Back to Issue - 25

சில நேரங்களில் சில இடப்பெயர்வுகள்

February 8, 2024

க. மணிவண்ணன்

பதினொரு மாதங்களையும் சில நாட்களையும் ரிலே ஓட்டத்தில் ஒடிக் களைத்த 2015 தன் கையிலிருந்த சிறிய கம்பை அடுத்து ஓடக் காத்திருக்கும் இரண்டாயிரத்து பதினாறிடம் ஒப்படைக்கக் காத்திருக்கும் சில மிச்ச சொச்ச நாட்பொழுதுகள். இன்னும் சில நாட்களுக்குப் பிராஜெக்ட் சைட் ஆபிஸுக்குப் போய் வரவேண்டும். இரண்டு மணி நேரப் பயணம். Hougang MRT யிலிருந்து Circle Line ஏறி Serangoon வந்து Green Line மாறி Bouna Vista MRT ஸ்டேசன் வந்து பின்னர் பிரத்தியேகமாக ஒழுங்கு செய்யப்பட்ட மினி பேருந்துக்காக காத்திருக்க வேண்டும். காத்திருக்க ஆரம்பித்தேன்.

வாழ்க்கை பரபரத்துக்கொண்டிருக்கிறது. வாகனங்கள் இரைந்து கொண்டிருக்கின்றன. நிம்மதி என்ற சீதையை நிர்க்கதியாக தவிக்கவிட்டு மனிதர்கள் ஏதோ ஒரு மாயமானின் பின்னால் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த உழைப்பும் ஓட்டமும்தான் சிறிய சிங்கப்பூர் தேசத்தை உலக அரங்கில் உயர்த்தி வைத்திருக்கிறது.  “சீனர் தமிழர் மலேய மக்கள் உறவினர்போல அன்புடன் நட்புடன் வாழும் சிங்கப்பூர்” என்று சிங்கப்பூர் மக்களின் இன்னுமொரு தேசிய கீதத்தை கே ஜே ஜேசுதாஸ் மனதிற்குள் மணியடித்துக் கொண்டிருந்தார். சிங்கப்பூரில் பேருந்துக்காகக் காத்திருக்கும் இந்த விநாடியில் மனம் கண்டம் விட்டுக் கண்டம் பாய்ந்தது.

பூமிப்பந்தில் தனித்திருக்கும் மிகப்பெரிய ஒரு தீவு அவுஸ்திரேலியா. இந்தக் கண்டம் பற்றிய கனவுகள் சிறுவயதிலிருந்தே எனக்குள் வந்து போயிருக்கின்றன. ஆனாலும் அந்த நாட்டிற்கே புலம்பெயரும் நிலை வருமென்று கனவுகள் கண்டதில்லை. 1998ல் முதுமானி ஆராய்ச்சிக்காக தலைநகர் கன்பெராவில் வந்து இறங்கியபோது winter காலம்.  என்னைப் பல்கலைக்கழகத்தில் வரவேற்ற பெண்மணி ஒருவர் “the girl in the admin building will help you” என்று சொல்ல சில பல நடிகைகளை மனதிற்குள் கற்பனை செய்து சென்ற என்னை ஔவையாரின் வயது மற்றும் பஞ்சுத் தலைமயிருடன் இருந்த அட்மின் கேர்ள் வரவேற்றது முதலாவது ஆச்சரியம். ஒரேயொரு கையொப்பம் வைத்து நிமிர்ந்த என்னைப் பார்த்து “terrific” என்று அவர் திருவாய் மலர்ந்தருளியது அடுத்த ஆச்சரியம். எனக்குத் தேவையான access cards, student ID என்று பலவற்றை நொடிப்பொழுதில் பெற்றுத் தந்தார்.

