Back to Issue - 23

சிறுவர்களின் பார்வையில் பொன்னியின் செல்வன் பாத்திரங்கள் 

February 12, 2023

பொன்னியின் செல்வன் நாவல் எழுபது ஆண்டுகளாகப் பல தலைமுறைகளைத் தாண்டி, இன்னமும் கொண்டாடப்படும் நாவலாக இருந்துவருகிறது. ஆரமப்த்தில் தொடராக வெளிவந்து, பின்னர் நாவல், மேடை நாடகம், தொலைக்காட்சித் தொடர் மற்றும் ஒலிப்புத்தகம்  என்று பல்வேறு ஊடக வடிவங்களைப் பெற்று மக்களைச் சென்றடைந்து வருகிறது. நாவலின் பாத்திரங்கள் தனித்துவமான குண இயல்புகளோடு மிக நேர்த்தியாக சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. இதனால் வாசகர்கள் இந்தப் பாத்திரங்களின் இரசிகர்களாக மாறி, யார் பெரியவர் என்று வாதம் செய்யும் அளவுக்கு நாவலோடு ஒன்றிப்போயிருக்கிறார்கள். 

அவுஸ்ரேலியாவின் தமிழ்ப் பிள்ளைகளுக்கு இந்த நாவலைக் கொண்டுபோய்ச் சேர்ப்பது எவ்வாறு? நாம் நேசித்ததைப்போல அவர்கள் இந்தப் பாத்திரங்களை நேசிப்பார்களா என்ற ஐயம் நம்மில் பலருக்கு எழுவதுண்டு. நாம் மிகவும் இரசிக்கும் இந்த நாவலின் மொழிநடை, இன்றைய தலைமுறைக்குப் பரிட்சையமானதல்ல. மொழிபெயர்க்கப்பட்ட பதிப்புகளில் நாவலின் உயிர்ப்பு வலுவிழந்துபோகிறது. இருந்தாலும் கல்கியின் பாத்திரங்களை எங்கள் சிறார்களிடம் அறிமுகப்படுத்துவது இனி அவ்வளவு சிரமமில்லை. பொன்னியின் செல்வன் நாவல் திரைப்படமாக, ஆங்கில உப தலைப்புகளுடன் வெளிவந்திருப்பதால், மூன்று மணிநேரத்தில் நம் சிறார்கள் நாவலின் பாத்திரங்களோடு பரிட்ச்சயமாகி விட்டார்கள்.  அவர்கள் தாம் பார்த்து இரசித்த பாத்திரங்களை நம்மோடு தங்கள் மொழியில் பகிர்ந்து கொள்கிறார்கள்.

ஆதித்த கரிகாலன் –  விதுஜன்

ஆதித்த கரிகாலன் சுந்தரச் சோழனின் மிக மூத்த மகன். ஆதித்த கரிகாலன் அவரின் நண்பன் வந்தியேத்தேவனுடன் இந்தியாவின் பல பகுதிகளை போரிட்டு வென்றான். ஆதித்த கரிகாலன் ஒரு மிகச் சிறந்த போர் வீரன். அவர் பாண்டியர்களோடு போரில்  வென்ற பின் நிற்பாட்டாமல் அடுத்த பகுதியோடு போர் போட்டு வெற்றி பெற்றான். இராஷ்டகூட மற்றும் பல்லவ நாடுகளை வென்றான்.

பதின்ம வயதில் ஆதித்த கரிகாலனின் காதலி, நந்தினி அவரை  விட்டுச்  சென்ற  பின் அவர் கவலையாக இருந்தார். நந்தினியை ஒரு வேறு ஆணோடு கண்டபின் அந்தக் கவலை கோபமாக மாறியது. இந்தக் கோபத்தோடு  ஆதித்த கரிகாலன் போரிற்குச் சென்றான்.

எனக்கு ஆதித்த கரிகாலன் பிடிக்கும் ஏனென்றால் அவர் ஒரு கோபக்காரனாக இருப்பார். இந்த கோபத்தைப் பாவித்துப் படத்தில் போரிற்குப் போய் வென்றுதான் வருவார்.

