Back to Issue - 23

ஊபர் ஈட்ஸ்

March 16, 2023

– ஜேகே –

நேற்று ஊபர் ஈட்ஸ் விநியோகத்துக்கான பொதியை எடுப்பதற்கு இலங்கை உணவகம் ஒன்றுக்குச் செல்லவேண்டியிருந்தது. பொதியில் ஒட்டியிருந்த பெயரைப்பார்த்ததும் அது ஓர் ஈழத்தமிழரின் ஓர்டர் என்பதைக் கண்டுபிடித்துவிட்டேன். கொத்து ரொட்டியும் அப்பமும் ஓர்டர் பண்ணியிருந்தார்கள். அரைக்கட்டை தூரத்தில் உள்ள கடையின் கொத்து ரொட்டிக்கு ஊபர் ஈட்ஸ் ஓர்டர் பண்ணும் தமிழர்களும் இருப்பார்களா என்ற ஆச்சரியத்துடன் பொதியை வாங்கிக்கொண்டு அந்த வீடு நோக்கிப்புறப்பட்டேன்.

வீட்டைக் கண்டுபிடிப்பதில் சிரமம் இருக்கவில்லை. இரண்டு மாடியில் பிரமாண்டமான வீடு. வாசலில் நாவூறு பூசனி தொங்கியது. அண்மையில்தான் கட்டியிருக்கவேண்டும். ஏலவே வாழ்ந்த வீட்டை இப்போது முதலீட்டுச் சொத்தாக மாற்றியிருக்கலாம். வாசலில் பளிச்சென்று நின்ற பிஎம்டபிள்யூவைப் பார்த்தால், இது அவர்களுக்கு மூன்றாவது நான்காவது வீடாகக்கூட இருக்கக்கூடும். தயக்கத்துடன் காரை விட்டு இறங்கினேன். எப்போதுமே வசதி படைத்தவர்கள், படித்தவர்கள், இலக்கியவாதிகள், சமூக ஆளுமை நிறைந்தவர்களின் அருகாமை எனக்கு ஒத்துவருவதில்லை. அவர்கள் அருகில் போனாலேயே தோஸ்தாவஸ்கிக்கு வருவதுபோல வலிப்பு வர ஆரம்பித்துவிடுகிறது. ஒருவித PTSD வியாதி அது.  போய்ப் பேசாமல், அழைப்புமணியை அடித்துவிட்டு, வாசலிலேயே பொதியை வைத்துவிட்டுத் திரும்பலாம் என்று முடிவெடுத்தேன். ஆனால் என் கெட்ட காலம், வீட்டுக்குப்  பூசனிக்காயைத்  தொங்கவிட்டு, கதவுக்குப் பட்டையடித்து, ஐயருக்கு முந்நூறு டொலர் அழுத அலுக்கோசு,  நூறு டொலருக்கு வீட்டுக்கு அழைப்பு மணி வாங்கிப்பூட்டப் பஞ்சிப்பட்டிருக்கிறது. அல்லது அந்த வீட்டுக்கு எவர் வரப்போயினம் என்ற எண்ணமாகவும் இருக்கலாம். இப்போது வெறுமனே சும்மா கதவைத்தட்டி, சாப்பாட்டை வைத்துவிட்டும் போகமுடியாது. என் ஊபர் ரேட்டிங் குறைந்துவிடும்.

