Back to Issue - 25

தலைமுறை இடைவெளிகளைப் புரிந்துகொள்ளுதல்

February 8, 2024

Minding the Gap

இளவேனில் குழுமம்

அண்மையில் பதின்ம வயதைச் சேர்ந்த இரண்டாம் தலைமுறை இளையோரோடு ஒரு கலந்துரையாடல் நிகழ்வை இளவேனில் குழுமம் ஒழுங்கமைத்திருந்தது. மிக இயல்பான, எளிமையான விடயங்கள் அங்கு பேசப்பட்டன. மத்திம வயதுள்ள இளவேனில் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த மூவருடன் பதினெட்டு வயது பூர்த்தியாகிய இளையோர் எட்டுபேர் இணைந்து இக்கலந்துரையாடலைச் செய்தனர். இரண்டு மணி நேரத்துக்குமதிகமாக நீடித்த இந்நிகழ்வினூடாக குறைந்த பட்சம் ஒரு தலைமுறை மற்றைய தலைமுறையோடு முன்முடிபுகள் இன்றிப் பேசலாம் என்பதையும் ஒருவரிடத்திலிருந்து மற்றவர் கற்றுக்கொள்ள ஏராளம் விசயங்கள் இருக்கின்றன என்பதையும் தெரிந்துகொள்ளவாவது முடிந்தது. கலந்துரையாடல் என்றாலும் கேள்விகளையும் பேசப்பட்ட விசயப்பரப்புகளையும் இளவேனில் ஆசிரியர் குழுவே நிர்ணயித்தது என்பதையும் இங்கு குறிப்பிடுவது அவசியமாகிறது.

ஒரு எளிமையான கேள்வியிலிருந்து ஆரம்பிக்கலாமா? நீங்கள் அண்மையில் பார்த்த திரைப்படம் எது?

இக்கேள்விக்குப் பெரும்பான்மையான இளையவர்கள் VCE பரீட்சைக்குத் தயார் செய்துகொண்டிருந்தமையால் திரைப்படங்கள் பார்க்கச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்றார்கள். சில அண்மையில் வெளியான தமிழ்த் திரைப்படங்களும் குறிப்பிடப்பட்டன. ஒரு இளையவர் அண்ணாவின் தூண்டுதலால் ‘அன்பே சிவம்’ பார்த்ததாகச் சொன்னார். அதிலிருந்த அரசியல் சமூகக் கருத்துகளும் பாடல்களும் பிடித்திருந்தன என்றார்.

“பாடல்களாவது கேட்பீர்கள் அல்லவா? உங்களை ஒரு அறைக்குள் அடைத்துவைத்திருக்கிறார்கள். செல்பேசியோ கணினியோ கிடையாது. வேறு பொழுதுபோக்குகள் கிடையாது. ஆனால் ஒரு இசைத்தொகுப்பை மாத்திரம் கேட்கலாம் என்றால் எந்த இசைத்தொகுப்பைக் கேட்பீர்கள்?”

இளையவரின் பதில்கள்:

விண்ணைத் தாண்டி வருவாயா – ஏ. ஆர். ரகுமான்

எதிர் நீச்சல் – அனிருத்

வேலையில்லாத பட்டதாரி – அனிருத்

Painters and Dockers

Jazzy

Riano

அயன் – ஹரிஸ் ஜெயராஜ்

மாஸ்டர் – அனிருத்

வாரணம் ஆயிரம் – ஹரிஸ் ஜெயராஜ்

பெரியவரின் பதில்கள்:

தளபதி – இளையராஜா

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் – ஏ. ஆர். ரகுமான்

காதலன் – ஏ. ஆர். ரகுமான்

உங்கள் குடும்பங்களில் சுற்றுலா செல்லும் இடங்களை யார் தீர்மானிக்கிறார்கள்?

