Back to Issue - 23

தாய்மையும் தந்தைமையும்

March 16, 2023

– சரணியா சத்தியன் –

இந்த உலகம் 2023ல் காலடி எடுத்து வைத்திருந்தாலும் நவீனமயமாதல், உலகமயமாதல் மூலம் பல விடயங்களிலும் எமது சமூகம் பரந்த மனப்பான்மையை வளர்த்திருந்தாலும் நம் மக்கள் தாயையும் தந்தையையும் பார்க்கும் கண்ணோட்டம் இன்னும் பழமை வாய்ந்ததாக இருக்கின்றதோ என்று என் மனதில் ஒரு கேள்வி. ஒரு குழந்தையைப் பராமரிப்பதும் பேணி வளர்ப்பதும் எப்பொழுதும் ஒரு அன்னையின் கடமையாக மட்டுமே பார்க்கப்படுகின்றது. ஏன் அது தந்தைக்குக் கடமையில்லையா? ஒரு தந்தை தனது குழந்தையைப் பராமரிப்பதையோ, குழந்தையுடன் நேரம் செலவிடுவதினையோ பாராட்டும் இச்சமூகம், அது ஒரு தாயின் தினசரி வாழ்க்கை என்பதைக் கருத்தில் கொள்வதில்லையே?

ஒரு நாள் எனது குழந்தைக்குத் தொலைக்காட்சியினைப் போட்டுவிட்டு என்னுடைய வேலையின் காரணமாக தொலைபேசியில் மின்னஞ்சல் அனுப்பிய வண்ணம் இருந்தேன். அவ்வழியாக வந்த எனது அன்னை, தொலைபேசியை வைத்துவிட்டுக் குழந்தையைக் கவனிக்குமாறு கூறிச்சென்றார். நானும் அதைப் பெரிய விடயமாக எடுக்காமல் மின்னஞ்சல் அனுப்பியவுடன் தொலைபேசியினை வைத்துவிட்டேன். இவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த எனது பன்னிரண்டு வயதான பெறாமகள் அன்று கேட்ட கேள்வி, இன்று வரை என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. 

“ஏன் சித்தி, சித்தப்பா எப்பவுமே தொலைபேசியுடன்தான் குழந்தையைப் பார்த்துக் கொள்வார், அம்மம்மா ஒருநாளும் சித்தப்பாவிடம் இப்படிக் கூறியது இல்லை. ஆனால் நீங்கள் தொலைபேசி பயன்படுத்தினால் மட்டும் ஏன் அம்மம்மா உங்களைத் திட்டுகிறார்?” 

இன்றுவரை இக்கேள்விக்கு என்னிடம் பதிலில்லை. ஒரு தந்தை தொலைபேசியுடன் தனது குழந்தையைக் கவனித்துக் கொண்டால், அவரை ஒரு நல்ல அப்பாவாகப் பார்க்கும் இச்சமூகம், அதையே அம்மா செய்தால் குழந்தையை அம்மா கவனிக்கவில்லை என்று கோபம் கொள்கிறதே ஏன்? 

அதேபோல் எனது நண்பி என்னிடம் பகிர்ந்து கொண்ட விடயம், அவரது மகனுடைய பாடசாலை ஒன்றுகூடலில் ஆசிரியர் ஒருவர் அன்று வேலைக்கு விடுமுறை எடுத்துக்கொண்டு வருகை தந்த தந்தையரைப் பாராட்டி நன்றி கூறினாராம். எனது நண்பி “ஏன், நானும்தான் எனது வேலையிலிருந்து விடுமுறை எடுத்துக்கொண்டு வந்து பங்குபற்றினேன், ஆனால் அந்த ஆசிரியர் என்னைப்போன்று அன்னையரைப் பாராட்டவில்லையே?” என்று நாள் முழுவதும் அங்கலாய்த்தாள். 

இது மட்டுமா? ஒரு தாய் குழந்தை பிறப்பிற்குப் பின்னர் மீண்டும் வேலைக்கோ அல்லது வெளியிடங்களுக்கோ சென்றுவிட்டு வீட்டிற்குத் தாமதமாகத் திரும்பிவந்தால் எல்லோரும் அவரிடம் “குழந்தையை யார் பார்த்துக் கொள்கிறார்கள்?” என்று இலகுவில் கேட்டு விடுகின்றனர். ஆனால் யாருக்கும் அப்பாக்களிடம் இதே கேள்வியைக் கேட்கத் தோன்றுவதேயில்லை. 