‘டொக் டொக்’, தட்டிவிட்டு உள்ளே காது கொடுத்தேன். உள்ளிருந்து டிவி சத்தம் வந்தது. இன்னமும் பலமான ஒரு ‘தட் தட்’.‘Yes, Coming…’, அந்தப் பெண் குரலுக்குப் பதினைந்து வயதை மதிப்பிடலாம். குரலை வைத்து வயதை மதிப்பிடலாமா என்று எப்போதுமே எனக்கொரு சந்தேகம் உண்டு. குரலுக்கு மெதுவாகவே வயது ஏறுகிறது. எனினும் என் பள்ளிக்கால நண்பியின் குரலை இப்போது கண்டுபிடிப்பேனா என்பது சந்தேமே. கொஞ்சம் கரகரப்பு, தயக்கத்துடன் கூடிய, பிஞ்சுப் பயற்றங்காய்போன்ற ஒரு குரல் கோகிலவாணியுடையது. ஆனால் அவள் குரல் இன்றைக்கு எப்படியிருக்கும் என்று தெரியவில்லை. எங்கள் சுண்டுக்குளி வகுப்பின் நாற்பதாவது வயது ஒன்றுகூடலின் ஓடியோ ஒன்று பாடசாலை வட்ஸப் குழாமில் ஷெயார் பண்ணப்பட்டிருந்தது. கேட்டுப்பார்த்தால் யார் குரலையும் மட்டுக்கட்ட முடியவில்லை. கண்களை மூடியபடி, ஏ ஆர் ரகுமான் பாடல்கள் கேட்பதுபோல சின்னச் சின்ன ஒலிகளையெல்லாம் செவி மடுத்தேன். ம்ஹூம். எல்லோருடைய குரல்களும் உருமாறியிருந்தன. குரல்கள் என்றில்லை. நேரில் காணும்போது ஆட்களையும்தான் மட்டுக்கட்ட முடிவதில்லை. ஊருக்குப் போயிருந்த சமயம், கார்கில்ஸில் ஒரு பெண்மணி என்னைக் கண்டு ‘என்ன என்னை மறந்திட்டீரா?’ என்று கேட்டபோது முழித்தேன். ‘நான்தான் ராதிகா’ என்றாள். ‘அம்பியிட்ட படிச்சனீரா?’ என்றேன். ராதிகா ஐந்தாம் ஆண்டு அம்பிகைபாகன் சேரின் வகுப்பில் என்னோடு ஒன்றாகப் படித்தவள், என் சிட்டைக் கணக்கைப் பார்த்து அடித்த ஒரே பெண் என்ற பெருமைக்குரியவள். அவளைக்கூட மறந்துவிட்டேன். ‘ஓமோம், என்ர பெயரைக்கூட ஒரு கதையில எழுதியிருந்தீரே’ என்றாள். எந்தக் கதை என்று நானும் கேட்கவில்லை. அவளுமே சொல்லவில்லை. 

கதவு இன்னமும் திறந்தபாடில்லை. டிவி சத்தம் தொடர்ந்துகொண்டிருந்தது. டிவியில் போனது பிகிலா மெர்சலா என்பதைக் கணிக்கமுடியவில்லை. இரண்டு பட அப்பன்களில் ஒருத்தன் கொல்லப்படும் காட்சி. மீண்டும் கதவைத் தட்டிவிட்டுக் கத்தினேன்.

‘It’s Ubereats delivery’, விஞ்சிய பகுதியான ‘you as**’ என்று வந்த வசையைத் தொண்டைக்குள்ளேயே விழுங்கிவிட்டேன்.டிவி சத்தம் மியூட்டானது. ‘Shami, it’s arrived, go get it’, இது ஓர் ஐம்பது வயது ஆண் குரல், ஷமியின் அப்பாவாக இருக்கலாம். சொன்னாப்போல, ஆண் குரல்களில் பள்ளி நண்பர்களின் குரல்கள் மாறுவதேயில்லை. அதே ஏற்ற இறக்கங்களுடனும் நெளிவு சுளிவுகளுடனும், அபசுரங்களுடனும் அவை அப்படியே இருக்கின்றன. ஒருவேளை ஆண் நண்பர்களுடன் பழகியதுபோல நண்பிகளுடனும் நெருக்கமாகப் பழகியிருந்தால் அவர்களின் குரல்கள் ஞாபகத்தில் இருந்திருக்குமோ என்னவோ. பெரும்பாலான சமயங்களில் நண்பிகளின் குரல்களைக் கற்பனை செய்தே கேட்டிருக்கிறோம் என்று தோன்றுகிறது. பலருக்கு சித்ராவினதும் ஜானகியினதும் குரல்களைச் சேர்த்துவிட்டிருந்தோம். மற்றபடி எப்போதாவது ஆசிரியருக்குப் பதில் சொல்லும்போதும், கட்டுரை வாசிக்கும்போதுதான் அவர்களின் நிஜக்குரல்களைக் கேட்கும் சந்தர்ப்பம் அமைவதுண்டு. ஒரு உடைந்த மட்பாண்டத் துண்டை வைத்துக்கொண்டு எப்படி ஒரு பண்டைய நாகரிகத்தையே நாங்கள் கட்டியமைக்கிறோமோ அதுபோலத்தான் நண்பிகளின் குரல்களை நாம் அடையாளம் கண்டுகொள்கிறோம். ஆண் நண்பர்களின் குரல்கள் அப்படியல்ல. அவை சங்க இலக்கியங்கள்போல எப்போதுமே மறுவாசிப்புக்கு உட்படுத்தப்பட்டே வந்தமையால் நீங்காமல் நிலைத்திருக்கிறது. அவர்கள் கொட்டும் தூஷணங்களும் இலக்கியங்கள்போலவே உயிர் வாழ வல்லது. ஊரில் நிற்கையில், சொந்தக்கார வீடுகளில் பம்மிக்கொண்டிருக்கும் தூஷணம் பள்ளி நண்பர்களைப் பார்த்ததுமே அவிட்டுவிட்ட நாய்போல பாய்ந்து விழுந்து உருண்டு பிரண்டது எங்கனம் என்று தெரியவில்லை. அதிலும் தண்ணிக்குத் தூஷணம் அளவுக்கு இன்னொரு சைட் டிஷ் அமைந்துவிடவுங்கூடுமோ?