எதிரே முன்பின் தெரியாதவர்களைக் கண்டாலும் “good day mite”, “how are you” என்று புன்சிரிப்போடு நலம் விசாரிக்கும் அவுஸ்திரேலிய மக்களை இலகுவாகப் பிடித்துப் போனது. ஒன்றுமே இல்லாத சிறிய செயல்களைச் செய்தால் கூட terrific, marvelous, wonderful, brilliant என்று பாராட்டும் தன்மை மதிப்பை மேலும் அதிகரிக்கச் செய்தது. பல்கலைக்கழகம் தவிர்ந்த மாலை வேளைகளில் பனி படர்ந்த கன்பெராவின் ஆளரவமற்ற சாலைகளில் நடக்கும்போது பாலுமகேந்திரா அவர்களின் மூடுபனிக் காட்சிகள் அவ்வப்போது நினைவலைகளை மீட்டிச் சென்றது.

ஒரு இன்ஜினியர் டாக்டராக மாறும் வேளையில் திருமணம்.  தனிமரம் தோப்பானது. கன்பெராவில் வேலை. 2005ம் ஆண்டில்  மிகப்பெரிய சாலைத் திட்டமாகத் தொடங்கப்பட்ட EastLink பிராஜெக்ட் வேலைக்காக மெல்பேர்ண் மாநகருக்கு வந்து சேர்ந்தபோது உலகின் முதல் மூன்று liveable cities என்ற தெரிவுக்குள் பல ஆண்டுகளாக ஒரு இடத்தை மெல்பேர்ண் தக்க வைக்கும் என்பதுவும் எனக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை ராஜா. வாய்ப்பில்லை.

வேலைத்தளங்களில் நெருக்கடிகள் குறைவு. வார இறுதி நாட்களிலோ வேலை நேரம் தவிர்ந்த மற்றைய நேரங்களிலோ குடும்பம் மற்றும் நண்பர்களுக்கான நேரம், இவை போதாதென்று வார இறுதி ஒன்றுகூடல்கள், கலாசார விழாக்கள் என்று அவுஸ்திரேலிய வாழ்க்கை இனிமையாகக் கழிந்து கொண்டிருந்தது.

உலகளவில் ஏற்பட்ட பொருளாதாரத் தாக்கம் அவுஸ்திரேலியாவை முட்டி மோதிய 2012ம் ஆண்டின் பிற்பகுதி. கட்டுமானத் துறையில் வேலையில்லாத் திண்டாட்டம் ஏற்படத்தொடங்கிய காலம். அடுத்த  வருமானவரி ரெய்ட் யாருடைய வீட்டில் பாயும் என்று தமிழ்நாட்டு அடிச்ச பெருமக்கள் அடைந்து கொண்டிருக்கும் கலக்கம்போல,  HR அழைப்பு எப்போது வருமோ என்று தனியார்த்துறை ஊழியர்கள் பலரும் தவித்துக் கொண்டிருந்த காலம். எங்காவது வெளியே சில மாதங்கள் சென்று வரவேண்டும் என்று மூளையின் செல்கள் அலாரம் அடித்தன. நியூசிலாந்து, மத்திய கிழக்கு நாடுகள், சிங்கப்பூர் என்ற மும்முனைத் தெரிவுப் போட்டியில் சிங்கப்பூர் என் தெரிவாகியது.

ஒன்பது, ஏழு, நான்கு வயது நிரம்பிய புதல்வர்களை மனைவியின் பொறுப்பில் விட்டுவிட்டு விமானம் ஏறியபோது அதிகமாக ஆறு மாதங்கள் அல்லது ஓராண்டுக்குள் திரும்பி விடலாம் என்ற எண்ணமே நிறைந்திருந்தது. விமான நிலையத்தில் என்னை வழியனுப்பித் திரும்பிய வழியில் மூத்த மகன் கால்களைக் காருக்குள் கோபமாக உதைத்துக் கொண்டே திரும்பியதாக மனைவி சொன்னார். இரண்டாவது மகனுக்குப் புரிந்தும் புரியாத வயது. கடைக்குட்டி தங்கத்துக்கு தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று தெரிந்திருக்க நியாயமில்லை. எங்கள் உணர்ச்சிகளை நாங்கள் கட்டுப்படுத்தலாம். குழந்தைகளின் உணர்ச்சிகள் ஏதோவொரு வகையில் வெளிப்படவே செய்யும்.

பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறி வேலை தேடும் பட்டதாரி இளையோருக்கும் திருமண பந்தத்தில் இணையாது தனித்து வாழும் மனிதர்களுக்கும் சிங்கப்பூர் வாழ்க்கை சமாளிக்கக் கூடியது என்றே சொல்லலாம். ஆனால் என்னைப் போன்று பல ஆண்டுகள் வேலை அனுபவமும் குடும்பப் பொறுப்பும் கொண்ட ஒருவருக்கு இத்தகைய தொழில் ரீதியான இடப்பெயர்வு அவ்வளவு சௌகரியமானதல்ல. புதிய நாடு, புதிய மக்கள், புதிய காலநிலை, புதிய சூழ்நிலை என்பவற்றைத் தவிர.

வாழ்க்கை பற்றிப் பெரிதான எதிர்பார்ப்புகள் எதுவுமின்றி முதல் வேலையில் காலடி பதிக்கும் இளவயது நண்பர்களுடன் ஒரே வீட்டில் வாழ்வது என்பது இருபாலாருக்கும் ஏற்புடையதல்ல. Chemistry wouldn’t work out. எனவே, தனியாக ஒரு தங்குமிடம் தேடவேண்டும். இரண்டாவது சிக்கல் உணவுப் பிரச்சினை. அவ்வப்போது சிங்கப்பூர் நாட்டிற்கு உல்லாசப் பயணம் வருபவர்கள் சிங்கப்பூரில் இருக்கும் உணவகங்கள் பற்றிச் சிலாகித்துப் பேசலாம். ஆனால் அங்கேயே தொடர்ந்திருந்து குப்பை கொட்டுபவர்களுக்குத்தான் தொடர்ச்சியாகக் கடைகளில் உண்பதால் ஏற்படும் சுகாதாரப் பிரச்சினைகள் பற்றிய தெளிவிருக்கும்.  கண்ணாடிக்குள் தெரியும் கோழிக்கறி பிரட்டலாகட்டும், கிழங்குப் பிரட்டலாகட்டும். ஒரு அங்குல உயரத்திற்கு எண்ணெய் மிதக்கும். மிகவும் பிரபலமாகப் பேசப்படக்கூடிய ஒரு சைவ உணவகத்தில் உழுந்து வடையொன்றை வாங்கிச் சில பல டிசூக்களால் பிழிந்தெடுத்து என் விரல்களுக்கு எண்ணெய்க் காப்பு சாத்திய அனுபவம் ஒரு சிறிய உதாரணம் மட்டுமே. ஆனாலும் fish head curry special தொடக்கம் சுவையான உணவுகளுக்குப் பெயர் பெற்ற இந்திய உணவகங்கள், சைனீஸ் மற்றும் மலே உணவகங்கள், கையேந்தி பவன் போன்று தெருவுக்குத் தெரு சாப்பாட்டுக் கடைகள் என்று வீட்டிலே சமையல் செய்யும் வேலையைக் கணிசமாகக் குறைக்கக்கூடிய வேலையைப் பல உணவகங்கள் செய்து வருகின்றன என்பது நிதர்சனம்.

1998ல் சில மாதங்கள் சிங்கப்பூரில் வேலை செய்திருக்கிறேன். அப்போதெல்லாம் தங்குமிடம், உணவு பற்றிய கவலைகள் இருந்ததில்லை. Yishun MRTக்கு அருகில் அண்ணாவின் குடும்பம். நேரத்திற்கு சமைத்துப் போட அண்ணி. மக்கள் தொகையும் அப்போது குறைவு. MRT (Mass Rapid Transport) தொடருந்தில் ஏறினால் கால்களை நீட்டிப் படுத்துக்கொண்டு செல்லலாம். அப்படி இடநெருக்கடியின்றி இருந்த காலம். பதினைந்து ஆண்டுகளில் எண்ணிப்பார்க்க முடியாத வளர்ச்சி.  பிரயாணங்களில் நின்று போவதற்கு இடம் கிடைத்தாலே அது மிகப்பெரிய சாதனையாகத் தெரிந்தது.