“நூலைப்போல் சேலை, தாயைப்போல் பிள்ளை” 

“நல்லவராவதும், தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே” 

இதுபோன்ற வரிகளினைக் கேட்கும்பொழுது சிரிக்கத்தான் தோன்றுகின்றது. ஒரு குழந்தையின் குணவியல்புகள் எப்பொழுதும் அன்னையரைக்கொண்டே தீர்மானிக்கப்படுவது எவ்வளவு அபத்தமான விடயம். இதுபோல் எமது சமூகம் எப்பொழுதும் அன்னையரைக் குற்றவுணர்ச்சிக்குள்ளும் தந்தையரைப் பாராட்டு மழையிலுமே வைத்திருக்கின்றது.

ஏன், உங்களில் எத்தனை பேர் நமது தமிழ் நிகழ்ச்சிகளில் தந்தையர் தமது பிள்ளைகளைக் கவனிப்பதையும் உணவு ஊட்டுவதையும் பார்த்திருக்கிறீர்கள்? பொதுவாகவே வெளியிடங்களானால் பிள்ளைகள் எப்பொழுதுமே அன்னையரின் பொறுப்புதான். எங்காவது அத்தி பூத்தாற்போல் தந்தையர் சில சமயங்களில் தமது பிள்ளைகளைக் கவனிப்பதுண்டு. ஆனால் அதற்கே நாம் எல்லோரும் அவர்கள் ஏதோ அருஞ்சாதனையைப் படைத்துவிட்டதுபோன்று புகழாரம் சூட்டிவிடுகின்றோம். இப்படி ஒரு நிகழ்ச்சியில் என்னிடம் பலர் வந்து “உங்களுடைய குழந்தை இன்று பயங்கரக் குழப்படி. பாவம் உங்களது கணவர். குழந்தைக்கு உணவூட்டுவதால் அவர் இன்னும் சாப்பிடவில்லை, நீங்கள் குழந்தையைப் பார்த்துக்கொண்டு அவரை சாப்பிட விடுங்கள்” என்றனர். ஒரு விடயம் எனக்குப் புரியவில்லை. நிகழ்ச்சிகளில் மட்டுமல்ல. தினசரி வாழ்க்கையின் பெரும் பகுதியை அன்னையர் குழந்தை பராமரிப்பில்தான் செலவிடுகின்றனர். பெரும்பாலான நேரங்களில் பசியுடன்தான் ஒவ்வொரு அன்னையும் குழந்தைகளுக்கு உணவூட்டுகின்றனர். இவர்களில் ஒருவராவது என்னிடம் கூறியதுபோல் எனது கணவனிடம் “உங்களது மனைவி பாவம்” என்று கூறுவார்களா? நிச்சயமாக இல்லை. நாம் அனைவரும் சுயநினைவின்றியே ஆண்களுக்கு மட்டுமே பசிக்கும் என்ற கருத்தை மனதில் ஆழப் பதித்துவிட்டோம் என்று நினைக்கின்றேன். ஒரு நிகழ்ச்சியில் என் அருகில் உணவருந்திக்கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் இன்னொருவந்து வந்து கேட்கிறார், “உங்கள் குழந்தை உண்ணவில்லையே, ஆனால் நீங்கள் முதலில் சாப்பிடுகிறீர்களே?” என்று. என்ன கேள்வி இது?  எப்பொழுதும் அம்மாவைத் தெய்வமாகப் போற்றும் சமூகம் என்பதால் தெய்வத்திற்குப் பசிக்காது.

என்று கருதுகிறோமோ?  அந்த ஒரு கேள்வி அப்பெண்ணை எவ்வளவு குற்றவுணர்ச்சியில் தவிக்க வைத்திருக்கும்? 

இது நமது சமூகத்தில் மட்டும் இருக்கும் பிரச்சனை அல்ல. பிற இனத்தவரும் அன்னையையும் தந்தையையும் மாறுபட்ட மனநிலையுடன்தான் பார்க்கின்றனர். மனிதம் பேணும், அதிலும் பெண்களுக்குச் சாதகமான பல சட்டங்கள் இருக்கும் இந்த ஒஸ்ரேலியாவிலும் இன்றுவரை இந்தப் பாகுபாடு நிலைத்திருக்கின்றது என்பது மறுக்கமுடியாத உண்மையும்கூட. 

என்னுடைய அலுவலகத்தில் சக பெண் ஊழியர் தன்னுடைய மகப்பேறு மருத்துவரிடம் செல்வதற்காக விடுமுறை கோரியபோது எங்களுடைய மேலாளர் அவரிடம் “கடந்த இரண்டு மாதமாக மருத்துவப் பரிசோதனைக்கு என்று அதிக நாட்கள் விடுமுறை எடுத்துள்ளீர்கள். இப்படி விடுமுறைகள் எடுப்பதைக் குறைத்துக் கொள்ளுங்கள்” என்று கண்டித்துள்ளார். அதே மேலாளர் என்னுடைய சக ஆண் ஊழியர், கர்ப்பமாக இருக்கும் தனது மனைவியின் மருத்துவப் பரிசோதனைக்காக விடுமுறை கோரியபோது, “Great, turning into a good dad mate” என்கிறார். 

