Back to Issue - 25

எனது இசைப்பயணம்

February 8, 2024

கிரிசிகன் சீவராஜா

எனது இசைப்பயணம் எப்படி ஆரம்பித்தது என்றால், மற்ற சிறுவர்களைப்போல் நான் என்னுடைய சகோதரருடன் சிறுவயதில், எங்களுடைய அம்மா, அப்பா  முன் ஆடிப் பாடிக்கொண்டு இருப்பதை அவர்கள் இரசித்தார்கள். அவர்களின் இசை ஆர்வத்தால், நாம் கல்விகற்ற ஆரம்பப் பாடசாலையில் சில இசைக்கருவிகளைப் பயில்வதற்கு வழி செய்தார்கள். அதைத் தொடர்ந்து, அப்பாவினதும் தனிப்பட்ட இசை ஆசிரியர்கள்  உதவியுடனும் வெவ்வேறு இசைக்கருவிகளைக் கற்கக்கூடியதாக இருந்தது. எனக்கு இசைக்கருவியுடன், பாடுவதில் ஆர்வம் இருந்தபடியால், பல பாடல்களைப் பாடிப் பலரை மகிழ்வித்தேன்.

இதே நேரத்தில், பல திரைப்படப் பாடல்களைக் காதால் கேட்டு ரசித்து, அவைகளைப் பல மேடைகளில் பாடக்கூடிய மற்றும் இசை வாசிக்கக்கூடிய திறமையை வளர்க்கக்கூடியதாக இருந்தது. இதன் காரணமாக, பல மேடைகளில் பாடியும், பல திரைப்படப்பாடல்  போட்டிகளில் பங்குபற்றியும், பரிசுகளை வெல்லக்கூடிய நிலையும் ஏற்பட்டது. இப்படியான நேரத்தில் பலர், என்னையும் என்னுடைய அண்ணாவையும் பாராட்டும்போது எமக்கு மிக மகிழ்ச்சியாக இருக்கும். இதே வேளை, சில மேடை நிகழ்ச்சிகளின்பொழுது பார்வையாளர்கள் மிகக் குறைவாக இருக்கும் இடங்களிலும் நாம் மனம் தளராமல் பங்குபற்றுவோம். அதைப்போல் அதிகமான ரசிகர்கள் இருக்கின்ற நிகழ்ச்சியில்  இடைநேரத்தில் பார்வையாளர்கள் கலைந்து செல்லும்போது மனதிற்கு வருத்தமாக இருந்தாலும், தொடர்ந்து நிகழ்ச்சியில் நாம் எல்லோரும் மகிழ்ச்சியாக இணைந்து  இருப்போம்.

இதன் தொடர்ச்சியாக ஒரு தனியான இசைக் குழுவை என் தந்தை ஆரம்பித்துப் பல இசை நிகழ்ச்சிகளை நடத்தியிருந்தோம். இதற்காக, அதிக நேரம் திட்டமிடுவதிலும் பயிற்சியில்  ஈடுபடுவதிலும் மற்றும், இசைக்கருவி வாசிக்கக்கூடிய, பாடக்கூடிய திறமையாளர்களையும் எமது குழுவில் சேர்த்து, ஒத்திகை பார்ப்பதற்கு நேரம் செலவுசெய்து, நிகழ்ச்சியை மேடைக்குக் கொண்டுசேர்ப்போம்.  அந்த நேரத்தில் பார்வையாளர்களின் கரகோசம் எங்களை மேலும் உற்சாகப்படுத்தும். இதனால் எனக்கு மேலும் மேலும் பாடல்களைப் பாடுவதற்கு மற்றும் இசை வாசிப்பதற்கு ஆர்வமாக இருக்கும். மேடை நிகழ்ச்சியைத் தயாரிக்கின்றபோதும், அது நடக்கின்ற போதும், சொல்லமுடியாத, மனதிற்குச் சங்கடமான பல அனுபவங்களுடன், சொல்லக்கூடிய, மனதிற்கு இனிமையான அனுபவத்தோடு, நிகழ்ச்சியின் இறுதியில் மகிழ்ச்சியாக நாம் செல்வோம்.

