Back to Issue - 24

விளையாட்டாப் போச்சு  

September 4, 2023

இரமகத்துல்லா

அன்று அலுவலகம் செல்ல இரயில் ஏறியதும் ஜெகாவைப் பார்த்தேன். ஜெகா. என்னை விட 20, 22 வயது சின்னவன். மனைவி சித்ரா. 6 மற்றும் 4 வயது என இரண்டு குழந்தைகள். அழகான, சின்ன, இளம் குடும்பம். அவுஸ்திரேலியா வந்த நாளிலிருந்து மிகவும் பழக்கம். நிறைய விஷயங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுபவன். கிட்டத்தட்ட 3 வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் பார்க்கிறேன்.

“ஜெகா… எப்படி இருக்கப்பா? பாத்து வருசக்கணக்காச்சு. வீட்ல எப்படி இருக்காங்க? குழந்தைங்க எப்படி இருக்காங்க? நல்லா வளந்துருக்குங்க இல்ல?” என்றபடி ஜெகாவுக்கு எதிரே இருந்த காலி இருக்கையில் அமர்ந்தேன்.

“ஆமாண்ணே, ரொம்ப நாளாச்சு. நாங்க எல்லாரும் நல்லா இருக்கோம். உங்க வீட்லே அண்ணி, தம்பி பயலுக எல்லாரும் சௌக்கியமா? பசங்க ரெண்டும் நல்லா வளர்ந்துட்டாங்க… சின்னவன் இப்போ “கிண்டர்”ல இருக்கான்.  பெரியவன் ஸ்கூல் போக ஆரம்பிச்சிட்டான். அவங்கம்மா, இப்பவே என்னென்ன டுயுஷனுக்கு அனுப்பணும்னு லிஸ்டு போட ஆரம்பிச்சிட்டா”

சிரித்துக்கொண்டே “கடகட”வென ஒப்பித்தான்.

“அப்படியா… ஸ்கூல் போற அளவுக்குப் பெரிய ஆளு ஆயிட்டாரா பெரியவரு? அது சரி, 6 வயசு புள்ளைக்கு என்னாப்பா டியூஷன் இப்போ? பாவம், சின்ன கொழந்தைதானே. ஜாலியா ஸ்கூல் போயிட்டு வரட்டும்… இன்னும் நிறைய வருஷம் இருக்குப்பா. அதுவரைக்கும், நல்லா விளையாடிக்கிட்டு, பொழுது போக்கிட்டு வரட்டும்…”

“சரியாப் போச்சுண்ணே. விளையாட்டா… அவ்ளோதான். அந்த வார்த்தையை சொன்னாலே சித்ரா டென்ஷன் ஆயிடுவா. எங்க நண்பர்கள் வட்டத்துலே உள்ள பசங்க எல்லாம் North Shore, EDU Kingdomன்னு செம பிசியா இருக்காங்களாம். அதனாலே, நானும் என் புள்ளைய அதுலே எல்லாம் போடணும்ன்னு ஒத்தக்கால்லே நிக்கிறா” என்றான், பரிதாபமாக.

“இருக்கட்டும்பா. படிப்பு தேவைதான்… ஆனால், ஏன் “விளையாட்டு” வேணாம்ன்னு சொல்லணும்? அதுவும் ஒரு வகையில் முக்கியம்தானேப்பா. உனக்கே தெரியும்தானே, என் ரெண்டு பயலுகளும் பாஸ்கெட்பால் விளையாடறவங்கன்னு… விளையாடறதிலே என்ன தப்பு?”

“அது என்னமோ தெரியலைண்ணே. எங்க வட்டத்துலே, யாருடைய பசங்களும் எந்த Games ம் ஆடறதில்ல. விளையாடிட்டு வந்தா படிக்க நேரம் இருக்காது, தூங்கிட்டே இருப்பாங்கன்னு என்னென்னவோ சொன்னாங்க.”

