முறை கழுவனும்? நான் இரண்டு முறை கழுவியும் the water is still dirty” என்றும் கேட்டதாகச் சொல்லி, இதெல்லாம் நம்முடன் இருக்கும்பொழுது நாம் எவ்வளவு சொன்னாலும் செய்யமாட்டார்கள், தனியாகச் சென்றதனால்தான் செய்கிறார்கள், குறிப்பாக ஆண் குழந்தைகள் இதை எல்லாம் பயின்றேயாகவேண்டும், எல்லாமே கூகிளில் கிடைக்கும் இக்காலகட்டத்தில் இப்படி நம்மை அவர்கள் கேட்கும்பொழுது சின்னதாக ஒரு மகிழ்ச்சியும்தான் என்றார்.

அடுத்தது பிரெஸ்டனில் வசிக்கும் ஹேமா, அரவிந்தன் குடும்பம்.  கணவன் மனைவி இருவருமே ஒத்த குரலில் சொன்னார்கள். எங்கள் மகனை ஒரு வகையில் நாங்கள் தனியாக இருப்பதற்கு ஊக்கப்படுத்தினோம், ஏனென்றால் அவன் வயதில் நாங்கள் இருவருமே தனியாக வாழத் தொடங்கிவிட்டோம் என்றார்கள்.  மேலும் தங்கள் மகன் அவன் வீட்டை எப்படிச் சுத்தமாக வைத்திருக்கிறான், நன்றாகச் சமைக்கிறான், தங்களையும் விருந்துக்கு அழைக்கிறான் என்பதைப் பெருமையாகவே சொல்லிக் கொண்டார்கள். பிள்ளைகளைத் தனியாகச் செல்ல ஊக்குவிக்கவேண்டும், அது அவர்களை வாழ்க்கையின் அடுத்த நிலைக்குச் செல்வதற்கு ஒரு சிறந்த பயிற்சியாக இருக்கும். பெற்றோருக்கும் அவர்களுக்கான வேறு வாழ்வைத் தொடங்க இது உதவியாக இருக்கும் என்பது அவர்களின் கருத்து. 

சுவாரசியமான விடயம் என்னவென்றால் மகன் அவர்களுடன் வசிக்கும்போது அவனுடைய அறைக்குள் கால் வைக்கவே முடியாது. ஒரே குப்பையாக இருக்கும். உடுப்புகளை எல்லா இடமும் வீசி இருப்பான். துவைத்த துணி எது, துவைக்காதது எது என்றே வித்தியாசம் தெரியாது.  இப்போதோ வீடடைத் துடைத்து கண்ணாடிமாதிரி வைத்திருக்கிறான். எப்படிச் சுத்தம் செய்வதென்று பெற்றோருக்கே அறிவுரை சொல்கிறான். சில நேரங்களில் அவன் தனியாக வேலைக்கும் போய் வருவதோடு வீடடையும் சுத்தப்படுத்துவது மனதிற்குக் கவலையாக இருந்தாலும் தனியாகப் போகாமலிருந்திருந்தால் சுத்தம் என்றால் என்னவென்றே அவனுக்குத் தெரிந்திருக்காது என்று நினைத்து ஆறுதல் அடைகிறார்கள்.

அடுத்தது கீஸ்பாரோவில் வசிக்கும் குமாரி, பரசுராம் குடும்பம்.  கணவரைச் சந்திக்க முடியவில்லை. மனைவியுடன்தான் பேசினோம்.  அவர்களுடைய மகள் தனியாகச் சென்று விட்டார்.  வேலை மற்றும் கல்விக்காக.  மகளுக்குத் தூரப் பயணத்தினால் ஆகும் செலவும் நேரமும் இதனால் மீதமாகிறது.  மேலும் தொலைப்பேசியில் பேசுகிறோம். நினைத்தால் சென்று பார்க்க முடியும்.  அவராலும் வர இயலும்.  பிடித்த உணவைச் சமைத்துக் கொடுக்கமுடியும். தனியாக இருப்பது என்பது பிரிந்து செல்வது இல்லையே. அது அவருடைய வசதிக்கேற்ப செய்துகொண்டது என்பது  குமாரியின் கருத்து.  தன்னுடைய கணவருக்கும் இந்த விடயத்தில் ஒத்த கருத்தே என்றார்.