பூங்குழலி – அரன்

பூங்குழலி ஒரு நல்ல படகோட்டி. மீன் பிடிப்பதிலும் கெட்டிக்காரி. பூங்குழலி வந்தியத்தேவனுக்கும் பொன்னியின் செல்வனுக்கும் உதவி செய்தவர். படத்தின் கடைசியில் வந்தியத்தேவனை ஒரு பெரிய கப்பலில் கடத்திக்கொண்டு போகும்போது அவரைக் காப்பாற்றப் பொன்னியின் செல்வனோடு படகில் சென்றார். பூங்குழலிக்குப் பொன்னியின் செல்வனில் நல்ல ஆசை. 

சிலவிடயங்களில் பூங்குழலி என்னை மாதிரியே இருப்பார். அவரை மாதிரி எனக்கும் தனிமையில் இருந்து யோசிக்க விருப்பம். எனக்கும் கடல் மிகவும் பிடிக்கும்.

குந்தவை

சோழ இளவரசி குந்தவையின் அழகும், அறிவும் ஆளுமையும் இரண்டு சிறுமிகளின் கவனத்தை ஈர்த்திருக்கின்றன. 

– அர்ச்சனா – 

குந்தவை சோழ நாட்டு இளவரசி. மிகவும் அழகானவள்.சிறந்த புத்திசாலி. எல்லோருடனும் பாசமாகவும் அன்பாகவும் பேசுவாள்.

குந்தவை நீண்ட அழகிய கூந்தல், இரண்டு அழகிய வட்டக் கண்கள், மெல்லிய இடை, அழகான சிரிப்பு உடையவள். படத்தில் மிகவும் அழகாக ‘காதோடு சொல்’ பாட்டுக்கு நடனம் ஆடினாள். மிகவும் அழகான நகைகள் போடுவாள். இது எனக்கு மிகவும் விருப்பம். நகைகள் தலையிலும் கழுத்திலும் பள பள என மின்னும்.

குந்தவை தாய், தந்தை சகோதரங்கள் மீது பாசம் மிக்கவள். நாட்டின் மீது பற்று  உடையவள்.

நண்பிகளுடன் கலகலப்பாகப் பழகுவாள். நாட்டை மிகத் திறமையாகப் பாதுகாத்தாள்.

பெரியவர்களுக்கு மிகுந்த மரியாதை கொடுப்பாள். பல வண்ண உடைகள் அணிவாள். 

எனக்குக் குந்தவையை மிகவும் பிடடிக்கும். பல நல்ல விடயங்களைப் படத்தில் கற்றேன். எனக்கு திரிசா மிகவும் ஆசை ஆனால், பாகுபலி படம் தமன்னா குந்தவையாக வந்தால் மிகவும் நல்லது.

– ஷரணி –

குந்தவை என்று கூறும் பொழுதே, தனது அழகாலும் அறிவாலும் சோழ இராய்ச்சியத்தையே வென்ற பெண்மணி என்று தான் நாம் கூறமுடியும். அவரில் பெண்ணாகிய நான், இரசித்த பல விடயங்கள் உண்டு. முதலில் , அவரது நாட்டுப்பற்று. எக்காலத்திலும், எச்சூழலிலும் தன்  நாட்டு மக்களுக்காகவே வாழவேண்டும் என்ற மனப்பாங்கோடு தான் அவர் வாழ்ந்தார்.

இளவரசி என்ற கர்வமோ, தலைக்கனமோ அவருக்கு இருக்கவில்லை. தான் தன்னுடைய நாட்டின் சேவகி என்ற உணர்வுதான் இருந்தது. நந்தினியிலிருந்து பிரிக்கப்பட்ட ஆதித்த கரிகாலன் தன்னையே இழந்த ஒரு நிலையில் இருந்தால் கூட, அண்ணன் என்ற பரிதாபத்தால் அவரையும் நந்தினியையும் தான் பிரித்து வைத்தது பிழை என்று கடைசிவரை குந்தவை மனம்மாறவில்லை. குடும்பவிவரம் அறியாத ஒரு பெண்மணி ராணி ஆவது நாட்டிற்கு அபாயமான ஒரு தவறு என்றே ஒவ்வொரு முறையும் கூறினாள். இந்த விதத்தில், தன் நாட்டின் நலமே எனது தலையாய கடமை என்ற தெரிந்து கொண்ட குந்தவை, என்னைப் பெருமளவில் பாதித்தாள்.


