Back to Issue - 23

ஆசிரியர் தலையங்கம் – இருமொழிக்கூடுகை

January 1, 2023

வணக்கம்.

மறுபடியும் ஒரு இளவேனில் இதழோடு உங்கள் அனைவரோடும் உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. 

சிறுவர்முதல் பெரியவர்வரை நாமெல்லாரும் நம் கதைகளைப் பிறருடன் பகிர்ந்துகொள்ள இளவேனில் சஞ்சிகை எப்போதும் துணை நின்றிருக்கிறது. இளையோர் ஆக்கங்கள், இளைஞர் கட்டுரைகள், கவிதைகள், பெரியவரின் அனுபவங்கள் என இளவேனில் எமக்குக் கொண்டுசேர்த்த படைப்புகள் ஏராளம். அதன் இன்னொரு நீட்சியாகவே இவ்விதழையும் உங்களிடையே முன்வைக்கிறோம்.  

“யாதும் ஊரே, யாவரும் கேளிர்

தீதும் நன்றும் பிறர்தர வாரா”

ஏறத்தாழ இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் சங்க இலக்கியக் கவிஞர் கணியன் பூங்குன்றனார் எழுதிய வரிகள் இவை. எல்லா ஊர்களும் நம் ஊர்களே, எல்லா மக்களும் நம் உறவினர்களே, தீதும் நன்றும் பிறர் நமக்குக் கொடுத்து வருபவை அல்ல, அவற்றை நாமே நம் செயல்களால் நமக்குக் கொடுக்கிறோம் என்கிறது இக்கவிதை. இவ்வாறான ஓர் ஆழ்ந்த, பரந்த பார்வையை நம் மூதாதையர் அன்றே கொண்டிருந்தனர் என்று பெருமை கொள்வது ஒருபக்கம் இருக்கட்டும். ஆனால் அத்தகு வரிகளை ஒரு கவிஞர் தன் காலத்தில் எழுத நேர்ந்தமைக்கான காரணம் என்ன என்பதையும் நாம் கூடவே சிந்தித்துப் பார்க்கவேண்டும். 

கண்டங்களையும் நிலங்களையும் கடந்து நாடோடிகளாகத் திரிந்த மனிதச் சமூகம் கால மாற்றத்தில் நாகரிக சமூகங்களாகப் பல நிலங்களில் நிரந்தரமாகத் தங்கி தம் வாழ்வைக் கட்டமைத்துக்கொண்டது நாம் அறிந்ததே. அப்படி வாழ்ந்த காலம் தொட்டே இது நம் நிலம், இது நம் ஊர், இது நம் மனிதர்கள், நீ வேறு, நான் வேறு, நீ வேறு இனம், நான் வேறு இனம், நம் இடத்திற்குள் நீ வராதே, உன் இடத்துக்கே நீ திரும்பிப்போ என்ற பிரிவினைகள் ஆரம்பித்திருக்கக்கூடும். பிணக்குகள் கைகலப்பில் முடிந்திருக்கும். அவை பின்னர் போராக மாறியிருக்கும். உயிரிழப்புகளும் உடமைச்சேதமும் விழுப்புண்களும் சமூகங்களிடையே மிகுந்திருக்கும். மூதாதையர் என்றாலும் அவர்களும் வெறும் மனிதர்கள்தானே. ஆகவே நம் மூதாதையரின் குணங்கள் சமகால மனிதர்களின் குணங்களினின்று உயர்ந்து நின்றிருக்கும் என்று எண்ணுவது வெற்றுச்சிந்தனை அல்லவா? இவ்வாறான கணங்களில்தான் கலைஞர்களின் சிந்தனை தம் சக மனிதர்களை மீறி உயர்ந்து நிற்பதுண்டு. தம்மிடையே பிளவுபட்டுக்கிடக்கும் மனிதர்களிடம் சென்று “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்று இடித்துரைக்கவும் விழுப்புண்ணால் வீழ்ந்துகிடப்பவரிடம் “தீதும் நன்றும் பிறர்தர வாரா” என்று எடுத்துச்சொல்லவும் கணியன் பூங்குன்றனார் போன்ற மேன்மனிதர்களால்தான் முடியும். அத்தகு மேன்மை கொள் கருத்துகள், இயற்றியவர் காலத்தையும் தாண்டி ஈராயிரம் வருடங்கள் கடந்து நம் காலத்திலும் நின்று நீடிப்பதற்குச் சங்கம் வகுத்துக்கொடுத்த தொகை நூலாளர்களும் தேவைப்படுகிறார்கள்.