இளையவரின் பதில்கள்:

பெற்றோர்தான் தீர்மானிக்கிறார்கள். நாங்கள் இடங்களைச் சிபாரிசு செய்யலாம். ஆனால் முடிவுகளை எடுப்பது அவர்கள்தான். நாங்கள் தனியாகச் சுற்றுலா செல்வது அரிது. பெற்றோரும் அவர்களது நண்பர்களின் குடும்பத்தினரும் ஒன்றாகச் செல்வர். அவர்கள் தமக்குள் சொந்தக் கதைகளை உரையாடுவார்கள். எமக்கு அலுப்பாகவும் அயர்ச்சியாகவும் இருக்கும். இப்போது நாம் கொஞ்சம் வளர்ந்துவிட்டதால் நாம் நம்பாட்டுக்கு ஏதாவது செய்கிறோம். எங்களுக்கு நீச்சல் என்றால் பிடிக்கும். சுற்றுலாக்களில் என்ன சாப்பிடுவது என்பதையும் பெற்றோரே தீர்மானிக்கிறார்கள். சுற்றுலா முடிந்து வீட்டுக்கு வந்தவுடன் எல்லோருக்கும் வீட்டுச் சாப்பாட்டில் ஆர்வம் வந்துவிடுகிறது.

பெற்றோருக்குத் தம் சொந்த ஊருக்குப் போவதிலும் விருப்பு அதிகம். ஆனாலும் வேறு இடங்களுக்கும் செல்லவேண்டும் என்பதை அவர்களும் புரிந்து வைத்திருக்கிறார்கள். ஒருதடவை சொந்த ஊர் என்றால் அடுத்தமுறை வேறு இடங்களுக்குச் செல்வோம்.  இப்போது பதினெட்டு வயதாகியதால் நண்பர்களோடு பிரேசில் போன்ற நாடுகளுக்குத் தனியே செல்லவேண்டும் என்று எமக்கு ஆர்வம் வந்துவிட்டது. ஆனால் பெற்றோருக்கு எம்மைத் தனியே விடுவதில் தயக்கமும் அச்சமும் உண்டு.

சொந்தக்காரர்களிடம் போவதில் சில சிக்கல்களும் இருக்கின்றன. முக்கியமான சிக்கல் எங்கள்மீதான கவனிப்புத்தான். எல்லோரும் எம்மை வியந்து பார்க்கிறார்கள். நாம் ஒருமுறை ஐரோப்பிய நாட்டிலிருக்கும் உறவுக்காரரைச் சந்திக்கச் சென்றோம். அங்கிருந்தவர்கள் நாம் பேசும் சுத்தத் தமிழைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் பாராட்டினார்கள். இதனால் அங்கிருந்த குழந்தைகள் எம்மீது கோபமும் வெஞ்சினமும் கொண்டு எம்மோடு பேசுவதைத் தவிர்த்துவிட்டன. குழந்தைகளை எதற்காக ஒப்பிடவேண்டும் என்று புரியவில்லை. அம்மா அப்பாவின் சொந்த ஊருக்குச் செல்லும்போதும் இவ்வாறான தொடர்பாடல் சிக்கல்கள் இடம்பெறுவதுண்டு. மொழி, கலாசாரம் என பல வேறுபாடுகள் நமக்கு உண்டு. இவற்றைக்கடந்து உறவு பாராட்ட பல முயற்சிகளைச் செய்யவேண்டியிருக்கிறது.

பெரியவரின் பதில்கள்:

அனேகமான இடங்களை குடும்பத் தேவைகள்தான் தீர்மானிக்கின்றன. திருமணங்கள், வயோதிபர்களைத் தரிசித்தல் போன்ற காரணங்களைத் தவிர்க்கமுடிவதில்லை. ஒரு பெண்ணாக திருமணத்துக்கு முன்னர் தனியாக நண்பர்களுடன் பயணங்களைச் செய்திருக்கிறோம். ஆனால் திருமணமான பின்னர் கணவர் பிள்ளையோடுதான் பயணங்கள் இடம்பெறுகின்றன. தனியாகச் சென்றதேயில்லை. செல்லவேண்டும். ஒருவர் தம் பயணங்களை கணவன் மனைவி இருவரும் சேர்ந்தே தீர்மானிப்பதாகச் சொன்னார். கணவனோ, மனைவியோ அவரவருக்கான தனியான பயணங்களையும் செய்வதாகச் சொன்னார்.

இப்போது இளையோர் பெரியவர்களிடம் ‘உங்கள் குழந்தைகள் தகுந்த வயதை எட்டியதும் தனியாக நண்பர்களுடன் சுற்றுலா செல்ல அனுமதிப்பீர்களா?’ என்று கேட்டனர்.