சிங்கப்பூர் என் தெரிவானதற்கு இப்படியான விட்டகுறை தொட்டகுறைகளும் ஒரு காரணம். இன்னுமொரு காரணம் என்னுடன் படித்த இருவர், எனக்கு சீனியராகப் படித்த சிலர், ஜூனியராகப் படித்த பலர் என்று ஒரு நண்பர்கள் குழாம் இருந்தது. நான் கொம்பனியில் சேர்ந்த முதல்நாளே மணியண்ணை வந்திருக்கிறார் என்று என்னைச் சந்தித்து சந்தோஷ முகங்கள் காட்டிய பாசக்கார பயபுள்ளைக பலர்.

ஒருவழியாக வவுனியாவைச் சேர்ந்த ஒரு இளம் குடும்பம் தங்கள் வாடகை வீட்டில் எனக்கு மாஸ்டர் பெட்ரூமை வாடகைக்குத் தந்து தங்க வைத்தார்கள். அவர்களுக்கு ஒரு குழந்தை வரவாக, உதவிக்கு ஒரு பணிப்பெண் என்று நானும் அவர்கள் குடும்பத்துடன் ஒன்றாகினேன். எனக்கான சமையலை நானே செய்து கொண்டாலும் அவ்வப்போது அவர்கள் என்னைத் தங்களுடன் உணவருந்த அழைப்பதால் சிலவேளைகளில் உணவுப் பிரச்சினை சுமூகமாக, சில வேளைகளில் கடைகளிலும் உணவருந்தி அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாகின.

Ceylon workers club, Sentosa island, முஸ்தபா ஷாப்பிங் சென்டர், அவ்வப்போது செண்பகவிநாயகர் உள்ளிட்ட கோயில்கள், ஜில்லா, வீரம், ஐ, சூது கவ்வும், மீகாமன், பாபநாசம், பாகுபலி உள்ளிட்ட கணிசமான திரைப்பட வரிசை,  ஒரு தடவை சிங்கப்பூர், மலேஷியாவை சுற்றிப் பார்க்கக் குடும்பத்தினர் வந்தபோதும் வேறு இரு சந்தர்ப்பங்களிலும் Battucave என்று அழைக்கப்படும் மலேஷியா முருகன் கோயிலுக்குச் சென்று உலகில் உயர்ந்த முருகனை நேரிலும் அங்கங்கே ஓடித் திரிந்த பில்லா அஜித்தை அகக்கண்ணிலும் கண்டவை என்று அனுபவப் பகிர்வுகளும் இங்கே அடக்கம்.

ஆண்டுக்கு மூன்று அல்லது நான்கு தடவைகள் வீட்டுக்கு வந்துபோகும் சந்தர்ப்பம் வாய்த்தது. வீட்டில் இருக்கும்போது மகிழ்ச்சி, ஆரவாரம், நண்பர்கள் சந்திப்பு என்று எல்லாமே கொண்டாட்ட மனநிலைதான். ஆனால் மீண்டும் விமானநிலையத்தில் என்னை வழியனுப்பிவிட்டு குடும்பத்தினர் திரும்பும்போது, பாலர் வகுப்பில் விட்டுவிட்டுக் கையசைத்துச் செல்லும் அப்பாவின் அல்லது அம்மாவின் பின்னால் அழுதுகொண்டே ஓடிச்செல்லும் சிறுவர்கள்போலத் திரும்பவும் வீட்டுக்கு ஓடி விடலாமா என்று எண்ணத் தோன்றும். தோன்றியிருக்கிறது. ஆனாலும் அடக்கு அடக்கு என்று ஆசாபாசங்கள் தாண்டி வந்த கடமையுணர்ச்சி தடுத்திருக்கிறது.

ஒருபுறம் என்னுடைய நிலை இப்படி என்றால், தனியொருவராகப் பிள்ளைகளின் பாடசாலைக்கல்வி, பிரத்தியேக வகுப்புகள், extra-curricular activities, சமையல், வீட்டு வேலைகள், வீடு சுத்தம் செய்தல், வேண்டுதல் வைத்தாலும் வளராத தலைமயிரைப்போலன்றி வேண்டாமலே வளர்ந்து விடுகின்ற புற்களை வெட்டுதல், பிறந்தநாள், திருமண, அரங்கேற்ற நிகழ்வுகள், கலாசார விழாக்கள் etc etc என்று என்னுடைய மனைவி was on full swing.

