Back to Issue - 24

வெற்றிடம்

September 4, 2023

இமாம்

இறுதியாக அந்த நாள் வந்தது. விடியற் காலை நானும் அப்பாவும் அம்மாவிடம் விடை பெற்று ஸ்ரீநகர் செல்லும் 7 மணி ரயிலைப் பிடிப்பதற்காக ஆயத்தமானோம். அப்பா முன் சீட்டில் டிரைவர் அங்கிளுக்குப் பக்கத்திலும், நான் பின்னாலும் அமர்ந்தோம். நான் திரும்பி அம்மாவை ஒருமுறை கார் கண்ணாடியூடாகப் பார்த்து கை அசைத்தேன். ஆனால் முன் இருக்கையில் இருந்த என் தந்தையின் தலை அம்மாவைப் பார்க்கத் திரும்பவில்லை. நிமிர்ந்து அமர்ந்திருந்தார். திரும்பி என்னைப் பார்க்கவோ பேசவோ இல்லை. என்னைக்கூட மறந்துவிடுங்கள். டிரைவர் அங்கிளுக்குச் சாலை விதிகள் குறித்து விரிவுரை செய்யாமல் அவரால் இருக்கவே முடியாது. இதற்கெல்லாம் அப்பாவிடம் ஓட்டுநர் உரிமம் கூட இல்லை. ஆனால் அன்று அப்படி எதுவும் நடக்கவில்லை. கார் பயணம் என்றும் இல்லாதவாறு கனமாக இருந்தது. எனது பள்ளியைத் தாண்டி கார் செல்லும்போது எனது புதிய பள்ளியைப் பற்றிய என் எண்ணங்கள் சிறகடிக்கத் துவங்கின.

நான் எனது புதிய பள்ளியைப் புகைப்படங்களில் மட்டும்தான் பார்த்திருந்தேன். சாந்தன் அண்ணா பள்ளியைப் பற்றி நிறைய விசயங்கள் சொன்னார். புதிய பள்ளிக்குச் செல்ல நான் மிக்க ஆவலாக இருந்தேன். நான் படித்த பள்ளியுடன் ஒப்பிடும்போது எனது புதிய பள்ளி மிகப்பெரியது. எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தத் தமிழ் ஆசிரியர் இராசையாவிடம் இருந்து தப்பித்து விட்டேன். அவர் மனித உருவத்தில் நடமாடும் ஒரு பிசாசு என்றால் மிகையாகாது.  தமிழில் எழுத்துப் பிழை இருந்தால் அவர் என் தலையை அப்படியே சாப்பிட்டிடுவார். தமிழில் 247 எழுத்துக்களில் உள்ள அனைத்து நுணுக்கங்களையும் ஒரு எட்டு வயது சிறுமியால் எப்படி ஞாபகத்தில் வைத்திருக்க முடியும்? அதோடு ஒப்பிட்டுப் பார்க்கையில், ஆங்கிலத்தில் 26 எழுத்துக்கள் மட்டுமே கற்றுக்கொள்ள வேண்டும். ஆகவே புதிய பள்ளியில் நான் கெட்டிக்காரியாக இருக்கப் போகிறேன் என்ற உற்சாகம் எனக்குத் தோன்றியது. மேலும், புதுப் பள்ளியில் ஒரு நீச்சல் குளம் இருக்கிறது. அங்கு நான் நீந்தி விளையாடப் போகிறேன் என்ற எண்ணம் என்னுள் மிகுந்த உற்சாகத்தை தந்தது. இப்படிப்பட்ட மகிழ்ச்சியான எண்ணங்களோடு, அப்பாவுடன் ரயிலில் ஏறிக் கண்டி ஸ்டேஷனை வந்தடைந்தேன்.

அப்பொழுதுதான் முதன் முறையாக நான் யதார்த்தத்தை உணர ஆரம்பித்தேன். மதியம் சுமார் 2 மணியளவில் சூரியன் பிரகாசித்த போதும், குளிர் நடுக்கமாக எனக்கு இருந்தது. நானும் அப்பாவும் ஒரு டாக்ஸி பிடித்து, எங்கள் மீதி பயணத்தைத் தொடர்ந்தோம். நான் ஸ்ரீநகருக்கு இதற்கு முன்னர் வந்திருக்கிறேன். ஆனால் இந்த மாதிரியான ஒரு வளைந்த மலைப் பாதையூடாகப் பயணித்ததில்லை. ஸ்ரீநகரில் சுற்றுலாப் பகுதிகளை மட்டுமே பார்த்துவிட்டுத் திரும்பிச் சென்றிருக்கிறோம்.