அதற்குப் பெரியவர்கள் எல்லோருமே அனுமதிப்போம் என்று ஏகோபித்த குரலில் சொன்னார்கள். நான் சிறுவனாக இருக்கும்போது வீட்டின் நிதிச்சூழலும் போர்ச்சூழலும் அதற்கு அனுமதிக்கவில்லை. என் குழந்தைகளுக்கு ஆர்வமிருப்பின் அவர்களுக்குத் தடை போடப்போவதில்லை என்றார் ஒருவர். பெண்ணாக நான் என் நண்பர்களுடன் அப்படிப் பயணித்த காலம் பொன்னானது. அதை நான் நிச்சயம் என் குழந்தையும் அனுபவிக்க வழி செய்வேன்.

அரச பாடசாலைகளுக்கும் தனியார் பாடசாலைகளுக்குமான வேறுபாடுகள் என்ன? எந்தப் பாடசாலைக்குச் செல்லவேண்டும் என்பதைத் தீர்மானிப்பது யார்?

இளையவரின் பதில்கள்:

பெற்றோர்தான் தீர்மானிக்கிறார்கள் என்று அனைவரும் சொன்னார்கள். வந்திருந்த இளையோரில் பெரும்பான்மையினர் அரச பாடசாலைகளில் கல்வி பயின்றவர்கள். ஒரிருவர் தனியார் பாடசாலையைச் சேர்ந்தவர்கள். தாம் படித்தது ஒரே பாடசாலை என்பதால் பாடசாலைகளை ஒப்பிடுவது சிரமம் என்றார்கள். அறிந்தளவில் இவ்விரு பாடசாலை அமைப்புகளிலும் பெரிதாக வேறுபாடுகள் இல்லை என்றனர். எல்லோருமே படிக்கிறோம். பிடித்தால் பல்கலைக்கழகம் செல்கிறோம். நல்ல வேலையைச் செய்கிறோம். இதில் தனியார் பாடசாலைக்கு ஏன் அவ்வளவு பணத்தைக் கொட்டவேண்டும் என்று ஒரு இளையவர் சொன்னார். தனியார் பாடசாலை தெரிவுக்காகத் தயார்படுத்தும் நாட்களில் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆனதாக ஓரிருவர் குறிப்பிட்டனர். அதைவிட இளையவர்களை ஒப்பிட்டுப் பேசி ஒரு toxic சூழலை நாம் உருவாக்குகிறோம் என்றும் குறிப்பிட்டனர்.

பெரியவரின் பதில்கள்:

தனியார் பாடசாலைகளில் புலமைப்பரிசில் அன்றி மொத்தமாகப் பணம் கட்டுவது சிரமம். அதற்கான value of money கிடைக்குமா என்பது சந்தேகமே. ஆனாலும் peer pressure என்றொரு விசயமும் இருக்கிறது. இதுபற்றி விரிவாக நம் சமூகத்தில் உரையாடவேண்டும் என்றார்கள்.

பூப்புனித நீராட்டு விழாக்கள் பற்றிய உங்கள் கருத்து என்ன?

சில ஆண் பிள்ளைகளுக்கு சாமத்திய வீடு, பூப்புனித நீராட்டு விழா, saree ceremony என்றால் என்ன என்று விளங்கவில்லை. பெண்கள் முதற்தடவையாக மாதவிடாயை அடைவதைக் கொண்டாடும் நிகழ்வு என்றதும் புரிந்தது. ஒருத்தர் அதைக்கேட்டதும் கூச்சப்பட்டார். பின்னர் தீவிரமாகப் பதில்கள் வர ஆரம்பித்தன.

இளையவரின் பதில்கள்:

சடங்குகளை ஏற்றுக்கொள்ள முடிகிறது. ஆனால் ஆடம்பரம் தேவையற்றது. இது ஒரு show offதான். என்னை என் அண்ணனைக்கூட பார்க்கவேண்டாம் என்றனர். Bullshit.’

இதனை மாதவிடாய் கண்ட பெண்ணே முடிவெடுத்தல் வேண்டும். அந்தப் பெண் விரும்பினால் செய்யலாம்.’