“ஆனா அண்ணே, உங்க பசங்களும் Basketball விளையாடுனாங்க. ஆனா, நல்லா படிச்சு, “Selective School” போனாங்கதானே? எப்படிண்ணே? அவங்களுக்கு இந்த பிரச்சனை இல்லையா? நீங்களும், அண்ணியும் எப்படி இதை சமாளிச்சீங்க?”

“ஜெகா, எங்கப்பா சின்ன வயசுலயே என்னை விளையாட அனுப்புனாரு. அது எனக்கு வாழ்க்கையில ரொம்ப உபயோகமா இருந்துச்சு. அதனால, அதையே நான் என் பசங்களுக்கும் தரணும்ன்னு நினைச்சேன்… அவ்ளோதான். நீ நினைக்கிற மாதிரி “விளையாட்டு”ங்கறது வெறும் Extra Curricular Activity மட்டும் இல்ல. அது ஒரு வாழ்க்கைப் பாடம். ஸ்கூல்ல, புத்தகத்தில எல்லாம் சொல்லித் தர முடியாத ஒரு பாடம்.  விளையாட்டு மூலமா பசங்க நிறைய பண்புகளை கத்துக்கிட வாய்ப்பு இருக்கு… ஒவ்வொண்ணா விளக்கமா சொல்றேன், கேளு.”

“விளையாட்டுல ரெண்டு விதம் இருக்கு. தனி நபர் விளையாட்டு (Individual Sport) மற்றும் குழு விளையாட்டு (Team Sport).  நான் தனிப்பட்ட முறையிலே “குழு விளையாட்டு” (Team Sport) க்கு பெரிய விசிறி… ஏன்னா, நானே ஒரு Basketball Player. என்னுடைய 7வது வயசுலே ஆட ஆரம்பிச்சு இன்னும் விளையாடறேன். பயிற்சியாளனாவும் (Coach) இருக்கேன். இன்னும் குறிப்பா சொல்லணும்ன்னா, கிரிக்கெட், பாட்மிண்டன் மாதிரி குழு விளையாட்டுகளைக் கூட நிறைய பேர் முறையான பயிற்சி இல்லாம விளையாடறதைப் பாத்திருக்கேன்… ஆனா கூடைப்பந்தாட்டம் (Basketball) மாதிரி ஒரு சில விளையாட்டுகள்தான் முறையான பயிற்சி இல்லாம, யாரும் சொல்லித் தராம ஆட முடியாது. அப்படி ஒரு பயிற்சியாளர் சொல்லி கொடுத்து விளையாடும்போது, விளையாட்டு விதிகள், விளையாடும் முறை என பயிற்சியாளர் சொல்பேச்சு கேட்டு நடக்க வேண்டிய கட்டாயம் வரும்போதுதான், அங்கே பசங்க ஒழுக்கத்தையும் (Discipline), கீழ்ப்படிதலையும் (Obedience) கத்துக்குறாங்க. அதனாலே, இந்த மாதிரி விளையாட்டுகளை பசங்க ஆடுனா, அதுலே நிறைய நல்ல விஷயங்களை கத்துக்கலாம்.”

நான் சொல்லச் சொல்ல என் வாயையே பார்த்துக்கொண்டு இருந்தான் ஜெகா.

“அண்ணே, விளையாட்டா விளையாட்டைப் பத்தி பேச இவ்ளோ விஷயம் இருக்காண்ணே. யே யப்பா, ஒரு சாதாரண ஆளா, எனக்கு, என் பசங்களுக்கு விளையாட்டால என்னென்ன பலன்கள் இருக்குண்ணே?”