வளைந்த மலைச் சாலையில் செல்லும்போது எனக்குக் காது அடைத்துவிட்டது. நான் அதை அப்பாவிடம் சொன்னபோது ஒரு பதிலும் அவரிடம் இருந்து வரவில்லை. முதலில், அவரின் காதுகளும் அடைக்கப்பட்டிருக்குமோ என்று நினைத்தேன். தாங்க முடியாமல் நான் சத்தமாகக் கத்தியபோது, அவர் திடுக்கிட்டு வேறு உலகத்திலிருந்து வந்தவர்போலத் திரும்பி என்னைப் பார்த்து, “என்ன ஆச்சு உனக்கு?    நீ நல்லா இருக்கிறியா? உனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லையே?” என்று கேட்டார். ஆனாலும் ஒரு காது வலிக்கு இத்தனை கேள்விகள் கொஞ்சம் அதிகம் தான் என்று உணர்ந்து, காது வலியையும் மீறி எனக்குச் சிரிப்பு வந்தது. “என்னப்பா, நித்திரையாகிட்டீங்களா?”  என்று கேட்டேன். அவர் முதல் முறையாகத் தலையை என் பக்கம் திருப்பி, என்னை அமைதிப்படுத்தும் விதமாக என் சிறிய கைகளை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டார். “இன்னும் கொஞ்ச நேரத்தில் பள்ளிக்கூடம் வந்திடும்,” என்று அன்புடன் சொன்னார். அவர் அப்படி எனக்கு ஆறுதல் சொன்னபோதும், கண்கள் எட்டிய தூரம் வரை, என் கற்பனையில் இருந்த அந்தப் பெரிய பள்ளி ஒன்று இந்த இடத்தில் இருப்பதற்கான எவ்வித அடையாளத்தையும் என்னால் யூகிக்க முடியவில்லை.

இறுதியாக டாக்சி ஒரு பெரிய கேட் முன் நின்றது. நாங்கள் யார் என்பதைச் சோதிக்கக் காவலாளி காரை நோக்கி வந்தார். அவர் வேறு மொழியில் பேசினார். அப்போது மீண்டும் எனக்குள் ஒரு பதற்றம் துவங்கியது. அப்பாவோ அவருக்கு நிதானமாகப் பதிலளித்து, பையிலிருந்து சில ஆவணங்களைக் காண்பிப்பதற்காகத் தன் கைகளை என் கையிலிருந்து விடுவித்தார். ஆனால் அப்பாவின் கைகளை விட நான் தயாராக இல்லை. அவர் கைகளை முன்பைவிட இறுக்கமாகப் பிடித்துக்கொள்ள விரும்பினேன். எனக்கு அந்த வயதில், அப்போதே எல்லாம் கடந்து போய்விட்டது என்று புரியவில்லை!

அந்தப் பெரிய வாயில் வழியாக உள்ளே நுழையும்போதே, இது என் வாழ்க்கையையே புரட்டிப்போடப் போகுது என்று தெரிந்திருந்தால், நான் காரை விட்டு இறங்கி ஓடியே போயிருப்பேன். அம்மா சொல்லியிருக்கிறார், எனக்கு இரண்டு வயதாக இருந்தபோது எனக்கு யானை பொம்மை என்றால் ரொம்பப் பிடிக்குமாம். நான் எல்லோரிடமும் யானை பொம்மை கேட்பேனாம். எதைக் கேட்டாலும் ‘யானை, யானை’ என்பேனாம். ஆகவே எனக்கு மூன்று வயதாக இருக்கும் போது அம்மாவும் அப்பாவும் என்னை ஒரு யானையைப் பார்க்க அழைத்துச் சென்றார்களாம். அந்தப் பெரிய மிருகத்தைப் பார்த்ததும் நான் பயந்து அழத் தொடங்கிவிட்டேனாம். அது போலத்தான் இன்றும். இவ்வளவு நேரமும் நான் கற்பனை செய்துகொண்டிருந்த பிரமாண்டமான பள்ளி வளாகத்துக்கு வந்தும், நான் எவ்விதச் சந்தோசமும் அடையவில்லை. சந்தோசம் அடைய என்ன இருக்கிறது இங்கே என்று நினைத்தேன்.

