– சாருகா சிவசுதன் –
எனக்குச் சிறு வயதிலிருந்தே எனது பாட்டா பாட்டியுடன் சேர்ந்து வாழும் மிகவும் அருமையான அனுபவத்தைப் பெறக்கூடியதாக இருந்தது. விரைவில் மாறிவரும் எமது நவீன உலகில் இப்படிப்பட்ட ஒரு அரிய அனுபவத்தைப் பெற்றது எனக்குக் கிடைத்த வரம் என்றே கூறுவேன். சமயங்களில் சில தவிர்க்கமுடியாத சவால்களை எதிர்நோக்க வேண்டியிருந்தாலும் அவர்களுடன் சேர்ந்து சென்ற இந்தப் பயணம் மிகவும் அற்புதமானது என்றே கூறுவேன்.
“கூடி வாழ்ந்தால் கோடி நன்மை” என்று எமது முன்னோர்கள் கூறினார்கள். சிறு வயதிலிருந்தே எனது பாட்டா பாட்டி என்னைப் பாடசாலைக்குக் கூட்டிச் சென்று, உணவைச் செய்து தந்து, என் மேல் அன்பைக் கொட்டினார்கள். எனது வகுப்பில் இருக்கும் பிறர் வீட்டுக்குத் தனியே செல்லும் நேரத்திலெல்லாம் நான் ஆனந்தமாகத் துள்ளித் துள்ளி, பாட்டி பாட்டாவுடன் விளையாடினேன். என் பெற்றோரும் அவர்கள் செய்த உதவிகளைப் பற்றி என்னிடம் கூறி மகிழ்ந்தார்கள். எனது வீட்டில் பிள்ளை பராமரிப்பு ஒரு சமயத்தில் கூட பிரச்சனையாக இருக்கவில்லை. அத்தோடு, பெற்றோர் வேலைக்குச் செல்லும்போதும் விட்டு வேலைகளைச் செய்து கை கொடுத்தார்கள்.
வளர வளர எனக்கு வகுப்புகளும் சுமைகளும் அதிகரிக்கவே, அவர்களுடன் செலவழித்த நேரம் மெது மெதுவாகக் குறைந்தது. ஆனாலும் நான் எப்படியாவது நேரத்தை ஒதுக்கி அவர்களுடன் கதைத்துப் பேச முயற்சித்தேன். அவர்களும் எனக்குப் பல புத்திமதிகளைக் கூறி, என்னை வேளை தவறாமல் பார்த்தார்கள்.
வெளிநாட்டிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு வந்தது அவர்களுக்கு ஒரு மிகப் பெரிய மாற்றமாக அமைந்தது என்பதில் எந்த ஐயமும் இல்லை. அது எனக்கு உடனடியாகவே தெரிந்தது. ஆனால் இந்த மாற்றங்கள் எல்லாம் தீமைகள் என்று சொல்ல முடியாது. வயதான காலத்தில் சுகமாக வாழும் வசதிகள், உலகத்தரம் வாய்ந்த இலவச மருத்துவம், உதவுவதற்குக் குடும்பம், கதைப்பதற்குப் பேரப்பிள்ளைகள் எனப் பல நன்மைகள் அவர்களுக்கு இருந்தன.
மறுபக்கத்தில் அவர்கள் சில இன்னல்களையும் கஷ்டங்களையும் எதிர்நோக்குவதை நான் அவதானித்தேன். குளிர் காலம் ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. அது மட்டுமல்லாமல் “தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்” என்பதற்கிணங்க, நவீன உலகில் இருக்கும் கருவிகளைப் பயன்படுத்தி, நவீனப் பழக்கங்களுக்கு ஏற்ப, அவர்களை மாற்றிக்கொள்வது சற்றுக் கடினம். அவர்கள் இப்படிப்பட்ட சவால்களை எதிர்நோக்குவதை நான் என் கண் முன்னாலே பார்த்திருக்கிறேன்.
எனவே, குடும்பத்துடன் வாழ வேண்டும் என்ற நோக்கத்துடன் புதிய தேசத்துக்கு வருகின்ற முதியோர்களுக்கு நாங்கள் நிச்சயமாக ஆதரவாக இருந்து, இயன்றவரை உதவிகளைச் செய்யவேண்டும். அவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருந்து நாங்களும் மகிழ்ச்சியாக வாழ்வோம்.