Back to Issue - 25

காலத்தைக் கடந்த ஓவியன்

February 8, 2024

துவாரகன் சந்திரன்

வருடம், இரண்டாயிரத்துப் பத்தொன்பது, COVID-19 உலகத்தைத் தாக்குவதற்கு முன், சென்னை மழை போல நியூ யோர்க் நகரத்தில் அடித்துக்கொண்டிருந்த பொழுதில், இளையராஜா பாடல்களைக் கேட்டுக்கொண்டு, கதிரவன் எனும் ஓவியன் தனது கண்காட்சித் திறப்பு விழாவிற்கான கடைசி ஓவியத்தை வரைவதற்குத் தனது மூளையைக் கிண்டிக்கொண்டிருந்தார். தனது மேசையில் நிறையக் காகிதங்கள் பரவிக்கிடந்தன. அதற்குப் பக்கத்தில் அவரது மனைவி எப்போதோ வைத்த தேத்தணி ஆறிப் பச்சைத் தண்ணீர் போல் மாறிவிட்டது. ஒரு கை தனது நாடியைப் பிடித்துக்கொண்டிருக்க, இன்னொரு கை விரல் நடுவில் ஒரு பேனாவைச் சுற்றிக்கொண்டு சுவரைப் பார்த்தார். சுவரில் தனது முதல் ஓவியங்களும், சில விருதுகளும், தனது முதல் வீட்டின் படமும், அழகாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. தனது இடப்பக்கத்தில் ஒரு புத்தக அலுமாரி இருந்தது. வலது பக்கத்திற்கு நியூ யோர்க் நகரத்தை முழுமையாகக் காட்டும் ஒரு பெரிய யன்னல் இருந்தது. இப்படிக் கண்களுக்கு எழிலான, அழகியல் மதிப்புள்ள காட்சிகளைத் தனது அறையில் வைத்திருந்தாலும், இதையெல்லாம் வரைவதற்குக் கதிரவனுக்கு ஊக்கமோ ஆசையோ வரவில்லை. நேரம் போய்க்கொண்டே இருந்தது. மணி இப்பொழுது 2:11am, கதிரவன் மனதில் ஒன்றும் தோன்றவில்லை. சோர்வாக இருக்கிறதென்று, எழுந்து தனது கண்ணாடிக்குச் சென்றான். அதற்குக்கீழ் உள்ள அலுமாரியில் இருந்து சில மாத்திரைகளைப் போட்டான். மீண்டும் தனது கண்ணாடியைப் பார்க்கும் போது அவனுக்கு ஒரு யோசனை வந்தது. “இதுதான், இதுதான் என்னுடைய மிக முக்கியமான ஓவியம்” என்று நினைத்து தனது மேசைக்கு அவசரமாகச் சென்று வரையத்தொடங்கினான் கதிரவன்.

மறுநாள் மழை இன்னும் அடங்கவில்லை. மணி இப்பொழுது 6:37pm, நியூ யோர்க்கில் இருக்கும் அனைத்து ஓவியர்களும் ஒரே இடத்தில் கூடி இருந்தார்கள். கதிரவன் நெஞ்சில் ஒரு சிறிய பயம், அதே நேரத்தில் பெருமை, ஆனால் அதிலும் ஒரு சிறிய தயக்கம். இருப்பினும் தனது பேச்சை வழங்கவேண்டும் என்தற்காகத் தனது மனதை வலுப்படுத்தி மேடைக்குச்சென்றான்.

“இங்கு என் அழைப்பை ஏற்று வந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது வணக்கங்களும் நன்றிகளும். ஓவியங்கள் காலமற்றவை, இதனாலேயே இந்தக் கண்காட்சி சாலைக்கு ‘காலம்’ என்று பெயர் வைத்துள்ளேன். இங்கே எனது ஓவியங்கள் மட்டுமல்ல, கூடிய விரைவில் உங்களுடைய ஓவியங்களும், உலகத்தில் உள்ள பல பெயர் போன பிரபல ஓவியர்களின் படைப்புகளும் வந்து சேரும். காலம் கலையும், ஆனால் கலை எப்பொழுதும் கலையாது. கலை- “

கண்காட்சிச் சாலையின் கதவுகளைத் திறந்துகொண்டு ஒரு பெண் நுழைந்தாள்.