டாக்ஸி ஐந்து நிமிடங்களில் கற்களால் அமைக்கப்பட்ட தேவாலயத்தைக் கடந்து, பல பள்ளிக் கட்டிடங்களையும், மைதானங்களையும்   கடந்து, இறுதியாக ஒரு கட்டிடத்தின் முன் வந்து நின்றது. இங்கே ஒரு அழகான கன்னியாஸ்திரி சிரித்த முகத்துடன் எங்கள் வருகைக்காகக் காத்து நின்றார். அப்பா அவரை வணங்கி, டாக்ஸியில் இருந்து என் பொருட்களை இறக்க ஆரம்பித்தார். ஆம் நான் இந்தப் பள்ளியில் தான் இன்று தொட்டுப் படிக்கப் போகிறேன்.

நான் அப்பாவைப் பிரிந்து என் வாழ்வில் தனியாக வாழவேண்டும் என்ற எண்ணமே என்னுள் ஒரு நடுக்கத்தைப் பாய்ச்சியது. அப்போதெல்லாம் நான் ரொம்ப மெலிவாக இருப்பேன். என் சுருண்ட கூந்தல் என் எடையில் பாதி இருக்கும் போலத் தோன்றும் என்று பழைய பள்ளிக்கூடத்தில் சிலர் சொல்லிச் சிரிப்பார்கள். நான் நடுங்குவதை அவதானித்த கன்னியாஸ்திரி என் அருகில் வந்து “நீங்கள் ஏன் உங்கள் ஜம்பரை அணியக்கூடாது?  இங்கு சூரியன் மறையும்போது, பனிக்குளிர்ச்சியாக இருக்கும்” என்று அன்பாகக் கூறினார். அவர் நல்லவராக இருந்தாலும், நான் உடனேயே அப்பாவைத் தேடத் துவங்கினேன். அப்போது மாலை 4 மணிக்கே இருளத்தொடங்கியது என்று உணர்ந்தேன். நாங்கள் வந்த சாலையைத் திடீரென மூடு பனி மறைத்துவிட்டது. டாக்ஸியின் மறுபக்கம் நின்ற அப்பாவைக் காணாமல் என் கண்கள் பதறத் துவங்கின. அவரைக் கண்டதும் நான் அவரைக் கட்டிப்பிடித்துத் திரும்ப வீட்டிற்கே செல்லலாம் என்று நினைத்தேன். ஆம் எனக்கு இது ஒன்றும் வேண்டாம், நான் வீட்டுக்குப் போகப் போகிறேன் என்று கத்த நினைத்தேன். நினைப்பதைத்தவிர வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை.

திடீரென்று எல்லாம் வேகமாக நகர்வதாக உணர்ந்தேன். கன்னியாஸ்திரி என் அறையைக் காட்டினார். அப்பா என் பொருட்களை எடுத்து அறையில் அடுக்கி வைக்க எனக்கு உதவினார். எனது புதிய தோழிகள் ஹம்சா, சச்சினி, மற்றும் லயோலா அறிமுகமானார்கள். நான் அவர்கள் முகத்தைப் பார்த்தேன். எல்லாமே வெறுமையாக, இயந்திரத்தனமாக நடந்துகொண்டிருந்தது போலத் தோன்றியது. இறுதியாக அந்தத் தருணம் வந்தது. “இனி உங்கள் மகளைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம். அவர் எங்கள் பொறுப்பு. நீங்கள் இப்போ அவரிடம் இருந்து விடைபெற்றால் தான், கடைசி ரயிலைப் பிடிக்கலாம்,” என்றார் கன்னியாஸ்திரி.

அப்பா அவரை புன்முறுவலுடன் பார்த்து, என் முன் வந்து முழங்காலில் அமர்ந்தார். தன் முகத்தை என் முகத்தின் மட்டத்தில் வைத்து, என் கண்களை நேராகப் பார்த்து, “நீயும் நானும் அம்மாவுக்காகத் தான் இதைச் செய்கிறோம். இந்த ஏற்பாடு கொஞ்சக் காலத்துக்குத் தான். அம்மா குணம் அடைந்ததும், நானே வந்து உன்னைக்கூட்டிக்கொண்டு போவேன். எல்லாம் திரும்பவும் பழையபடி ஆகிடும். அதுவரைக்கும் நீ படிப்பில் கவனம் செலுத்து. இங்கே உன்னை நல்ல வடிவா, பாதுகாப்பா பாப்பினம். நீ விளையாட விரும்பும் எல்லா விளையாட்டுகளும் இங்கே சொல்லித்தருவினம். எல்லாம் உன் நன்மைக்காகத்தான். பின்னர் ஒரு காலத்தில் நீ இங்கே படித்ததை நினைச்சு பெருமைப்படுவாய். நீ நல்லா படிச்சு பெரிய ஆளாக வந்தால், அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அதைவிட வேறு என்ன சந்தோசம் இருக்கு?”  இப்படி அவர் சொல்லும்போதே அப்பாவின் குரல் கரகரக்கத் தொடங்கியது. உடனே அவர் என்னை மிகவும் இறுக்கமாக அணைத்துக்கொண்டு ஒரு வினாடி நின்றார். மீண்டும் என்னைச் சுத்தியிருந்த தன் கைகளை விடுவித்து, திரும்பிப் பாராமல் டாக்ஸியை நோக்கி நடந்தார். எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கு.  நான் என்னால் முடிந்த வரையிலும் அவரை இறுக்கி கட்டிப்பிடித்துக் கொண்டுதான் இருந்தேன். ஆனாலும் அப்பா எப்போதுமே என்னைவிடப் பலசாலிதான். நான் தோற்றுவிட்டேன்.

