சாந்தி சிவகுமார்
கண்ணாடி முன் நின்று சேலை மடிப்பு சரியாக உள்ளதா என சரி பார்த்துக்கொண்டேன். ச்ச…இந்த வயிறு மட்டும் இல்லைனா இன்னும் நல்லா இருக்கும். எரிச்சலாக வந்தது. என்ன பண்ணாலும் இது மட்டும் குறைய மாட்டேங்குது. எப்ப சேலை கட்டினாலும் வயிற்றை கரித்துக்கொட்டுவதையும் சேலை மடிப்புகள் உள்வாங்கி மறைத்துக்கொள்ளும்.
இப்படி, சேலை கட்டும் ஒரு நாளில் எனக்கே என் வயிற்றின் மீது கரிசனம் உண்டானது. ஏன் எப்பவும் இப்படி திட்டிக்கொண்டே இருக்கேன். என் இரண்டு மகன்களை சுமந்த வயிறு. அப்பொழுதெல்லாம், வயிறு பெரிதாவதை தடவித் தடவி இரசித்திருக்கிறேன். வயிறு நன்றாக தெரியும்படி புகைப்படமும் எடுத்திருக்கிறேன். இப்ப என்ன? இருந்தா இருந்துவிட்டு போகட்டுமே. இந்த வயிறுதான் உன் அடையாளமா? அதுவுமில்லாமல், தொப்பைதான் பிரச்சனை, வயிறு இல்லை. ஏன் இத்தனை விசனப்படவேண்டும் என வயிற்றை திட்டுவதை நிறுத்திவிட்டேன். திட்டுவதை மட்டும்தான். இன்னமும் வயிற்றை பற்றிய கிலேசம் உண்டு.
இப்படியான ஒரு நாளில்,ஒரு வருடமாக காத்துக்கொண்டிருந்த அறுவை சிகிச்சைக்கான கடிதம் வந்தது. கேசி மருத்துவமனையில் என் கர்ப்பப்பையை அகற்றும் அறுவை சிகிச்சைக்கான நாள் குறிக்கப்பட்டிருந்தது. கர்பப்பை இறங்கிவிட்டது. Pelvic floor உடற்பயிற்சி செய்தும் பலன் இல்லை. மாதவிடாய் காலத்தில் அதிகமான இரத்த போக்கு, நார்த்திசுக்கட்டி (Fibroids) அல்லது கர்பப்பை இறங்கிவிடுதல் (Prolapse) போன்ற காரணங்களினால் இந்நிலை ஏற்படலாம்.. இந்தியாவில் இது ஒரு சாதாரண அறுவை சிகிச்சைப்போல் பலமுறை கேள்விப்பட்டிருந்தாலும் மருத்துவர் விளக்கும்பொழுது சிறிது அச்சமாகவே இருந்தது. உடலோடு ஒட்டி இருக்கும் ஒரு உறுப்பை அப்படியே வெளியே அகற்றுவது சிறிய விஷயம் இல்லையே மருத்துவரிடம் ஆலோசனைகள் எல்லாம் முடிந்தது. அறுவை சிகிச்சைக்குப்பின் இரண்டு மாதங்கள் முழுக்க ஓய்வில் இருக்கவேண்டும்.
குறிப்பிட்ட தேதியில் அறுவை சிகிச்சை எந்தப் பிரச்சனைகளும் இன்றி நடந்தது. அன்றே வீட்டிற்கு அனுப்பும் வாய்ப்புள்ளது என்றும் கூறியிருந்தனர். ஆனால், மயக்க மருந்தின் பாதிப்பிலிருந்து விடுபட எனக்கு நேரமானதால் அடுத்த நாள் வீட்டிற்கு வந்தேன்.
வயிற்றில் நான்கு இடங்களில் தையல். உட்கார, எழுந்திருக்க சிரமமாக இருந்தது. மாமியும், கணவரும் வீட்டையும் என்னையும் கவனித்துக்கொண்டனர். இரண்டு நாட்கள் தூங்கித் தூங்கி எழுந்தேன். நன்றாக சாப்பிட்டேன்.
இந்த அறுவை சிகிச்சையின் பக்க விளைவு மலச்சிக்கல். அதற்கு மருந்து கொடுத்திருந்தார்கள். ஆனால் இரண்டு நாட்களாகியும் வேலை செய்யவில்லை. என் நெருங்கிய தோழி கீரை சூப் வைத்துக்கொடுத்தார். வேறு ஏதேதோ கை வைத்தியம். எதற்கும் அசையவில்லை. ஆறு நாட்களாகிவிட்டது. மருத்துவரிடம் சென்றேன். அவர் பயப்பட ஒன்றுமில்லை. இன்னும் இரண்டு நாட்கள் பாருங்கள். வயிறு வலியோ, வாந்தியோ வந்தால் உடனே மருத்துவமனைக்கு செல்லுங்கள் என்று கூறி அனுப்பிவிட்டார்.