“அடுத்து அங்கதாம்பா வர்றேன். நான் என்னோட Basketball அனுபவத்தையே வச்சு சொல்றேன். என்னோட சின்ன வயசுல, நம்ம ஊர்ல நிறைய Indoor, Outdoor விளையாட்டுகள் விளையாடுவோம். அதுல பார்த்தேன்னா ஜெயிப்போம், தோற்போம், சண்டை போடுவோம்… அப்போ, அதுல இருக்கிற ஏற்ற, இறக்கங்கள் புரியும். ஆனா, இந்தக் காலத்து பசங்க வெறுமே gadget dependent ஆ இருக்கிறதால, இந்த விஷயங்கள் எல்லாம் அவங்களால அனுபவிக்க முடியல. ஸ்கூல்லயும் பரீட்சைன்னு பெருசா கிடையாது. ஏன், “போட்டி”ன்னு ஒண்ணே கிடையாது. ஆனா, ஒரு பரீட்சைன்னு நடந்து, அதுலே எதிர்பார்த்த மார்க் கிடைக்கலைன்னா, ஒரேயடியா சோர்ந்து போய் உட்கார்ந்துடுவாங்க… அல்லது ஒரு போட்டி நடந்து அதுலே தோத்துட்டாலும், தளர்ந்து போயிடுவாங்க. இது வரைக்கும் புரியுதா?”

ஜெகா ஒன்றும் சொல்லாமல் வெறுமே தலையை மட்டும் அசைத்தான். நான் தொடர்ந்து, “அதாவது, “போட்டி”ன்னு இல்ல. எது பண்ணாலும் அதுல “வெற்றி” மட்டுமே கிடைக்க வேண்டும்… “தோல்வி” என்பதே இருக்கக்கூடாது. அதிலும் “First” ஆக மட்டுமே வரவேண்டும்ன்னு சொல்லிச் சொல்லி வளர்க்கப்படுகிற நம்ம பசங்களுக்கு வாரா வாரம், ஒரு Match. அதுல சில வாரங்கள் வெற்றி. சில வாரங்கள் தோல்வின்னு ஒரு அணியாக (Team) 8, 10 பேர் எதிர்கொண்டா எப்படி இருக்கும்?”

“என்னண்ணே சொல்றீங்க? கூடி உக்காந்து, கும்பலா பொலம்பறதையா சொல்றீங்க?”

“பொலம்பறது இல்ல ஜெகா… பொறுமையா, எதனாலே வெற்றி கிடைச்சுது… அல்லது தோல்வி அடைய காரணமான தவறுகள் என்னென்ன அப்படிங்கறதை விலாவரியா ஆராயறது, வெற்றியோ, தோல்வியோ அதை தனி ஒரு நபர் மேல் குறிப்பிடாமல் ஒட்டு மொத்த அணியாக பொறுப்பேற்பதுதான் இதன் தனித்தன்மை. அப்போ, பசங்க, ஒவ்வொரு வாரமும், வெற்றி, தோல்வியை சந்தித்து, அந்த இரண்டையும் எப்படி எதிர்கொள்வது (Situation Handling) என்று கற்றுக்கொள்கிறார்கள். எவ்ளோ பெரிய விஷயம் இது?”

“இதனால பசங்களோட மனநிலை எப்படி ஆகுதுன்னா… வெற்றி கிடைத்தால் அதை மயக்கமோ, மமதையோ இல்லாம சாதாரணமா எடுத்துக்கிறதும், தோல்வி அடைந்தால், துவண்டு போகாம அதை தைரியமா எதிர்கொண்டு, அடுத்த வாய்ப்புல (Match) தப்பை சரி செஞ்சுக்கிட்டு, எப்படி வெற்றி அடையறதுன்னு முயற்சி பண்றதுமா மாறிடும். இதான் தன்னம்பிக்கையின் (Self Confidence / Self Belief) அடிப்படை. அதே போலத்தான், ஒரு நல்ல move / skill display செய்தால் அதை அப்போதே பாராட்டும் மனமும், தவறு நடந்தால், உடனே தட்டி கொடுத்து, “பரவாயில்ல, அடுத்த முறை சரியாக செய்யலாம்” (Never mind, next time) என்று புரிந்து கொள்ளும் பக்குவமும் கூட பசங்களுக்கு வந்துடும்”