இதுபற்றி நான் சிந்தித்துப்பார்த்ததே இல்லை.’

கொண்டாடலாம். ஒரு அளவுடன் இருத்தல் வேண்டும். ஹெலிஹப்டரில் பெண்ணைக் கொண்டுசென்ற அவலத்தை யூடியூபில் பார்த்தேன்’

ஆண்களுக்கும் இவ்வகை கொண்டாட்டத்தைச் செய்யலாம். பெண்களுக்கு மட்டும் ஏன் இத்தனை செலவழிக்கிறார்கள்? எமக்கும் உரிமை வேண்டும்.’

இதற்கான பதில் என்னிடம் இல்லை. பலரை அழைத்து ஒரு பொது நிகழ்வாக ஏன் இதனைச் செய்யவேண்டும் என்று விளங்கவில்லை.‘தேவையற்றது. அந்தப் பெண்கள்தான் முடிவு செய்யவேண்டும்’

பெரியவரின் பதில்கள்:

எனக்கு இதில் உடன்பாடில்லை. பெண்கள் முடிவு எடுக்கலாம்தான். ஆனால் அது ஒரு informed decision ஆக இருக்கவேண்டும். பொங்கல் பண்டிகை என்றால் அது சூரியனுக்கும் உழவருக்கும் நன்றி சொல்லும் திருநாள் என்று சொல்கிறோம் அல்லவா? அதுபோலவே சாமத்திய வீடு என்றால் நீ பெரியவளாகிவிட்டாய், உனக்குக் குழந்தை பெற்றுக்கொள்ளும் அருகதை வந்துவிட்டது, நீ திருமணத்துக்குத் தயார் என்பதை அறிவிப்பதற்காகத்தான் இக்கொண்டாட்டம் என்ற காரணத்தை மாதவிடாய் கண்ட பெண்ணிடம் விளக்குதல் அவசியம். அதன்பிறகும் அவர் சம்மதித்து பெற்றோருக்கும் அது சரி என்று தோன்றினால் நாம் என்ன செய்யமுடியும்?’

நான் இதற்கு முற்றிலும் எதிரானவன். நான் ஒரு தொழின்முறை புகைப்படக் கலைஞர். முன்னரெல்லாம் சாமத்திய வீடுகளுக்கும் புகைப்படம் எடுப்பேன். இப்போது கொள்கைரீதியாக முரண்படுவதால் அவற்றைத் தவிர்த்துவிடுகிறேன்.’

‘நான் பதின்மூன்று வயது சிறுமியாக இருக்கும்போது இக்கொண்டாட்டத்திலிருக்கும் fantasy எனக்குப் பிடித்திருந்தது. அதனால் அதனைச் சந்தோசமாக அனுபவித்தேன். ஆனால் இப்போது அறிவு முதிர்ச்சி வந்ததும் இதனை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. என் மகளுக்கு நான் ஒரு போதும் சாமத்திய வீடு செய்ய மாட்டேன்.’

திடீரென்று உங்களுடைய சகோதரர் தான் ஒரு தற்பாலீர்ப்பாளர் (gay or lesbian) என்பதைச் சொல்லி அதனை எப்படிப் பெற்றோருக்குத் தெரிவிப்பது என்று தடுமாறினால் உங்களுடைய ஆதரவு எப்படியிருக்கும்?

இளையவரின் பதில்கள்:

‘இது எல்லாம் சாதாரணமான விசயம். உங்களுடைய உறவைப்பற்றிப் பெற்றோரோடு சொல்லவோ ஆலோசிக்கவோ தேவையில்லை’

உங்களோடு வைத்துக்கொள்ளுங்கள். என்னுடைய பெற்றோர் இதனைப்பற்றிக் கவலைப்படமாட்டார்கள்’

என் பெற்றோர் எதிர்த்தாலும் நான் என் சகோதரருக்குத் துணை நிற்பேன்’

பெற்றோர் சம்மதிப்பார்கள் என்றுதான் நினைக்கிறேன்.’