முன்பெல்லாம் அவள் கண்டபடி காசைச் செலவு செய்வாள்.  உடுப்புகளும் மேக்கப் பொருட்களும் வாங்கியே அவள் சம்பளத்தை முடித்துவிடுவாள். வரவிற்கும் செலவிற்கும் உள்ள உறவே அவளுக்குத் தெரியாது. குமாருக்கும் மகளுக்கும் சண்டை வருவதே இவளின் இந்தப் பழக்கத்தால்தான். ஆனால் இப்போது அவளுடைய சம்பளத்திற்குள் வீட்டு வாடகை, உணவு என்று எல்லாவற்றையும் பார்த்துக்கொள்கிறாள். சிக்கனத்தின் அவசியம் பற்றி எனக்கே சொல்லித் தருகிறாள் என்று குமாரி சிரித்தார்.

மேற்குறிப்பிட்ட மூன்று குடும்பங்களும் இந்தியத் தமிழச் சமூகத்தைச் சேர்ந்தவை. அடுத்ததாக இலங்கையைச் சேர்ந்த இரண்டு பேரைச் சந்தித்தோம். 

தாரா மற்றும் நிரஞ்சன் குடும்பம். மூன்று பிள்ளைகளில் ஒரு மகன் கல்விக்காகவும் ஒரு மகள் தொழிலுக்காகவும் தனியாகச் சென்று விட்டனர். அதனால் திடீரென்று வீடு கொஞ்சம் வெறிச்சோடிப் போய்விட்டது என்கின்றனர். சில நேரங்களில் எல்லோரும் சேர்ந்து இருப்பதற்காகக் கட்டிய பெரிய வீடு கொஞ்சம் வெறுமை உணர்வைத் தருவதைத் தவிர்க்க முடியவில்லைதான். வீட்டிற்கு விருந்தினர் வந்துவிட்டால் யாருடைய அறையைக் கொடுப்பது என்று பிள்ளைகளுக்குள் அடிபிடி சண்டை எல்லாம் நடந்த காலங்கள் இப்போது கனவுபோலத் தோன்றுகிறது. ஆனால் இதுபற்றிக் கவலை கொள்ள எதுவும் இல்லை. வார இறுதியிலோ விடுமுறைக் காலங்களிலோ எல்லோரும் கூடுகிறோம். வார இறுதிகளில் மகன் அல்லது மகள் இருக்கும் இடங்களிற்குச் சென்று வருவது உற்சாகமாக இருக்கிறது. இயல்பான மாற்றம்தானே? மாற்றத்தை ஏற்றுக் கொண்டால் எல்லாம் சுகமாகவே இருக்கும் என்பது அவர்களின் தரப்பு. நிரஞ்சன் தான் இப்போது புல்லாங்குழல் இசைக்க கற்றுக் கொள்வதாகவும் அது தனது நெடுநாள் ஆசை, வீட்டில் யாரும் இல்லாததால் தனக்குப் பயிற்சி செய்ய இடமும் நேரமும் கிடைப்பதாகச் சிறு பையனின் உற்சாகத்தோடு சொன்னார். 

இறுதியாக, எப்பிங்கில் இருக்கும் விஜி மற்றும் அகிலேஷ் தம்பதியிடம் பேசினோம். முதலில் மகள் திருமணம் செய்துபோன அதே நேரத்தில் மகன் தனியாகச் சென்றது தாயின் மனதைப் பெரிதும் பாதித்தது என்று சொன்னார். அகிலேஷிற்கு எந்தப் பாதிப்பும் இல்லை. ஏனென்றால் அவர் நண்பர்களுடன் நடைப் பயணம், இசை விழாக்கள் என்று பிசியாக இருக்கிறார். ஆனால் விஜிக்குத்தான் வீடு திடீரென வெறுமையானதை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. மகள் எப்போதும் விஜியுடன் பேசிக்கொண்டே இருப்பாளாம். அதுவும் மகள்போலன்றி நல்லதொரு நண்பியாகத்தான் பேசுவாள். திருமணம் முடித்து அவள் புது வாழ்வில் இருப்பதால் முன்புபோலப் பேச முடியவில்லை. மகனோ திடீரென முடிவெடுத்து தனியே சென்றுவிட்டார். விஜிக்கு மனதளவில் இந்தப் பிரிவிற்குத் தயாராக நேரம் கிடைக்கவில்லை. மகளின் திருமண வேலைகளில் மும்முரமாக இருந்தேன், ஆனால் இது ஒரு பிரிவு என்று எனது மனதிற்குப் புரியும்போது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது என்று விஜி சொல்லும்போது அவர் கண்கள் கலங்கிவிட்டன.