இந்த நீண்ட பீடிகைக்குக் காரணம் உண்டு.

அவுஸ்திரேலியத் தமிழர்களாக நாமும் ஒரு புதிய சமூக அமைப்பிலேயே இன்று வாழ்ந்துகொண்டிருக்கிறோம். பிறிதொரு நிலத்தில் பிறந்து, வளர்ந்து, பின்னர் இங்கே குடிபெயர்ந்து இந்தப் புதிய சமூக அமைப்பினுள் தம்மை உள்ளீடு செய்யும் முதலாம் தலைமுறை மனிதர்கள் ஒரு பக்கம். அந்த மனிதர்களின் குழந்தைகளாக வீட்டிலும் வெளியிலும் வேறு வேறு வாழ்வுகளை வாழும் இரண்டாம் தலைமுறை ஒரு பக்கம். தமிழைத் தம் பாரம்பரியமாகக் கொண்ட ஆனால் அவுஸ்திரேலிய வாழ்வியலை முழுமையாக உள்ளீர்த்த மூன்றாம் தலைமுறை இன்னொரு பக்கம் என மூன்று வெவ்வேறு தலைமுறைகளை நம் தமிழ்ச்சமூகம் இப்போது அவுஸ்திரேலியாவில் தன்னகத்தே கொண்டிருக்கிறது. 

இந்த மூன்று தலைமுறைகளும் அவுஸ்திரேலியாவில் வாழும் வாழ்க்கையில் பல வேறுபாடுகள் உண்டு. அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தனித்துவமானவை. அவர்களின் அகச்சிக்கல்கள், அடையாளக் குழப்பங்கள் எல்லாமே புரிதலுக்குக் கடினமானவை. இம்மூன்று தலைமுறைகளிடத்தே இருக்கும் மத நம்பிக்கைகள், சமூகக் கோட்பாடுகள், சக மனிதரை எதிர்கொள்ளும் பார்வைகள் என எல்லாமே வித்தியாசப்படுகிறது. அவர்கள் தம்மிடையே பேசும் மொழிகூட வேறுபடுகிறது. முதலாம் தலைமுறை தம்மிடையே தமிழிலும் வெளியிலே தட்டுத்தடுமாறி ஆங்கிலத்திலும் தொடர்பாடல் செய்கிறது. இரண்டாம் தலைமுறை தம் குடும்பத்தாருடன் தமிழிலும் நண்பர்கள் வட்டாரத்துடன் ஆங்கிலத்திலும் உரையாடுகிறது. மூன்றாம் தலைமுறை எல்லோரிடத்திலும் ஆங்கிலத்திலேயே முயற்சி செய்கிறது. இவற்றில் விதிவிலக்குகள் இருக்கக்கூடும். ஆனால் பொதுவான பண்பு இதுதான். இங்கு மொழி வெறும் ஆரம்பப்புள்ளிதான். தமிழ்சார் கலாச்சாரப் பண்புகள், கொண்டாட்டங்கள், மதங்களை அணுகும் முறை, உறவுகள், குறிப்பாகத் துணை தேடல், கூடி வாழும் குடும்ப அமைப்புகள், பெரியோரைப் பேணல் என்பவற்றிலெல்லாம் இத்தலைமுறைகளின் கருத்துகள் பெரிதும் மாறுபட்டிருக்கின்றன. பொதுப்பண்புகளும் இருக்கின்றனதான். ஆனால் கருத்து வேறுபாடுகள் பெரிதும் உளது என்பதை மறுக்கவும் முடியாதல்லவா?

அப்படியானால் எது எம்மையெல்லாம் இணைத்து வைத்திருக்கும் புள்ளி?

இந்தக்கேள்விக்கான பதிலைத்தான் இம்முறை இளவேனில் சஞ்சிகை அறிய முயற்சி செய்கிறது. இதுவரை காலமும் தமிழ் என்ற மொழியே நம்மை எல்லாம் இணைத்து வைத்திருக்கும் புள்ளி என்று நாங்கள் திடமாக நம்பியிருந்தோம். அந்த நம்பிக்கையைக் கொஞ்சம் வலுவாகவே நம் இளைய தலைமுறையிடமும் திணிக்க ஆரம்பித்தோம். தமிழ் என்ற மொழி நம்மையெல்லாம் இணைக்கவல்ல மிகச்சிறந்த கருவி என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. தமிழ் மொழியை நாம் நம் எதிர்காலச் சந்ததிக்குத் தொடர்ந்து பயிற்றுவித்தல் அத்தியாவசியம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. இதிலே சமரசங்களுக்கு இடமில்லை. புலம்பெயர் சமூகத்தில் தமிழ் மொழி தழைத்தோங்க இரண்டு விசயங்கள் தொடர்ந்து நிகழவேண்டும். ஒன்று தொடர்ச்சியான புலம்பெயர்வானது தமிழ் நாடு, ஈழம் போன்ற தமிழர் தேசங்களிலிருந்து இவ்விடம் நோக்கி நகரவேண்டும். இன்னொன்று, இங்குள்ளோர் தமிழையும் அதன் பண்பாட்டுக்கூறுகளையும் தொடர்ந்து பற்றியிருத்தல்வேண்டும். இந்த இரண்டையும் நாம் தொடர்ச்சியாகச் சிறப்பாகவே செய்துவருகிறோம் என்பதில் சந்தேகம் இல்லை. 