கதிரவன் தடுமாறினான். குழம்பினான்.

அவளைப் பார்த்தவுடன் மழை நின்றது, கீழே உள்ள அனைத்து மக்களும் உறைந்தனர், நேரம் நிறுத்தப்பட்டது, ஆனால் அவள் மட்டும் நகர்ந்தாள். அவளின் நீளமான சுருட்டை முடியில் பட்டும் படாமல் இருந்த மழை துளிகளைத் தட்டி, தனது குடையை மடித்தாள். கண்களைச் சிமிட்டி அவனை மேடையில் பார்க்கும்போது, தன்னைத்தானே மறந்து மேடையில் சிலைபோல் நின்றான் ஓவியன். எங்கேயோ பார்த்த முகம். எப்படியோ பழகிய ஞாபகம். கதிரவன் தனது பேச்சைத் தொடர்ந்தான்.

“கலை தங்கும், கலை தயங்கும், கலை சிரிக்கும், கலை இனிக்கும், கலை கவிதைகள் வரையும், கலை கலங்கும், கலை குழம்பும், கலை ஓரளவுக்குப் புரியும், கலை விலகும், கலை பிரியும்போதும் காலம் உங்கள் வசம், உள்ளம் காலம் வசம். நன்றி”.

தனது பேச்சை முடித்தவுடன் ஒரு பலத்த கரகோசம் தொடர்ந்தது. சில பேர் கதிரவனைப் பாராட்ட வந்தார்கள், சிலர் அவருடைய படைப்புகளை பார்க்கச்சென்றார்கள். அலை போல் வந்த மக்களைத் தாண்டி அந்தப் பெண்ணை அடையக் கதிரவன் முயன்றான். சிறிது நேரத்திற்கு அவளைக் காணவில்லை. தேடினான். அலைந்தான். நண்பர்களும் சக பணியாளர்களும் இருக்கும் இந்த இடத்தில், பெயர் தெரியாத ஒருவரைத் தேடித்திரிந்தான். மண்டபத்தைச் சுற்றிப் பார்த்துக்கொண்டிருக்கும்போது, அவன் நேற்று வரைந்த ஓவியத்திற்கு முன் அவள் நின்றுகொண்டிருந்ததைக் கண்டான்.

கதிரவன் அவளை நெருங்கினான். அவள் அவனைப் பார்க்கத் திரும்பவில்லை. ஓவியத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள். முழுக் கவனமும் அதில் மட்டும் தான் இருந்தது. கதிரவன் பேச முயன்றான்.

“இந்த ஓவிய- “

நிறுத்தப்பட்டான்.

“காலத்தைக் கண்ணாடியில் பார்த்துச் சிரிக்கும் இந்த ஓவியம் உங்களுக்கு எப்படித் தோன்றியது” என்று கேட்டாள்.

“இது… நான் நேற்று வரைந்த ஓவியம், பெரிதாக ஒன்றும் இல்லை, கண்ணாடியைப் பார்ப்பது நான். மறுபக்கம் கண்ணாடியில் இருப்பதும் நான்தான், ஆனால் வயது போய் விட்டது, அவ்வளவுதான்” என்று விளக்கினான்.

“அப்போது சரியான காலத்திற்குத் தான் வந்திருக்கிறேன்” என முணுமுணுத்தாள்.

“என்ன?” என்று புரியாமல் கேட்டான் கதிரவன்.

“ஒன்றும் இல்லை, ஆனால் அந்த முதியவர் எனது தாத்தாவைப் போலவே இருக்கிறார், அது எப்படி” என்று கேட்டாள்.

“என்ன கிண்டலா?” என்று கையை கட்டிக்கொண்டு கேட்டான்.

“இல்லை, இங்கே பாருங்கள்” என தொலைபேசியில் ஒரு படம் காட்டினாள்.