டிவி மீண்டும் உயிர்த்தது.

‘I can’t … Rayappan uncle is dying, you go get it Papa’ ஷமி அழுகைக் குமுறலுடன் சொன்னாள். பிகிலின் தந்தை மிக எளிதாக அந்தப்பெண்ணுக்கு மாமா ஆகிவிட்டதன் தாற்பரியத்தை வியந்தேன். பப்பா என்று தகப்பனை அழைப்பதைப்பார்த்தால் அவர்கள் மலேசியத்தமிழர்களோ என்ற சந்தேகமும் வந்தது. அங்கும் கொத்து ரொட்டி பிரபலம்தானே. கொத்து ரொட்டி என்ற வஸ்துவே மலேசியாவில்தான் தோன்றியது என்று சில தொல்பொருள் ஆய்வாளர்கள் குறிப்பிட்டும் இருக்கிறார்கள். அல்லது இவர்கள் மலேசியாவில் வாழ்ந்த ஈழத்தமிழர் சந்ததியாகவும் இருக்கலாம்.

நான் இனி வேலைக்காகாது என்று பார்சலை வாசலில் வைத்து அதனைப் புகைப்படம் பிடித்தேன். கதவு திறந்தது. ஷமியின் அப்பாதான். இவரை எங்கேயோ பார்த்திருக்கிறேனே. உடனடியாக ஞாபகம் வரவில்லை. நேரில் பார்க்கையில் சற்று முன்னர் குரலுக்கு மதிப்பிட்ட வயதைவிட உடலுக்குப் பதினைந்து ஆண்டுகள் அதிகம் இருக்கலாம் என்று தோன்றியது. இவருக்கு அறுபத்தைந்து என்றால் ஐம்பது வயதில் ஷமி பிறந்திருக்கவேண்டும். அதற்கு முன்னரான இவரின் இருபது வருடங்களுக்கு என்னானது? ஷமிக்கு அண்ணனோ அக்காவோ இருக்கலாம். உள்ளேயே அறைக்குள், அல்லது அமைதியாக, அல்லது பிளே ஸ்டேசன் விளையாடியபடி, அல்லது வெளியே நண்பர்களோடு. அல்லது இவருக்குத் திருமணம் தாமதமாகியிருக்கலாம். மூன்று தங்கைகளின் திருமணம், சிலரை வெளிநாடு அனுப்ப உதவி செய்தது, ஊரில் காணி, வீடு என்று தேடி நிமிரவே தலைவருக்கு வயதாகியிருக்கும். இருந்தும் ஐம்பது வயதில் குழந்தை பிறந்தால் ஐம்பத்தைந்து வயதில் பிளே கிரவுண்டில் பிள்ளையை  உப்பு மூட்டை சுமக்கும்போது மூச்சிரைக்காதா? ஏனைய இளம் பெற்றோருக்கு முன்னே நம்மாள் எவ்வளவு நேரம்தான் தொந்தியை எக்கித் தம் பிடிப்பது? நல்லூருக்குக் கூட்டிப்போனால் எப்படிக் குழந்தையைத் தோளில் தூக்கி முருகனைக் காட்டியிருப்பார்? இத்தனை நெருக்கடிகளுக்குள் இவர் எப்படி இத்தனை பெரிய வீட்டைக் கட்டியிருக்கக்கூடும்? அதுவும் மூன்றாவது வீடாக? இந்தாள் நேர்மையாக உழைத்துச் சம்பாதித்திருக்கச் சாத்தியமேயில்லை. ஊரை ஏமாற்றியிருக்கலாம். இயக்கத்தின் காசாக இருக்கும். இங்குள்ள அத்தனை பணக்காரர்களும் இயக்கத்துக்குச் சேர்த்த காசை அடித்துத்தானே முன்னேறினார்களாம்? த பொயிண்ட் இஸ் மை ஆனர், இந்தச் சிந்தனைகள் எல்லாம் எனக்குத் தேவையில்லாதது. யாரோ எப்படியோ இருந்துவிட்டுப் போகட்டும். எனக்கேன் இந்தத் தேவையில்லாத விடுப்பும் புரளியும்? ஆனாலும் தடுக்கமுடிவதில்லை. எப்படியோ பொறாமை வந்துவிடுகிறது. ஒரு வெள்ளைக்காரர் பணக்காரராக இருப்பதில் எனக்கு எந்தப்பிரச்சனையும் இல்லை. ஆனால் கூட இருப்பவர்கள், நண்பர்கள், சொந்தக்காரர்கள், ஒரே