ஆனால் இந்த மொழிப்பேணல் முயற்சியில் இருக்கின்ற அதீத ஆர்வமிகுதியால் சமயத்தில் நாங்கள் எங்களுடைய இரண்டாம் மூன்றாம் தலைமுறைகளிடமிருந்து மிகவும் விலகிப்போய்விடுகிறோம். தமிழ்மொழிமீதான பரிச்சயத்தைக் கட்டாயத் தேவையாக ஆக்குவதன்மூலம் வளர்ந்த இரண்டாம் மூன்றாம் தலைமுறையோடு கருத்தியல் ரீதியாக ஆழமாக உரையாடும் சந்தர்ப்பத்தை நாம் இழந்துவிடுகிறோம். என்னதான் நாம் முட்டி மோதினாலும் இருபதுகளைத் தாண்டிய இரண்டாம் மூன்றாம் தலைமுறை ஆங்கில மொழியிலேயே பெரிதும் சிந்திக்கிறது. தம் ஆழமான சமூகப் பார்வைகளையும் அகப் பிரச்சனைகளையும் ஆங்கிலத்திலேயே அவர்களால் விரிவாக நம்மோடு பரிமாறிக்கொள்ளமுடிகிறது. தமிழிலேயே தொடர்பாடல் செய்யவேண்டும் என்ற விதி அமைக்கப்படும்போது அந்தக் குரல்கள் தானாகவே கொஞ்சம் அடங்கிவிடுகின்றன. அல்லது அவர்கள் நினைப்பதை ஆழமாக, மொழியின் பரிச்சயமின்மையைத் தாண்டி அவர்களால் பேசமுடிவதில்லை. இதனால் நம் தலைமுறைகளுக்கிடையே இடைவெளி மேலும் அதிகரித்துவிடுகிறது. குடும்பங்களில் பெரும்பாலும் இது நிகழுவதில்லை. காரணம் அங்கே பெரியவர்கள் தமிழிலும் இளையவர்கள் ஆங்கிலத்திலும் உரையாடக்கூடிய சூழலை நாம் அனுமதித்திருக்கிறோம். ஆனால் ஏனோ அதனைப் பொதுவெளியில் நாம் அனுமதிக்கத் தவறிவிட்டோம். இதனால் நம் தமிழ்ப் பண்பாட்டு நிகழ்வுகளில், தமிழ்ச் சஞ்சிகைகளில் அந்தத் தலைமுறை தம் எண்ணங்களை ஆழமாக விரித்துரைக்கும் சந்தர்ப்பம் அறவே அற்றுப்போகிறது.

தமிழ் என்பது வெறும் மொழி மட்டுமல்ல. அது ஒரு வாழ்வியல். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னமே தனக்கான இலக்கண நூலைத் தொல்காப்பியம் எனும் மாபெரும் இலக்கியமாகவே பாடிவைத்த மொழி இது. அந்தளவுக்குத் தமிழர் வாழ்வு பெரிதும் மேம்பட்டிருந்தது. இதே “தீதும் நன்றும்” பாடலில் கணியன் பூங்குன்றனார் இன்னொரு கருத்தையும் முன்வைக்கிறார். வானத்தில் மின்னலுடன் விழுகின்ற சிறு துளி மழை நீர் ஒன்று சேர்ந்து, பெரும் ஆறாக மாறிப் பாறை, மலை தாண்டி, முட்டி மோதிச் செல்லுமாம். மனித வாழ்க்கையும் அதுபோலத்தான். அதனால் பெரியவர்களை ஏற்றிப்போற்றி வியந்து பாராட்டவும் வேண்டாம். சிறியர்களை ஏளனம் செய்தும் இகழ்தலும் வேண்டாம் என்கிறது அப்பாடல்.