கதிரவன் மீண்டும் தடுமாறினான். கண்களை இறுக்கி மூடி திரும்பவும் திறந்தான். அவனால் நம்பவே முடியவில்லை. ஒரு முதியவர், தன்னைப் போல், இரு குழந்தைகளை கையில் வைத்துக்கொண்டிருக்கும் ஒரு புகைப்படம். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

“இப்படி எனது தந்தை என்னையும் எனது தங்கையையும் வைத்திருக்கும் படம் எனது வீட்டில் உள்ளது” என்று வியப்புடன் கூறினான்.

“அதை நான் உடனடியாகப் பார்க்க வேண்டும், அங்கே போவோமா” என உற்சாகமாகக் கேட்டாள்.

“இந்த விழாவை விட்டிட்டு… எப்படி.. நாளை நீங்கள் என்னுடைய அலுவலகத்திற்கு வந்தால் நான் அங்கே கொண்டுவருகிறேனே?” என்று அவன் பரிந்துரைத்தான்.

“நான் நாளை இந்த காலத்தி- இந்த நகரத்தில் இருக்க மாட்டேன்” எனக் கூறினாள்.

அவசரத்தை புரிந்துகொண்டு கதிரவன் அவளை அழைத்து தனது அடுக்குமாடி வீட்டிற்குச்சென்றான். மழை நிற்கவில்லை, ஆனால் பெரிதாகவும் கொட்டவில்லை. அவன் போகிற வழி முழுவதும் அவளைக் கவனித்தான், தன்னுடைய கைக்கடிகாரத்தை அடிக்கடி பார்த்துக்கொண்டு நடந்தாள். அவள் எங்கேயோ செல்ல வேண்டும் என்று எண்ணினான்.

வீட்டிற்குள் நுழையும் போது அவள் கதிரவனுக்கு முன் போனாள். சாவியை எறிந்தாள், அது ஒரு கொக்கியில் போய் சரியாக விழுந்தது. தனது பையைக் கதிரையில் எறிந்தாள். கழிவறைக்குச்சென்று ஒரு துவாயை எடுத்துக்கொண்டு தலையைத் துடைத்தாள். இதையெல்லாம் வியப்புடன் வாசலிலேயே இருந்து பார்த்தான் கதிரவன். சரி என, தனது அலமாரியில் இருந்த புகைப்பட ஆல்பங்களில் அந்தப் படத்தைத் தேடினான். அவளும் ஓர் இரண்டு புகைப்பட ஆல்பங்களிலும் தேடினாள், ஆனால் சிறு இடைவேளைகளில் வெளி யன்னலை எட்டி எட்டிப் பார்த்தாள். திடீரென ஒரு பெரிய சத்தம். அந்தச் சத்தத்தில் எல்லாம் அதிர்ந்தது. சிறு தூரத்தில் இருந்த ஒரு கட்டிடம் வெடித்துச் சிதறியது. கொஞ்ச நேரத்திற்கு எல்லாம் இருண்டு போனது. கதிரவன் தனது பெரிய யன்னலை நோக்கி ஓடினான். தூரத்தில் தீயில் மெல்ல அழிந்துகொண்டிருந்தது அவனுடைய ஓவியக் கண்காட்சி.

அழுதான். கதறினான். நிலத்தைக் குத்தினான்.

“கவலை வேண்டாம்” என்று கூறி அவனைச் சமாதானப்படுத்த முயன்றாள்.

“யார் நீ? முதலில் இருந்தே ஒன்றும் சரியில்லை, என்னைத் தெரிந்ததுபோலவே பேசுகிறாய், என் வீட்டை அறிந்தது போலவே நடக்கிறாய், இந்தச் சம்பவத்திற்கும் உனக்கும் சம்பந்தம் இருக்கிறது. சொல் நீ யார்?” என எச்சரித்தான்.

பெருமூச்சு விட்டு பதிலைக் கூற தொடங்கினாள்.