நாங்கள் ஸ்டேஷனில் இறங்கியதிலிருந்து நான் அடைத்து வைத்திருந்த கண்ணீரை இதற்கு மேலேயும் கட்டுப்படுத்த என்னால் முடியவில்லை. எல்லாமே வெடித்து ஓடியது. நான் சத்தம் போட்டு அழுதேன். மற்றவர்கள் என்னைப் பார்க்கிறார்கள் என்று எனக்குத் தெரிந்தும், அதற்காக இந்தக் கண்ணீர் வெள்ளத்தை நான் கட்டுப்படுத்த இயலவில்லை. நான் ‘அப்பா. அப்பா’ என்று கத்தினேன். ஆனால் அவர் என்னிடமிருந்து விலகி நடந்து, மீண்டும் டக்ஸியில் ஏறினார். என்னுள் ஏற்பட்ட அந்த தீராத அழுகையை, கவலையை, கண்டுணர்ந்த அந்த அன்பான கன்னியாஸ்திரி, அப்பா என் பார்வையிலிருந்து மறையும் வரை, என் பின்னால் இருந்து என்னை அணைத்துக் கொண்டார். இருவரும் சிறிது நேரம் அப்படியே நின்றோம். எஞ்சிய நாள் முழுதும் அவர் என்னுடன்தான் இருந்தார்.

அப்பாவை இன்னொரு முறை பார்க்க மனம் ஏங்கியது. ஆரம்பத்தில் இரவுகள் எனக்கு மிகுந்த பயத்தைக் கொடுத்தன.  என் மனம் அப்பாவைத் தாண்டிச் செல்ல மறுத்தது. மீண்டும் மீண்டும் மனது அவருடன் இருக்க வேண்டும் என்றே விரும்பியது. பகலில் படிப்பு நேரம் தவிர, நான் விளையாட்டில் ஈடுபட்டபடியால், இரவில் இலகுவாகத் தூங்க முடிந்தது எனக்கு. ஆகவே பகலில் அதிக நேரத்தை விளையாட்டில் செலவிட என்னைத் தூண்டியது. பரபரப்பான அட்டவணையுடன் ஒரு வருடம் விரைவாக ஓடிச் சென்றது. ஹம்சா, சச்சினி மற்றும் லயோலா எனது நல்ல நண்பிகள் ஆனார்கள். பெரும்பாலான நாட்கள் நான் மகிழ்ச்சியாகத்தான் இருந்தேன். ஆனாலும் என் ஆழ்மனதில் விரைவில் என் பெற்றோரிடம் திரும்பிச் செல்ல வேண்டும் என்ற ஆசையும் இருந்தது. எனது பழைய பள்ளியிலேயே மீண்டும் சேரவேண்டும் என்றெல்லாம் யோசித்தேன். இந்தப் புதுப் பள்ளியில் எல்லோரும் என்னைவிட நல்லா ஆங்கிலம் பேசுவதை நான் உணர்ந்ததிலோ என்னவோ, தமிழ் கடினமாக இருந்தாலும் ஆங்கிலத்தில் எல்லாப் பாடங்களையும் படிப்பது அதைவிட மிகவும் கடினமாகத் தெரிந்தது எனக்கு.