பெற்றோருக்குக் கடினமாகத்தான் இருக்கும். ஆனால் ஈற்றில் சம்மதிக்கத்தான் வேண்டும்’

இதனை ஏற்றுக்கொள்ள பெற்றோருக்குக் கொஞ்சம் காலமெடுக்கும். தனிப்பட்ட கருத்தைவிட சமூகமும் சுற்றமும் இதனைப்பார்க்கும் என்ற அச்சமே (peer pressure) தான் அதிகமாக இருக்கும்’

பெரியவரின் பதில்கள்:

இதனை ஏற்றுக்கொள்வதில் எனக்கு எவ்விதத் தயக்கமும் இல்லை’

இது கடினமும் சற்றுச் சிக்கலானதும்கூட. Delicate ஆன விசயம். நாம் ஒருவித மன உளைச்சல் வளையத்துள் சிக்கி வெளிவரவேண்டியிருக்கும்’

நான் அழுவேன் என்று நினைக்கிறேன். என் சகோதரிமீது கோபம்கூட வரும். ஆனால் அவளைப் புரிந்துகொண்டு அவளை அவளாகவே ஏற்றுக்கொள்வேன். இமைய மலையைக்கூட ஏறி இறங்கிவிடுவேன். ஆனால் அம்மா அப்பாவிடம் இதனைச் சொல்லவே மாட்டேன். சாத்தியமே இல்லை’

பெற்றோர் முதியோர் இல்லத்துக்குச் செல்வது பற்றிய உங்கள் கருத்து என்ன?

இளையவரின் பதில்கள்:

எம் பெற்றோர் எம்மோடு வாழவே விரும்புகிறோம்’

பெற்றோர்தான் எம்மைக் கஷ்டப்பட்டு வளர்க்கிறார்கள். அவர்களை எப்படி முதியோர் இல்லத்தில் தவிக்க விடுவது? முடியாது’

பலர் நினைக்கிறார்கள் எங்கள் தலைமுறை பெற்றோர்களைக் கைவிடுகிறது என்று. அது ஒரு தவறான எண்ணப்போக்கு. Taboo. நாம் நம் பெற்றோரைக் கனம் பண்ணவே விரும்புகிறோம்’

“நீங்கள் இளையவர்கள். தனியர்கள். இப்போதும் பெற்றோரோடு வாழ்கிறீர்கள். நீங்கள் தனியாக உங்கள் வாழ்க்கையை ஆர்ம்பித்துத் துணையையும் தேடி உங்களுக்கு என்று குடும்பம் ஆனபின்னர் இதே முடிவில் இருக்கமுடியுமா? உங்கள் துணையினது முடிவும் இங்கே முக்கியமல்லவா?”

உண்மைதான். வேண்டுமென்றால் அருகிலேயே வேறோரு வீட்டில் அவர்கள் வாழலாம். ஆனால் முதியோர் இல்லம் வேண்டாம். முதியோர் இல்லத்தில் பெரியவர்கள் சரியாகப் பராமரிக்கப்படுவதில்லை என்று பல செய்திகள் வருகின்றன.’

பெரியவரின் பதில்கள்:

எம் பெற்றோர் இவ்வகை வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டவர்கள் அல்லர். அவர்களை இயலுமானவரை தனிவீட்டிலோ அல்லது எம்மோடு கூடவெ வைத்து வாழவே விரும்புகிறோம். ஆனால் எதிர்காலத்தில் நாம் நம் குழந்தைகளுக்கு இந்தச் சுமையை ஏற்ற விரும்பவில்லை. எமக்கான வாழ்வையும் எதிர்காலத்தையும் நாம் தீர்மானிப்போம். தனிவீடோ, அல்லது வசதிக்கேற்ற முதியோர் இல்லைத்தியோ நாம் சமயத்துக்கேற்ப தீர்மானிப்போம்.

இவற்றையெல்லாம் உரையாடிக்கொண்டிருக்கையிலேயே இரண்டு மணி நேரம் கழிந்துவிட்டது. இரண்டு தலைமுறைகளும் தமக்குள்ள இத்தனை ஆழமாகவும் சுவாரசியமாகவும் இவ்வளவு நேரம் பேசலாம் என்பதே பெரும் மன நிறைவைக் கொடுத்தது. கேள்விகள் எம்மிடம் ஏராளம் இருந்தன. அவற்றைப் பிறிதொரு நாளுக்கு ஒத்திவைத்தோம்.