“நான் உங்கள் பேத்தி, உங்கள் எதிர்காலத்தில் இருந்து வந்திருக்கிறேன்” என்று ஒரு சிரிப்புடன் கூறினாள். “எனது காலவரிசையில், இந்த விபத்தில் உங்களுக்குத் தலையில் அடிபட்டுக் குறுகிய கால நினைவாற்றல் இழப்பு வந்து விடுகிறது, இதனால் உங்களின் வரையும் திறன் மறைகிறது. ஓவியங்களும், கலையும்தான் உங்கள் உலகம், அதில் வாழமுடியாமல் போவதால் நீங்கள் மன அழுத்தம் என்ற பள்ளத்தில் விழுந்து விடுகிறீர்கள். இதில் இருந்து உங்களைக் காப்பாற்றத்தான் நான் இங்கே காலம் கடந்து வந்தேன். இது உங்களைக் காப்பாற்றும் பதினைந்தாவது முயற்சி. இந்தக் கட்டிடத்தின் வெடிப்பு ஒரு நியதி நிகழ்வு (canon event), அதை மாற்ற எங்களால் எவ்வளவு முயன்றும் முடியவில்லை. ஆனால் இந்த முறை உங்களையும், கட்டிடத்தில் இருக்கும் எல்லோரையும் காப்பாற்ற முடிந்தது” என விளக்கினாள்.

கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு தனது வருங்காலப் பேத்தியை வியப்புடன் பார்த்துக்கொண்டு அவள் சொல்லும் வார்த்தைகளைக் கேட்டான். சில விடயங்கள் புரிந்தது சிலது புரியவில்லை.

“காலம் கடந்தா.. you mean time travel? … அது சாத்தியமா…” “நியதி நிகழ்வு என்றால் என்ன? என்னைக் காப்பாற்றும் பதினைந்தாவது முறையா? அப்படி என்றால், பதினைந்து காலவரிசைகளை (timelines) உருவாக்கி இருக்கிறீர்கள், அது இயற்கைக்கு மாறான செயல், இதனால் இந்தக் காலவரிசை அழிந்து விடாதா?” எனக் கேட்டான்.

“காலத்தை மட்டும் அல்ல, பல பிரபஞ்சங்களையும் கடக்கலாம். மேலும், எங்களுடைய காலத்தைக் கடக்கும் கருவி மற்ற காலவரிசைகளை அழித்துவிடும். எதில் நாங்கள் வெற்றி பெறுகிறோமோ அதை மட்டும் தான் உயிருடன் வைத்திருக்கும். நியதி நிகழ்வென்றால், எல்லாக் காலவரிசைகளிலும், எல்லாப் பிரபஞ்சத்திலும் நிச்சயமாக நடக்கும் நிகழ்வுகள், அதை மாற்ற முடியாது. எவ்வளவு முயன்றாலும். உதாரணத்திற்கு, எல்லாக் காலவரிசைகளிலும், எல்லாப் பிரபஞ்சத்திலும் இரண்டாம் உலகப்போர் நிச்சயமாக நடக்கும், ஆனால் அதில் யார் வெற்றி பெறுகிறார், யார் அதில் உயிர் பிழைத்தார்கள் என்பது அந்தக் காலவரிசைக்கும், பிரபஞ்சத்திற்கும் தனித்துவமானது. நாங்கள் எல்லாரும் ஒரு பரந்த பிரபஞ்சத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பல கால வரிசைகளும், பல பிரபஞ்சங்களும் ஒரே நேரத்தில் பயணித்துக்கொண்டிருக்கும்.” என விளக்கினாள்.

தன்னுடைய பேத்தியின் அறிவைப்பார்து வியந்தான் கதிரவன். அவளுடைய வேலை முடிந்தது என்றும் புரிந்து கொண்டான். அவள் தனது பையில் எதையோ தேட, யன்னலில் நெருப்பும் புகையும் நியூ யோர்க் நகரத்தை மறைத்ததை கதிரவன் பார்த்தான். பையில் இருந்து ஒன்றை எடுத்தாள், இது தான் அந்த காலத்தைக் கடக்கும் கருவி என எண்ணினான். அதை அழுத்திய நொடியில் அவளுக்குப் பின்னால் ஒரு கருந்துளை (black hole) ஒன்று திறக்கப்பட்டது. பெருமூச்சு விட்டான். கடைசியில் ஒரு கேள்வி தோன்றியது.

“உன்னது பெயர் என்ன மா?” என கண்ணீர் வடிய அன்புடன் கேட்டான்.

“ஓவியா… நீங்கள் வைத்த பெயர்தான், மறந்துவிடாதீர்கள்” எனக் கூறிவிட்டு மறைந்தாள்.