கோடை பள்ளி விடுமுறைக்கு அப்பா என்னை அழைத்துச் செல்ல வருவார் என்ற மகிழ்ச்சி எனக்குள் ஈஸ்ட்டர் விடுமுறைக்கு முன்னரே தொடங்கியது. ஆனால் ஆச்சரியம் என்னவென்றால், அப்பா ஒரு மாதத்துக்கு முன்பே அறிவிப்பு இல்லாமல் வந்து நின்றார். நான் அப்பாவைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். அதைவிட அதிகமாக மகிழ்ச்சியடைந்தேன். அவரது அறிவிப்பின்றிய வருகை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அம்மா குணமடைந்து விட்டார். அதனால்தான் என்னை மீண்டும் அழைத்துச் செல்ல வந்திருக்கிறார் என்று ஆனந்தம் அடைந்தேன். ஆனால் என் வாழ்க்கையின் நிகழ்வுகள் என் எண்ணங்களுக்கு நேர்மாறாக நடக்கின்றன. அப்பா வந்தது, அம்மாவின் இறுதிச் சடங்கிற்கு என்னை அழைத்துச் செல்ல என்று தெரிந்தபோது   தாங்கொணா அதிர்ச்சியும் சோகமும் அடைந்தேன்.

அப்பாக்கள் பொதுவாகப் பெண் குழந்தைகள் மீது அதீத அன்பு கொண்டிருப்பதானாலோ என்னவோ, மகள்களுக்கும் அம்மாவைவிட அப்பாவிடம் அன்பு சற்று அதிகம். அதில் நான் மட்டும் விதிவிலக்கா? குழந்தையாக இருந்ததிலிருந்தே நான் அப்பாவுடன் ஒட்டிக்கொண்டே இருப்பேன். எனக்குப் பயங்கரமான கனவுகள் வந்தால்,  நான் என் பெற்றோர் அறைக்கு ஓடிச் சென்று அவர்களுக்கு நடுவில் தூங்குவேன். அப்பாவைக் கட்டிப்பிடித்தபடி தூங்குவேன்! இப்போது நினைக்கும்போது, என் சிறு பிராயத்திலிருந்தே என் உள் மனசு எனக்கும் அம்மாவுக்குமான தொடர்பு நீண்ட காலமானதல்ல என்று உணர்த்தியிருக்கிறது போலும். அதுதான் என்னவோ, நான் அம்மாவுக்குக் கடைசியாக கார் ஜன்னல் வழியாக கை அசைத்த தருணம்கூட அம்மாவின் கண்களில் எதுவுமே எனக்குத் தெரியவில்லையோ. இல்லை. தெரிந்துகொள்ள நான் விரும்பவில்லையோ? ஒருவேளை நான் அவரை அப்பாவை போல் ஆழமாகப் பார்த்திருந்தால் இன்று அம்மா உயிருடன் இருந்திருப்பாரோ என்று எண்ணத் தோன்றியது எனக்கு. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். புதுப் பள்ளி நான் சிந்திக்கும் விதத்தில் ஏற்கனவே ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்திவிட்டிருந்தது. 

எல்லாக் காரியங்கள் முடிந்தும் நான் நான்கு மாதங்கள் வீட்டிலேயே இருந்தேன். மீண்டும் பள்ளிக்குச் சென்று தங்கிப் படிக்க எனக்கு விருப்பம் இல்லை. அதுவும் அப்பாவை வீட்டில் தனியே விட்டுச் செல்வதை என்னால் ஏற்க முடியவில்லை. ஆகவே திரும்பும் நேரம் வந்ததும், நான் வீட்டிலேயே இருக்கலாமா என்று அப்பாவிடம் கேட்டேன். ஆனால் நான் ஒரு பொம்பளப்பிள்ளை என்ற காரணத்தால், அம்மா மாதிரி தன்னால் என்னைப் பார்த்துக்கொள்ள முடியாது என்று அப்பா ஆணித்தரமாக நம்பினார்.  குறிப்பாக அம்மா நம்முடன் இல்லாத போது நல்லபடியா, கெட்டிக்காரியா என்னை வளர்த்தெடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக நின்றார். அவர் விருப்பப்படி திரும்பவும் பள்ளியில் தங்கிப் படிக்கச் சென்றேன். மீண்டும் ஆரம்பத்திலிருந்து எல்லா உணர்வுகளும் ஒன்றன் பின் ஒன்றாக வரத் தொடங்கின.  அதனால் அன்று முதல், பள்ளிப் படிப்பை முடிக்கும் வரை, விடுமுறையில் நான் வீட்டிற்குச் செல்வதில்லை. மாறாக, விளையாட்டு மீது என் முழுக் கவனத்தையும் செலுத்தினேன். விளையாட்டு தொடர்பான போட்டிகள், மற்றும் சிறப்புப் பயிற்சிகளில் மூழ்கினேன். இன்று உங்கள் முன் சர்வதேச நீச்சல் வீராங்கனையாக நிற்கிறேன்.