அன்றிரவே சாப்பாடு கொள்ளவில்லை, என்னவோ சங்கடமாக இருந்தது. கொஞ்ச நேரத்தில் பிரட்டிக்கொண்டு வந்தது. உடனே மருத்துவமனைக்கு சென்றோம். இரவு பத்து மணி. அவசரப் பிரிவில் காத்திருக்கவேண்டுமே என எரிச்சல் வந்தாலும் ஒன்றும் செய்வதற்கில்லை. ஐந்து மணி நேர காத்திருப்பிற்குப்பின் விடிகாலையில் அனுமதிக்கப்பட்டேன்.
வயிறு அலங்கோலப்பட்டது. முட்டிக்கொண்டு வந்தது. எக்ஸ்ரே, இரத்தப் பரிசோதனை எல்லாம் முடிந்து இனிமா கொடுக்கவேண்டும் என்று முடிவு செய்து என்னை வேறு ஒரு வார்டுக்கு மாற்றினார்கள். பத்து நிமிடத்தில் இனிமா கொடுத்தனர். இருபது நிமிடங்கள் நீங்கள் பொறுத்துக்கொள்ளவேண்டும், அப்பத்தான் சரியாக வேலை செய்யும் என செவிலிப்பெண் கூற நான் அலாரம் வைத்துக்கொள்ளட்டுமா எனக் கேட்டேன். அவள் சிரித்துக்கொண்டே “Don’t stress, no need to be so accurate. Try your best” என்றார். நான் இங்குதான் இருப்பேன், தேவை எனில் என்னை கூப்பிடு என்று சொல்லிவிட்டுச் சென்றார்.
பத்து நிமிடத்திற்குள் படபடவென வந்தது. வியர்த்தது. ஏடாகூடமாக எதுவும் ஆகிவிடக்கூடாது என கழிப்பறைக்கு சென்றேன். நான் சென்றதை யாரும் கவனிக்கவில்லை. கழிப்பிடம் காலியாக இருந்தது ஆசுவாசத்தை கொடுத்தது.
வயிற்றுக்குள் ஓரு பெரும் போரே நடந்தது. வியர்த்துக்கொட்டியது. பத்து நிமிடம் ஆகியும் ஒன்றும் வெளிவரவில்லை. யாரோ கதவை அசைத்து தட்டினார்கள். வயிற்றுக்குள் காற்று உருண்டு பிரண்டது. வயிறு வெடித்துவிடும்போல் இருந்தது. பிரஷர் போடக்கூடாது, தையல் பிரிந்துவிடும் என எச்சரிக்கப்பட்டிருந்ததால் தானாக வெளி வரட்டும் என் பெரும் அவஸ்த்தையுடன் அமர்ந்திருந்தேன்.
மறுபடியும் பிரஷர் கூடியது. வலி இல்லை. வேறு என்னவோ செய்தது. வழி அடைக்கப்பட்டு வெளி வர திணறியது புரிந்தது. வயிறு பிளந்துவிடுமோ என்று பயம். அடுத்த முறை என்ன ஆனாலும் முக்குவது என்று முடிவு செய்தேன். பிரசவத்தின்பொழுது கணவர் கூட இருந்தார். இப்பொழுது தனியாளாக, ஒரு மருத்துவமனை கழிப்பறையில் படும் அவஸ்த்தை…என்ன வாழ்க்கையிது? அவரவர் வலியை அவரவரே அனுபவிக்கவேண்டும். வாழ்க்கையாவது…துணையாவது…
இந்த வயிற்றை எத்தனை கரித்துக்கொட்டியிருப்பேன்… இன்று அது படும் பாடு…
அழுத்தம் கூடியது. பிரசவத்தின்போது முக்கியதைப்போல் முக்கினேன்… அப்பாடா…
மேலும் பத்து நிமிடம் அங்கேயே உட்கார்ந்திருந்தேன். பல முறை பிளஷ் செய்தேன். மெதுவாக என் படுக்கைக்கு வந்தேன். காலை டூட்டியில் இருந்த மருத்துவர் வந்தவுடனேயே கேட்டார்.
“All cleared?”
“Yes, doctor”
“Feeling better?”
“Oh yes”
“Then you can go home”
சொல்லியபடியே அந்த மருத்துவர் செவிலிப்பெண்ணிடம் திரும்ப,
“One more cleared. Totally 17. Good”
I was just a number. அவர்களுக்கு அவர்கள் கவலை. என்னை வெளியேற்றியதில் அவர்களுக்கான இலக்கை அடைந்துவிட்டனர்.
கணவரை வரச்சொல்லி வீட்டிற்கு வந்து குளித்து படுக்கையில் விழுந்தவள் இரண்டு மணி நேரம் பொறுத்து எழுந்து உணவு அருந்த அமர்ந்தேன். மாமியிடம் சோற்றை குறைத்து காய்கறிகளை அதிகமாக வைக்கச்சொன்னேன். இரண்டு மாத ஓய்வில் வயிறு வைத்துவிடும்.
அப்பறம் குறைப்பது கடினம் என்று மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏறியது.