Back to Issue - 25

இரணிய நெஞ்சம்

February 8, 2024

கேதா

மூவுலகும் வென்று முடிவிலாப் புகழ் கண்டு

ஈடெனக்கு யார் இனி என்று இறுமாந்து

அகிலமெல்லாம் ஆள்வதற்காய் தான் வென்ற

அரியணையில் வந்தமர்ந்தான் திதி மைந்தன்

நெஞ்சினினிலே நிறைவில்லை நித்திரையும் வரவில்லை

சொர்க்கம் அவன் காலடியில் சொந்தமெனக் கிடந்தாலும்

சுகித்து மயங்கிட சுவை எதிலும் நாட்டமில்லை

இமயத்தைப் பெயர்த்தவனின் இதயத்தில் இன்பமில்லை

இத்தனைக்கும் காரணம் யார்? எதிரியென்று யாருமில்லை.

இந்திரனோ இவன் அடிமை தேவர்களோ சேவகர்கள்.

கண்ணசைத்தால் போதும் களம் வெல்லும் போர்ப்படைகள்

சாவையும் வென்றவனின் சங்கடத்தின் மூலம் என்ன

மாற்றானை வெல்லும் மாண்பறிந்த மன்னவனோ

தன் மகனின் மனம் வெல்ல தக்கதொரு வழியறியான்

குலவிளக்காய்ப் பெற்ற மகன் தன் குலமழித்த கொடியவனை

தினம் துதித்தல் கண்டு நிதம் பதை பதைத்தான்

அன்பாய் உரைத்தான். அசையவில்லை மகன் நெஞ்சம்

கண்டித்தான், தண்டித்தான் மனம் நொந்து நிந்தித்தான்

கடும் விதிகள் போட்டுத் தன் மகனைத் தானே சிறைவைத்தான்

கருணையோடு கொஞ்சினான் கரம் பிடித்துக் கெஞ்சினான்

காளை மனம் அலைபாயக் கன்றின் மனம் இளகவில்லை

தந்தை மொழி மந்திரமாய்ப் பிஞ்சு நெஞ்சு ஏற்கவில்லை

சுற்றி நின்று எல்லோரும் துதிப்பதிலும் மயங்கவில்லை

களத்தினிலே தந்தையைப்போல் அகத்தினிலே மகன் நின்றான்

காலடியைத் துதிப்பதற்கே காத்திருப்போர் பலரிருக்க

கண்ணோக்கி சலனமின்றிக் கடும் வாதம் புரிகின்றான்

அப்பனவன் ஆற்றலினை துச்சமென மதித்துவிட்டு

அற்பன் நாரணனை அற்புதம் என்றேத்துகிறான்

வென்றிகளைக் குவித்த என் வீரம் இவன் உணரவில்லை

உறுதவத்தால் பிரம்மனிடம் பெற்ற வரம் புரியவில்லை

இடையறாது உழைத்து இறைவனென்று ஆனவனே அருகிருக்க

அலைகடலில் அலைபவனை ஆண்டவனாய்த் துதிக்கின்றான்

இத்தனையும் பெற்றெடுக்கப் பட்ட துன்பம் தெரியவில்லை

தந்தை தொடாத் தொலைவிற்குத் தான் போகும் துடிப்பும் இல்லை

இவன்போல எனை யாரும் தலை குனிய வைத்ததில்லை

கொந்தளித்தான் கோன் குமுறுகிற எரிமலையாய்

ஏது சரி ஏது பிழை இரணியனோ அறியவில்லை

பிடிவாதம் கண்டு பெரும் கோபக்கனல் மூளும்

சினங்கொண்டு தண்டிக்க மகன் விழியோரம் நீரோடும்

எண்திசையும் களம் வென்றோன் இடிந்துபோய்க் கிடந்தான்

உள்ளிருக்கப் பிடிக்கவில்லை வெளியில் செல்ல மனமுமில்லை

வழியேதும் தெரியாமல் வாசலிலே வந்திருந்தான்

தன் மகனை வழிப்படுத்தும் தாற்பரியம் தெரியாமல்

சலனமுற்ற நெஞ்சோடு சாய்ந்திருந்தான் அரக்கர்கோன்

வாழ்வதிலே நாட்டமில்லை வாழ்ந்து ஒரு பயனுமில்லை

வெல்வதற்கும் யாருமில்லை வென்றாலும் பயனுமில்லை

மைந்தனவன் மனந்தன்னை வெல்லும் வழி தெரியாமல்

மாய்ந்துவிடல் மேலென்றால் மாய்ப்பதற்கும் யாருமில்லை

ஓயாத உறுதவத்தால் வாங்கிய சாகாவரமே

இப்போது தாளாத பெரும் சுமையாய்க் கனக்கிறது

தூண்போல நம்பியவை பொடிப்பொடியாய்ப் போய்விட

பேய்போல பல எண்ணம் அவன் நெஞ்சைக் கிழிக்கிறது

அமரரையும் அசுரரரையும் ஆண்ட பேரரசன்

ஆருயிராய்ப் பெற்றமகன் அகம் வெல்ல முடியாமல்

தான் என்ற பெருமையெல்லாம் தவிடுபொடி ஆகிவிட

வேரறுந்த விருட்சமென வீழ்ந்தான் தன்னிலத்தில்