ஆரம்பத்தில் மனரீதியானப் பாதிப்புக்கு உள்ளான விஜி, மருத்துவ ஆலோசனைக்குப் பிறகு இப்போது வழமைக்குத் திரும்பி இருப்பதாகக் கூறினார். அவர் வேலை பார்க்கும் இடத்திலேயே அவருக்கு மன நல ஆலோசனை பெறுவதற்கு வசதி செய்து கொடுத்திருக்கிறார்கள். தான் இப்போது பயணங்கள் பல செய்வதாகவும் ஓவியம் வரையக் கற்றுக் கொள்வதாகவும் விஜி சொன்னார்

இந்த ஐந்து குடும்பங்கள் மற்றும் வேறு சில குடும்பங்களையும் பார்த்ததில் நாங்கள் அறிந்து கொண்டது இதுதான்.

புலம் பெயர்ந்து இந்த நாட்டிற்கு வந்தவர்கள் போன தலைமுறையிலேயே இந்த மாற்றத்தைச் சந்தித்து விட்டார்கள். அவர்கள் தங்கள் பெற்றோரை விட்டுத் தூரதேசம் வந்து தனியாகவே ஒரு புது இடத்தில் தங்களுக்கான வாழ்வை அமைத்துக்கொண்டவர்கள். அதனுடன் ஒப்பிடும்போது அவர்களின் பிள்ளைகள் தனியாகச் செல்வது தவறாகவோ கவலைக்குரிய விடயமாகவோ தெரியவில்லை. எல்லோரும் ஏகோபித்துச் சொன்னது, எங்கள் பெற்றோரை விட எங்கள் நிலை மேலானது.  நினைத்தவுடன் எங்கள் பிள்ளைகளைப் பார்க்கலாம். ஆனால் எங்கள் பெற்றோருக்கு அது முடியவில்லை என்று.

இங்குப் பல்லின மக்களுடன் வாழும் வாழ்கை அவர்களின் மனதைப் பண்படுத்தியுள்ளது.  பிள்ளைகள் தனியாகச் செல்வதைக் குற்றமாகப் பார்க்காத சமுகத்தில் வாழ்வது சமூக அழுத்தத்திலிருந்து பெரிய விடுதலையைக் கொடுத்து இருக்கிறது.

நாங்கள் சந்தித்த எல்லோருமே இன்னமும் வேலை செய்து கொண்டிருப்பதால் விசனப்படுவதற்கு நேரம் இல்லை. அத்தோடு இங்குப் பிள்ளைகளும் வளரும்போதே ஒரு வகையில் தங்களைப் பெற்றோரிடம் இருந்து தனிமைப்படுத்திக் கொள்வதால் வேறு வீட்டில் சென்று இருப்பது பெரிதாக எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துவது இல்லை.

பெற்றோர் எல்லோருமே தங்கள் கனவுகளை மீளவும் வாழத் தங்களுக்கு நேரம் கிடைத்துள்ளதாகவே உணர்கிறார்கள்.  இக்காலகட்டத்தில், இதுவரை வேலைக்குச் செல்லாத பெண்கள் வேலைக்குச் செல்வதும், வேலையில் இருப்பவர்கள், தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி முன்னேறுவதும் ஒரு ஆரோக்கியமான நகர்வாக உள்ளது. ஒரு படி மேலே போய் தனக்குப் பிடித்தது என்ன என்று புதிதாய்ந்து அதில் கவனம் செலுத்துவது எனப் பலதரப்பட்ட மாற்றங்களையும் காணமுடிகிறது. குறிப்பாகப் பெண்களுக்கு இது ஒரு பெரும் திறப்பு.

பலர், பயணங்களில் ஆர்வமாக இருப்பதும் அவர்கள் தங்கள் கூட்டைவிட்டு(comfort zone) வெளியேற நினைப்பதும் அதன் தொடர்ச்சியாகத் தன் வீடு, குழந்தைகள் என்ற கட்டுகளிலிருந்து சிறிது விடுபட எத்தனிப்பதாகவே தோன்றுகிறது. மேலும் சிலர், வாசிப்பு, ஆன்மிகம், பொதுத் தொண்டு என்று அவர்களுக்குப் பிடித்ததைச் செய்கிறார்கள்.

பறக்கத் தெரிந்தால் வாழ்தல் இனிது.

-சாந்தி சிவகுமார் – கலாதேவி பாலசண்முகன்-