இனத்தவர் எம்மைவிடப் பணக்காரராக இருக்கையில் மனம் புழுங்கிப்போகிறது. அவர்களை எப்படியும் குறைத்து மட்டம் தட்ட மனம் காரணங்களைத் தேடுகிறது. அவர்கள் முட்டாள்கள், எப்படியோ குருட்டு லக்கில் பணக்காரர் ஆகிவிட்டார்கள் என்பதை நிரூபிக்கவேண்டும்போல இருக்கிறது. என் அருகில் இருப்பவரின் புகழை என் மனம் ரசிக்கமாட்டேன் என்கிறது. அவரைக் கொண்டாட ஈகோ தடைபோடுகிறது. அவர்கள் வாழ்க்கையில் கீழே வீழ்ந்து அடிவாங்கவேண்டும் என்று மனம் என்று கடவுளுக்கு நேர்த்தி வைக்கிறது. இவ்வகை எண்ணங்களிலுள்ள மகிழ்ச்சிக்கு ஈடே கிடைப்பதில்லை. காதல் தோல்வியில் உழலும் நண்பிக்குக் கொடுக்கும் ஆறுதல் போன்றது அது.  ஒருவகையில் பனங்கொட்டையும் பார்த்தினியம் போலத்தான். பரவிவிட்டால் அதன் குணங்களைக் கண்டங்கள், தலைமுறைகள் தாண்டினாலும் எத்தனை முனைந்தும் அழிக்கவே முடியாது.

“Hey …. you Indian?”, அந்தப்பக்கம் பார்த்தினியம் நேரடியாக இந்தியன் ஆர்மியின் ஆட்டிலிருந்து கீழே விழுந்து உருண்டு இங்கே வந்து வளர்ந்திருக்கவேண்டும். சத்தம் பலமாக இருந்தது.

“No mate, I am an Australian”

பக்கென்று வேண்டுமென்றே அவருக்குச் சொன்னாலும் என் பதில் எனக்கே அபத்தமாக இருந்தது. ‘இல்லை நான் சிறி லங்கன்’ என்றே சொல்லியிருக்கலாம்தான். ஆனால் எப்போதுமே மனமார என்னை ஒரு சிறி லங்கனாக நான் எண்ணியதில்லை. சிறி லங்கன் தமிழ் என்றால் கொஞ்சம் ஆசுவாசமாக இருக்கும். வெறுமனே ‘தமிழ்’ என்றால் எந்த நாடு என்ற குறியீடு இல்லாமலாகிறது. ஈழத் தமிழர் எனலாம்தான். ஆனால் அதற்கும் ஶ்ரீலங்கன் தமிழுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. மலையகத் தமிழர் தம்மை ஈழத்தமிழராக உணருவார்களா என்றும் ஓர் உடனடிக்குழப்பம் வருகிறது. நாடற்ற தமிழர் என்றால் எல்லாத்தமிழருக்கும் அது பொருந்துகிறது. ஒஸ்ரேலியன் டமில் என்றிருக்கலாமோ? என் அடிப்படைப் பிரச்சனை நான் எந்தத் தமிழன் என்பதில் இல்லை. அது அடிக்கடி மாறிக்கொண்டேயிருக்கும். என் நோக்கம் அவரின் கேள்விக்குக் குதர்க்கமாகப் பதில் சொல்வதே. எந்தக் கேள்விக்கும் நான் ஏறுமாறாகவே பதிலளித்திருப்பேன். அதில் ஒரு குரூரச் சந்தோசம். உன்னை நான் வென்றுவிட்டேன் பார்த்தாயா? உன்னால் நான்கு வீடுகளும் புது மொடல் பிஎம்டபிள்யூவும் வாங்க முடிகிறது, ஆனால் என் பேச்சுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை பார்த்தாயா? அதுதான் விசயம். மற்றபடி பேசாமல் ‘’இண்டியனா?” என்ற கேள்விக்கு “நோ” என்றுவிட்டு அவரின் அடுத்த கேள்விக்குக் காத்திருந்திருந்திருக்கலாம். அல்லது ஆமாம் என்றாலும்தான் என்ன தவறு இப்போ? துணைக்கண்டம் முழுதுமே இனத்தால் அனைவரும் இந்தியர்கள்தானே?

‘Is it good?’

நான் அத்தனை யோசித்துக்கொண்டிருக்கையில், அவர் அலட்டிக்கொள்ளாமல் அடுத்த கேள்விக்குப் போய்விட்டார். இதுதான் பிரச்சனை. கேள்விகளைக் கேட்பவர்கள் பலருக்குப் பதில்கள் தேவைப்படுவதில்லை. அவர்கள் பொதுவாகப் பதில்களை வைத்துக்கொண்டே கேள்விகளைக் கேட்பார்கள். அல்லாவிடில் அடுத்தொரு கேள்வியை வைத்திருப்பார்கள். நாம்தான் தேவையேயில்லாமல் அவர்கள் கேள்விக்குச் சரியான பதிலைத் தேடி மண்டையை உடைத்துக்கொண்டிருப்போம்.

‘I mean this delivery thing, are you making enough money?’

அன்னாரை இப்போது ஞாபகம் வந்துவிட்டது. ‘இரவில் எரிக்கும் சூரியன்கள்’ கவிதை நூல் வெளியீட்டில் முதற்பிரதிப் பெற்றவர் இவர். பிரதியைப் பெற்றதுடன் மாத்திரமின்றி ஒலிவாங்கியைப் பறித்து, கவிதைகள் பற்றியும் இரண்டு வார்த்தைகள் சொல்லியிருந்தார். வழமைபோல ‘கண்ணதாசன், வைரமுத்து பாடல்களுக்கு நிகராக இத்தலைமுறையில் யாரும் தரமாக எழுதுவதில்லை, ஆனால் இந்தத் தம்பியிடம் ஒரு பொறி தெரிகிறது’ என்றார். பக்கத்தில் நின்ற சூரியக் கவிஞர் மிகப்பெருமிதத்துடன் அதற்குக் கைதட்டினார். அந்தக் கவிஞர் தானொரு வைரமுத்துவாக மிளிரவேண்டும் என்று தமிழ்நாட்டில் இப்போது குடிபுகுந்துவிட்டார். இசையமைப்பாளர்களோடும் பாடகிகளோடும் நின்று எடுத்த புகைப்படங்களை முகநூலில் போட்டு இம்சை செய்கிறார். வன்ஸ் எகெய்ன் எனக்கேன் இந்த வேண்டாத வேலை? 

நாம் தொடர்ந்து ஆங்கிலத்திலேயே பேசினோம்.

‘Not bad, covid time I lost my job, my factory closed, this good pocket money’

என் ஆங்கிலம் மழைக்காலத்தில் விழுகின்ற அப்பிள் பழங்களைப்போல ஆங்காங்கே ஒற்றை ஒற்றை வார்த்தைகளாக வாயிலிருந்து விழுந்துகொண்டிருந்தது.

‘You do any handy job? Cleaning, Gardening?’

அவர் தரப்பிலிருந்தும் அப்பிள்தான் விழுகிறது. இந்த அப்பிளை வைத்துக்கொண்டு எப்படி இந்த நாட்டில் இத்தனை வீடுகள் கட்டினார்? நிச்சயம் இயக்கத்திண்ட காசுதான். வேண்டாம். இப்படியெல்லாம் ஒருவரைப்பற்றிக் குறையாக யோசிக்கவேண்டாம். இதயத்தின் வலது சோனையும் இடதுசோனையும் கன்னைபிரித்து தமக்குள்ளேயே கருத்தியல் வாதம் செய்ய ஆரம்பித்தன. நாம் அவருக்குப் பதில் சொன்னேன்.