ஆறு மாதங்கள் ஓராண்டாகி, ஓராண்டு ஈராண்டுகளாகி, ஈராண்டுகள் மூன்று ஆண்டுகளை நெருங்கிவிட்டது. மூன்று ஆண்டுகளாகத் தொலைத்து விட்ட அவுஸ்திரேலிய வாழ்க்கைக்காக மனம் ஏங்க ஆரம்பிக்கிறது. “Any plan for this weekend mate?” என்று வியாழக்கிழமை மதியத்திற்குப் பின்னர் விசாரிக்க ஆரம்பிக்கும் அவுஸ்திரேலிய நாட்டவர்களின் வாழ்க்கையை அனுபவித்து வாழும் எண்ணங்களைத் தேடி மனம் அலை பாயத் தொடங்குகிறது.

என்னிடம் ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்து தற்போது அவுஸ்திரேலிய தேசத்தில் வாழ்ந்து வரும் மூத்த குடிமகன் ஒருவர் ஒருமுறை சொன்னது நினைவுக்கு வருகிறது. திருமணம் முடித்து கைக்குழந்தையுடன் மனைவியை விட்டு சவூதிக்கு சென்றவர் இரு வருடங்களுக்கு பின்னரே விடுமுறை கிடைத்து அவர்களின் முகங்களைப் பார்க்க கிடைத்ததாகச் சொன்னபோது அவசர அவசரமாக Skype, whatsapp, viber போன்ற தொழில்நுட்ப நண்பர்களை மனம் நன்றியோடு நினைத்துக் கொண்டது.

பேருந்து வந்து விட்டது. மாமியார் வீடு என்னும ஈழத்து திரைப்படத்திற்காக ” இந்த ஊருக்கு ஒருநாள் திரும்பி வருவேன் அதுதான் எனக்குத் திருநாள்” என்ற ஜோசப் ராஜேந்திரனின் பாடல், அந்த நாட்களில் பொங்கும் பூம்புனலில் கேட்டது நினைவில் வந்து போகிறது.

பேருந்து நகரத் தொடங்குகிறது.

புதிய ஆண்டு பிறந்து நான்கு மாதங்கள் ஓடிவிட்டன. செண்பகவிநாயகர் ஆலயத்திலிருந்து மனமுருகி வேண்டினேன். “அப்பனே விநாயகா, மீண்டும் குடும்பத்துடன் இணைய வேண்டும். பிள்ளைகள் சிறுவர்களாக இருக்கும்போதே அவர்களின் குறும்புகளை அனுபவித்து மகிழவேண்டும். உனக்குப் பல வேலைகள் இருக்கும். நேரம் இருக்கும்போது என்னையும் கவனித்துக் கொள்”.  சில நாட்களில் மெல்பேர்ணின் பழமை வாய்ந்த geotechnical consultancyயின் அழைப்பு. அடுத்த வந்த சில நாட்களில்

துரிதமாக telephone interview நடந்தது. உடனேயே வேலையில் சேருமாறு அழைப்பு. “காட் கணேஷ், இப்படி அசத்திறியேப்பா”.

மூன்று ஆண்டுகள், இரண்டு மாதங்கள், பதினான்கு நாட்கள், பதினெட்டு மணித்தியாலங்கள், சில பல நிமிடங்கள் மற்றும் வினாடிகளை சிங்கப்பூரில் செலவழித்த பின்னர் 2016ம் ஆண்டின் நடுப்பகுதியில் விமானம் ஏறுகிறேன். குடும்பம், நண்பர்கள், வேலை, மகிழ்ச்சி, அவுஸ்திரேலிய வாழ்க்கை என்று மீண்டும் புதிதாகப் பிறக்கிறேன்.  

“வீடு நோக்கி ஓடி வந்த என்னையே நாடி நிற்குதே அநேக நன்மையே உண்மையே” என்ற TMS குரல் காதுகளில் ரீங்காரம் செய்கிறது.