ஆழ்வார்க்கடியன் நம்பி – நிலவன் 

எனக்குப் பிடித்த கதாபாத்திரம், வீரம், புத்தி, நேர்மை, மற்றும் விசுவாசம் ஆகிய நான்கு குணங்களை கொண்டுள்ளவர்; அவர்தான் ஆழ்வார்க்கடியான் நம்பி.
 

முதலாம் பாகம் “புது வெள்ளம்” என்ற அத்தியாயத்தில் வந்தியத்தேவனைச் சந்திக்கும்போது ஆழ்வார்க்கடியான் நம்பி முதற் தடவை தோன்றுகிறார். அவரைச் சோழ நாட்டில் சுற்றித் திரிந்து மற்ற சமயத்தவர்களுடன் விவாதம் செய்யும் வைஷ்ணவராக அறிமுகப்படுத்துகிறார் கதாசிரியர் கல்கி. ஆனாலும், அவரின் உண்மையான எண்ணங்கள் இன்னும் மர்மமாகவே இருக்கின்றன. காட்டில் நடக்கும் ஆபத்துதவிகள் கூட்டத்தை உளவு பார்ப்பது போன்ற பல சமயங்களில் கதையில் தோன்றுகிறார். பின்னர், அவர் மந்திரி அநிருத்த பிரம்மராயர் சேவையில் ஒரு அறிவார்ந்த உளவாளி என்பது தெரியவரும். ஒரு வைஷ்ணவர் வேஷத்தை அணிந்து, மிகவும் தந்திரமாகவும் புத்திசாலித்தனமாகவும் மற்றவர்கள் அறியாமல் ஆழ்வார்க்கடியான் நம்பி  ஒற்றராக வேலை செய்தார். அவர் அறிவுத்திறன் வாய்ந்தவர் என்பதை இது காட்டுகிறது. 

இரண்டாவதாக, ஆழ்வார்க்கடியான் நம்பி நிறைய தைரியம் கொண்டவர். கடம்பூர் அரண்மனையில் நடந்த ரகசியக் கூட்டத்தை உளவு பார்க்கும்போது அவரது  அச்சமின்மை வெளிப்படுகிறது. சோழ வம்சத்தின் நலனுக்காகவும், மக்களின் நலனுக்காகவும் தன் உயிரைத் தியாகம் செய்யத் தயாராக இருந்தார் ஆழ்வார்க்கடியான் நம்பி. 

“இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்

 அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே”

என்ற பாரதியாரின் பாடலுக்கிணங்க, சோழ சாம்ராஜ்யத்திற்கு எதிரான சதியில் பல வீரர்கள், சிற்றரசர்கள் மற்றும் உளவாளிகள் இருந்தபோதிலும், நம்பி தனது பணியில் உறுதியாகவும் வீரமாகவும் இருந்தார். கூடுதலாக, அவர் நேர்மை மற்றும் விசுவாசம் என்ற நல்ல குணங்களைக் கொண்டவர். அவரின் நண்பன் வந்தியத்தேவனை பல சமயங்களில் காப்பாத்தியுள்ளார். ஆழ்வார்க்கடியான் நம்பி நண்பனுக்கும், நாட்டுக்கும், அரசருக்கும்  மிகவும் விசுவாசமாக இருந்தார். சோழ வம்சத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற அவரின் இலட்சியம் நேர்மையானது. 

ஒரு காட்சியூடகமாக பொன்னியின் செல்வன் இன்றைய தலைமுறையையும் சென்றடைந்திருக்கிறது என்பது ஒரு அகநிறைவைத் தருகிறது. தமக்கே உரிய மொழிநடையில் இந்தச் சிறார்கள் தம்மைக் கவர்ந்த பாத்திரங்களைப் பற்றி எழுதியிருப்பது மொழியின் தொடர்ச்சியைப் பற்றியும், இலக்கிய ஈடுபாடு பற்றியும் புதிய நம்பிக்கையை விதைக்கின்றது. 

தொகுப்பு – கேதா