‘Yes, sir, any job I can do… cleaning, gardening, plumbing…’

யாராவது எனக்கு வேலை கொடுப்பார்கள் என்றாலே நான் அவருக்குச் சேர் பட்டம் சூட்டிவிடுவேன். காசு கொடுத்தால் போதும். அவர் கடவுள், நல்லவர். சமூகத்தலைவர். என்னை எப்படியோ நினைத்துக்கொள்ளுங்கள். ஆனால் நீங்கள் காசு கொடுப்பீர்களா? இல்லை. ஆனால் தலைவர் கொடுக்கிறார். அதுவும் ஊரைக் கொள்ளையடிக்காமல் சுயமாகச் சம்பாதித்த பணத்தில். ஒரே கணத்தில் இதுகாறும் கெட்டவராயிருந்தவர் எப்படி நல்லவரானார் பார்த்தீர்களா?

“Ok good” 

அவர் எதுவுமே பேசாமல் உள்ளே போனார். நான் என் காருக்குத் திரும்ப எத்தனிக்கையில் மீண்டும் வெளியே வந்தார். உள்ளிருந்து அவர் டிப்ஸ் எடுத்து வந்திருக்கவேண்டும் என்று நினைத்தேன். இங்கே பொதுவாக எவரும் டிப்ஸ் கொடுப்பதில்லை. ஆனால் கொடுத்தால் பதினைந்துவீதம் அளவுக்கு, அதாவது நாற்பது டொலருக்கு ஆறு டொலர் அளவில் கொடுப்பார்கள். ஊபர் டெலிவரிக்கு பொதுவாக அமெரிக்க, ஐரோப்பியக் குடியேறிகள்தான் டிப்ஸ் கொடுப்பதுண்டு. இவரும் அமெரிக்காவில் பணிபுரிந்திருக்கவேண்டும். அதுதான் அந்த வெள்ளைக்காரன் குணம் என்பது. நல்ல மனுசன். எங்கட ஆக்களும் இருக்குதுகளே. மாடி வீடு உள்ள பணக்காரர் என்பதால் பத்து டொலர்வரை டிப்ஸ் கொடுக்கக்கூடும். அது விநியோகக் கூலியைவிட அதிகமானது. எனக்கு உற்சாகம் மேலிட்டது.

அவர் என்னிடம் தொடர்ந்து பேசினார்.

“You study a good course, electrical or carpentry. Don’t do this forever. Uber is shit. Get a good, beautiful housewife from Sri Lanka and settle in life soon. I am an accountant, look at my house here’

சொல்லியபடியே வீட்டைப் பெருமையோடு திரும்பிப்பார்த்தார். ஆகா, கணக்காளர் என்றால் டிப்ஸ் இன்னமும் அதிகமாகலாம். இருபது டொலர் கிடைத்தால் இன்னொரு டெலிவரி இன்று இனி செய்யத் தேவையில்லை.

“I try… I will… Sir…”

அவர் கைக்குள் எதையோ ஒளித்து வைத்திருந்தது தெரிந்தது. நிச்சயம் இருபது டொலர்கள்தாம். எல்லாப்பணக்காரர்களும் ஒரேமாதிரியில்லை. நாற்பது டொலர் ஓர்டருக்கு இருபது டொலர்கள் டிப்ஸ் கொடுக்கவும் ஒரு மனம் வேண்டும். இவரைப்பார்த்தால் டிப்ஸ் கொடுப்பதற்காகவே ஓர்டர் கொடுத்தவர்போல அப்போது தோன்றினார்.

“You keep this, I can do your tax return next time”

சொல்லியபடியே என் கைகளில் தன்னுடைய பிசினெஸ் கார்டையும் ஒரு டொலர் குற்றியையும் அழுத்தினார். நான் சிரித்த முகத்துடன் அதை வாங்கி காருக்குள் வைத்துவிட்டு.“Thank you”, என்றேன். மீதித் தூஷணத்தின் சங்கிலியை இறுக்கிப்பிடித்தவாறே.