நிகழ்வில் இறுதியில் rapid fire சுற்று ஒன்றை இடம்பெற்றது.

பிடித்த Clothing Brand

இளையவரின் பதில்கள்:

Champion’, ‘Nike’, ‘Tommy’, ‘Glassons’, ‘brand முக்கியமில்லை. அழகான உடைகளைத் தேடி அணிவேன்’

பெரியவரின் பதில்கள்:

Tommy’, எனக்கு brands என்றாலே கண்ணில் காட்டக்கூடாது. முதலாளித்துவத்தின் ஏமாற்றுவேலை இது.

இஸ்ரேலின் தற்போதைய அதிபர் யார்?

பலருக்கும் தெரிந்திருக்கவில்லை. ஒரேயொரு பெரியவர் நேத்தன்யாகு என்ற பதிலைச் சொன்னார்.

உங்கள் எல்லோரும் வாக்களிக்கும் உரிமை இருந்திருந்தால் Indigenous voice to parliament சர்வச வாக்கெடுப்பில் என்ன செய்திருப்பீர்கள்?

ஒன்பதுபேர் ஆதரித்து வாக்களித்திருப்போம் என்றார்கள். இருவர் இதுபற்றி எதுவுமே தெரியாது என்றார்கள்.

விரும்பி விளையாடும் கேம் எது?

Pokemon, GTA, FIFA, Hollywood Legacy, Puzzle, Mariocart, Stick Cricket, Risk, Ghost, மூவர் தாம் எவ்வித கணினி, கார்ட்ஸ் விளையாட்டுகள் விளையாடுவதில்லை என்றார்கள்.

இவ்வாறான கலந்துரையாடல்களை எதிர்காலத்தில் ஒருங்கிணைத்தால் கலந்துகொள்வீர்களா?

பொதுவாக எல்லோருமே கலந்துகொள்வோம் என்றார்கள். வித்தியாசமான நிகழ்வாக இது அமைந்தது, நிகழ்ச்சியில் மேலும் பல விளையாட்டுகள், களியாட்டங்கள் இடம்பெறும் எனத் தாம் எதிர்பார்த்ததாகச் சொன்னார்கள்.

இரவுணவின்போது மறுபடியும் இளையவர் தமக்குள் கூடி நின்று பேசியதையும் பெரியவர்கள் தம் கதைகளை உரையாடியதையும் கவனிக்க முடிந்தது. ஆனாலும் ஒரு சிலர் முன்வந்து சில விசயங்களைச் சொன்னார். இவ்விதழில் இதே நிகழ்வை தன் பார்வையில் எழுதிய அபிதாரிணி தானாகவே முன் வந்து கட்டுரை வரையப்போவதாகச் சொன்னார்.

இளையோரைப் பெரியோரும் பெரியோரை இளையோரும் புரிந்துகொள்ளுதலும் தலைமுறை இடைவெளிகளை உள்வாங்கி அங்கீகரிப்பதும் இவ்வகை நிகழ்வுகள் மூலம் கொஞ்சமேனும் செய்யலாம் என்ற நம்பிக்கை வருகிறது. இது கூட்டம்போட்டு செய்யும் காரியம் மட்டுமல்ல. நம் குடும்ப ஒன்றுகூடல்களிலும் பிறந்தநாள் களியாட்டங்களிலும் ஏன் இரவுணவு உரையாடல்களிலும்கூட இவ்வகைக் கருத்துகளை நாம் பரிமாற முயற்சி செய்யலாம். எப்போதும் பெரியவர்கள் அறிவுரை சொல்லி இளம் தலைமுறையை வழி நடத்த முயற்சிப்பதையும் இளையவர்கள் பெரியவர்களுக்கு ஒன்றுமே தெரியாது, பூமர்ஸ் என்று எள்ளி நகையாடுவதையும் தாண்டி பரஸ்பரம் அவர்தம் கதைகளைச் செவிமடுத்துக் கேட்பது மிக முக்கியமான விடயமாக நமக்குத் தெரிந்தது.

இவ்வகை முயற்சிகள் நம் புரிதல்களின் இடைவெளியைக் கொஞ்சமேனும் சுருக்கினால்கூட அது பெருவெற்றியல்லவா?