இந்த இசை ஆர்வத்தின் காரணமாக, பாடல்களை நாமே தயாரித்து வெளியிட்டால் நல்லது என்ற யோசனை ஏற்பட்டது. என் ஆர்வமும் கூட. நாம் பாடல்களைத் தயாரிக்கத் தொடங்கினோம். இதன் ஆரம்பக் கட்டமாகப் பல திரைப்படப் பாடல்களை அண்ணாவுடன் சேர்ந்து பின்னிசையை எமது இசைக்கருவி மூலம் நாங்களே வாசித்து, திரைப்படப் பாடலைப் பதிவுசெய்து, வானமுதம், இன்பத்தமிழ் ஒலி, போன்ற வானொலிகளில் ஒலிபரப்பாவதற்காக, வானொலி நடத்துனர்கள் வழி அமைத்துத் தந்தார்கள். இதன் அடுத்த செயல்பாடாக, காலத்திற்கு ஏற்ப தமிழ்ப் பாடல்களை இயற்றி, இசை அமைத்து, பாடி, வானொலிகளில் வெளியிட்டிருந்தோம். இதன்பிறகு, எனது மனதில் ஒரு சிறிய யோசனை ஏற்பட்டது. அது என்னவென்றால், ஆங்கிலப் பாடல்களை உருவாக்கும் எண்ணமே. இதனால் நான் பல ஆங்கிலப் பாடல்களை எழுதி, அதற்கு இசை கொடுத்து, பதிவுசெய்து என்னுடைய நண்பர்களுக்கு மட்டும் வெளிக்காட்டினேன். இப்பாடல்களைக் கேட்ட என் நண்பர்கள் என்னை ஊக்குவித்து இப்படியான பாடல்களைப் பொதுமக்களுக்கு வெளியிடலாம் என்று கூறினார்கள். இந்த ஆலோசனைகள் மனதில் வைத்து, நான் ஆங்கிலத்தில் தயாரித்துப் பல இசை கேட்கின்ற தளங்களில் வெளியிடத் தொடங்கினேன். பல பேர் பார்த்து வாழ்த்தியிருந்தார்கள். அதே நேரம் சில நண்பர்கள் எதிர்மறையான விமர்சனங்களைத் தெரிவித்து மனச்சஞ்சலத்தை ஏற்படுத்தி இருந்தபோதிலும், அவற்றையும் ஒரு ஊக்குவிப்பு என நினைத்துத் தொடர்ந்து எனது தயாரிப்புகளை வெளியிட்டுக்கொண்டிருந்தேன். இப்படியான தருணங்களைத் தாண்டி, நான் இசை தயாரிக்கத் தொடர்ந்தேன். என்னுடைய விடாமுயற்சியால் நான் என் இசைப் பயணத்தில் வளரத் தொடங்கினேன்.  என் பாடல்களை இணையத்தளத்தில் பல இலட்சக்கணக்கானோர், இலங்கை, இந்தியா, கனடா, அமெரிக்கா, மற்றும் அவுஸ்திரேலிய போன்ற பல்வேறு நாடுகளில் என் பாடல்களைக் கேட்டு நல்ல விமர்சனங்களோடு வாழ்த்தியிருந்தார்கள். சில பாடல்களைத் தனியாகத் தயாரித்ததோடு, மற்ற நேரத்தில் நான் என் நண்பர்களுடனும் மற்றும் வேறு நாடுகளில் சேர்ந்த கலைஞர்களுடனும் பாடல்களைத் தயாரித்தேன். இதைத் தவிர, என் சகோதரர் கீர்த்திகனோடு, நாம் இருவரும் தமிழ்ப் பாடல்களுக்கு இசை அமைத்து, வசனங்கள் எழுதி, பாடி, தயாரித்து வெளியிட்டிருக்கின்றோம். எனது இசை ஆர்வத்தின் காரணமாக இவ்வளவு காலமும் நடந்த நேர்மறையான எதிர்மறையான அனுபவங்களோடு தொடர்ந்து பயணிக்க விருப்பத்தோடு இருக்கின்றேன். இதற்கு, எனது பல நண்பர்களும், தளத்தில் எனது பாடல்களைக் கேட்டு ரசிக்கும் ரசிகர்களும்தான் முக்கியமான காரணமாயிருக்கின்றனர். அவர்களின் ஊக்குவிப்பால், இன்னும் பல பாடல்கள் தயாரித்து வெளியிடத் திட்டமிட்டு இருக்கின்றேன்.

“இசையால் வசமாகா இதயம் எது” என்பதற்கேற்ப நானும் பல தமிழ், ஆங்கில இசையைக் கேட்டு, அதன்மீது வசப்பட்டு இப்படியாக எனது பயணத்தைத் தொடர்ந்துகொள்வதோடு, அதனால் நான் எனது மனதை  மகிழ்ச்சியாக வைத்திருக்கப் பெரிதும் உதவுகின்றது. இதைப் போல், இசையால், எல்லோருக்கும் அந்த மகிழ்ச்சி, மன நிறைவு கிடைக்கும் என நம்புகின்றேன்

.

எனது சொந்த அனுபவத்தின்படி, எந்தக் கலையிலும், கலைஞர்களுக்குக் கிடைக்கும் பலவிதமான விமர்சனங்களையும் தாண்டித் தொடர்ந்து பயணித்தால், பாராட்டைப் பெறுவது உறுதி.