“வானம் தண்துளி தலைஇ யானாது

கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று

நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்

முறை வழிப் படூஉம் என்பது திறவோர்

காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்

பெரியோரை வியத்தலும் இலமே,

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே”

கணியன் கூறிய வார்த்தைகள் நமக்கானவையே. நம் தமிழ் மொழியும் சிறு காட்டிடைக் கூட்டத்தின் தொடர்பாடல் மொழியாக ஆரம்பித்து, நம் மூதாதையரின் பயணத்தோடு அதுவும் வளர்ந்து, முகிழ்ந்து, பேராறாகி இன்று ஜீவநதியாக வளர்ந்து நிற்கிறது. அதற்குள் மொழி, பண்பாடு, பல்வேறு வழிபாட்டுக் கூறுகள், அறம், அறிவியல், கலை, இலக்கியம், இவற்றையெலாம் உள்ளீர்த்த மானுட வாழ்வு என்று சகலதும் கலந்திருக்கிறது. திணைகளுக்கமைய அது பல பரிமாணங்களை எடுத்திருக்கிறது. விஞ்ஞான வளர்ச்சியோடு மருவியிருக்கிறது. எழுத்துருக்கள் மாறியிருக்கின்றன. பல மொழிகளை உள்வாங்கியிருக்கிறது. வெறுமனே மொழியாக இன்றி தமிழ் ஒரு வாழ்வியலாகப் பிரவாகித்து நிற்பதன் சூட்சுமம் இதுவே. இந்த நதி இப்போது கண்டங்கள் தாண்டியும் பாய ஆரம்பித்திருக்கிறது. நதி தான் பாயும் நிலத்தின் குணங்களையும் தன்னகத்தே கொள்ளுமாம். தன் குணங்களை அந்த நிலத்துக்கும் பாய்ச்சுமாம். வேறு நதிகளோடு இணைந்து மேலும் பெரு நதியாக வளருமாம்.

தமிழும் அவ்வாறே. 

அதனாலேயே தமிழர்களான நாம் நாமிருக்கும் நிலம் சார்ந்து சில சமரசங்களைச் செய்துகொள்ள முனைகிறோம். நம் தலைமுறைகளோடு உரையாடத் தேவையான சந்தர்ப்பங்களில் ஆங்கிலத்தையும் கையில் எடுக்கிறோம். இங்கு நிகழ்வது இரு மொழிகளின் கூடுகை ஆகும். எம் மக்களுக்கு, எம் தலைமுறைகளுக்கு என்று தனியான கதைகள் உண்டு. அகம், புறம்சார் சிக்கல்கள் அவர்கட்கு உண்டு. மொழியைவிட நாம் அப்பிரச்சனைகளைப்பற்றி உரையாடுவதும் நம்மிடையே புரிதல்களை வளர்ப்பதும் மிக அவசியம் என்று எண்ணுகிறோம். கணியன் பூங்குன்றனாரைத் தமிழிலேயே நம் தலைமுறைகளுக்கு அறிமுகப்படுத்துதல் சாலச்சிறந்தது. ஆனால் அது முடியாத பொழுதுகளில் ஆங்கிலத்திலேனும் அவரைக் கொண்டு செல்லவேண்டும் அல்லவா? பாடலின் கருத்து மொழியினையும் தாண்டிய மானுட உயர்வுக்கானது அல்லவா? நம் இளைய தலைமுறை நமக்கு ஒரு சேதி சொல்லத் தலைப்படும்போது மொழியைக்காட்டித் தடை போடுதல் கீழ்மை அல்லவா?

அதனால்தான் இந்த இளவேனில் வெளியீட்டில் படைப்புகளை இருமொழியிலும் நாம் முயன்றிருக்கிறோம். நாம் நம் கருத்துகளைக் கொண்டுசெல்ல மொழி ஒரு தடையாகக்கூடாது என்பதே இதன் ஆதார நோக்கம். இந்த இருமொழிக் கூடுகையினூடே நாம் நம்முடைய தமிழர் வாழ்வியலைத் தேவையான காலத்தின், திணையின் பரிமாணங்களோடு கொண்டு நகர்த்த முடியும் என்று திடமாக நம்புகிறோம்.

இம்முயற்சி பற்றிய உங்கள் மேலான கருத்துகளையும் இவ்விதழின் ஆக்கங்கள் பற்றிய உங்களின் பொதுவான பார்வைகளையும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறோம்.

அன்புடன்,

இளவேனில் ஆசிரியர் குழாம்

[email protected]