பல நாடுகளிலும் நேர்முகத்தேர்வுகளின்போது பெண்களிடம்,

 “உங்களுக்கு எத்தனை குழந்தைகள்?”

“குழந்தைகளுடைய வயது என்ன?”

“குழந்தைகளை யார் பராமரிக்கின்றனர்?” 

“குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டா?” 

போன்ற தனிப்பட்டக் கேள்விகளைக் கேட்பது சட்டப்படி குற்றம். ஆனால் இன்றுவரை ஒஸ்ரேலியாவிலுங்கூட நான் உட்படப் பல பெண்கள் இக்கேள்விகளை எதிர்கொண்டவண்ணம் இருக்கிறோம். இங்குப் பலருக்கும் இந்தக் கேள்விகள் சட்டரீதியாகத் தவறானவை என்று தெரிவதுமில்லை. பல பெண்களுக்கும் இக்கேள்விகளுக்குப் பதில் அளிக்கவேண்டிய அவசியமில்லை என்பதும் புரியவுமில்லை. இவ்வாறான தனிப்பட்ட கேள்விகள் எந்த ஒரு நேர்முகத் தேர்விலும் எந்த ஒரு அப்பாக்களிடமும் கேட்கப்படுவதில்லையே? ஏன்? இதற்காக ஒட்டுமொத்தமாக ஒஸ்ரேலிய வணிக நிறுவனங்கள் அன்னையருக்கு எதிரானவை என்று கூறிவிடமுடியாது. குழந்தைகளின் உடல் நலக்குறைவின்போது விடுமுறை எடுத்துக்கொள்ளும் வசதி அன்னையருக்கு இருப்பதுபோல் தந்தையருக்கு இருப்பதில்லை.  

இங்குள்ள பல குழந்தைகள் காப்பகத்தில் இருக்கும் ஒரு பெரிய பிரச்சனையும் இதுதான். சில குழந்தைகளின் முதல் தொடர்பாகத் தந்தையரின் பெயரைத்தான் குறிப்பிட்டிருப்பர். ஆனாலும் அவசரக் காலங்களில் அவர்கள் அன்னையைத்தான் தொடர்பு கொள்வார்கள். காரணம் அவர்தானே அக்குழந்தையின் அம்மா.

குழந்தைகளுக்கு உடை மாற்றிவிடுவது, தலை சீவிவிடுவது, அவர்களுடன் விளையாடுவது, பூங்காவிற்கு அழைத்துச் செல்வது எல்லாம் மிகவும் அடிப்படையான விடயங்கள். இவற்றை செய்யும் தந்தையரை ஒரு சுப்பர் ஹீரோபோல எமது சமூகம்

பார்ப்பது ஏன்? ஒரு குழந்தைக்கு அன்னை எவ்வளவு முக்கியமோ தந்தையும் அவ்வளவு முக்கியம். ஒரு தாய் தனது குழந்தைக்குச் செய்யும் அனைத்து சேவைகளையும் தந்தையும் செய்யலாம், செய்ய வேண்டும். அது அவர்களது கடமை. 

பெண்கள் ஆண்களைவிடச் சகிப்புத்தன்மையும் பொறுமையும் உடையவர்கள். ஒரு தாய்க்கும் குழந்தைக்குமான உறவு ஆழமானதாகவும் உணர்ச்சிப்பூர்வமானதாகவும் இருக்கும் என்பது உண்மை. ஆனால் அதற்காக அன்னையரின் செயல்களைச் சாதாரணமாகக் கடந்துபோவதும் அன்னையர் எப்பொழுதும் சரியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் தந்தையரின் சாதாரணச் செயல்களைக்கூடத் தூக்கிப்பிடிப்பதும் அநாவசியமானது. 

தந்தை குழந்தைகளைப் பராமரிப்பது சாதாரணம் என்ற மனப்பான்மையை வளர்த்துக்கொள்வதும் அன்னையர் அசாதாரணமானவர்கள் என்ற மனப்பான்மையை மாற்றிக்கொள்வதும் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க உதவும். தாயும் தந்தையும் சமம் என்ற மனப்பான்மை ஓங்க ஓங்க, குடும்ப வன்முறைகள் அற்ற, தாய்மையையும் பெண்மையையும் போற்றும் ஒரு சமூகம் உருவாகும் என்று கருதுகின்றேன்.

Men are not babysitting, they are parenting. 

Being an imperfect mom is totally perfect. 

நீங்களும் இன்றிலிருந்து தந்தையரைக் கொஞ்சம் சாதாரணமாகக் கடந்து செல்லப் பழகுங்கள். அன்னையரைக் கொஞ்சம் பாராட்டுங்கள்.