“இது போக, நான் பயிற்சியாளனா (Coach) இருக்குற அணியில, பசங்க கிட்ட, ஒவ்வொரு வாரமும், ஒவ்வொரு பையனையோ, பெண்ணையோ அன்னைக்கு ஆடுன ஆட்டத்தை பத்தி, அவங்களோட கருத்துகளை (Pep-talk) சொல்லச் சொல்வேன். அப்போ, அவங்களுக்கு தன்னை அறியாமலேயே Analytical Skills மற்றும் Leadership போன்ற குணங்கள் வந்து சேரும். தொடர்ந்து, பல வருஷங்களுக்கு இந்த பயிற்சி இருந்தா பசங்க வாழ்க்கை எப்படி இருக்கும்? இந்த ரெண்டும், இன்னைக்கு உனக்கு, உன்னோட Professional Career ல, எவ்ளோ முக்கியமான விஷயம்ன்னு தெரியும்தானே?”

“என்னண்ணே, திடீர்னு இவ்ளோ பெரிய விஷயத்தை சாதாரணமா சொல்றீங்க? விளையாட்டாலே இதெல்லாம் சாத்தியமா? நம்புற மாதிரியும் இருக்கு… நம்ப முடியாத மாதிரியும் இருக்கு”

“நம்பித்தான் ஆகணும். “சித்திரமும் கைப்பழக்கம்”ன்னு சொல்லுவாங்க தெரியுமா? அதுலே இதுவும் அடங்கும். இன்னும் சொல்றேன் கேளு”…

“இன்னைக்கு, நாடு இருக்குற இருப்புக்கு, மத்தவனுக்கு எது நடந்தா நமக்கென்ன… நாம பாட்டுக்கு ஒரு ஓரமா அமைதியா இருந்துக்கிடுவோம்ன்னுதானே இருக்கு. ரோட்ல அடிபட்டு கெடக்கிறவனை காப்பாத்தாம, செல்ஃபி எடுக்குற சமூகம்தானே பொதுவா இன்னைக்கு வளர்ந்து வருது…”

ஆனா, ஒரு Sportsman வாழ்க்கைல, அதுவும் முக்கியமா Team Sport விளையாடறவன் வாழ்க்கைல, அது வேற மாதிரிப்பா. உதாரணத்துக்கு, Basketballல, பந்தை கூடைக்கு கொண்டு போறதுக்குள்ள எவ்ளோ இடர்பாடுகள் வரும் தெரியுமா? அதை நீ ஒரு ஆளு, தனியா செய்ய முடியாது. உன்னோட அணியினரோட ஒத்துழைப்பும், உதவியும் தேவை. அதே போல, உன்னோட ஒத்துழைப்பும், உதவியும் உன்னோட அணிக்குத் தேவை… இதுக்கு பேருதான் “Give & Take”, “Sharing”. இது போக, விளையாடும்போது நீ கீழ விழுந்துட்டாலோ, அல்லது உன் அணியை சேர்ந்தவன் கீழ விழுந்துட்டாலோ, ஏன், உன் எதிராளியே கீழ விழுந்துட்டாலோ கூட, அவனை கை கொடுத்துத் தூக்கி விடறது ஒரு Sportsman னுடைய தலையாய பண்பு. பொது வாழ்க்கைல இதை பொருத்திப் பார்த்தா, ஆபத்துல இருக்கிறவனை, யாருன்னு கூடப் பார்க்காம காப்பாத்துற செயல் இது. இதுக்கு பேருதான் “Caring”

ஆக, “Give & Take”, “Sharing & Caring” மாதிரி குணங்கள் இல்லேன்னா உன்னால விளையாட்டுல வெற்றி பெற முடியாது… இந்த பண்புகளை பசங்க வளர்த்துக்கிட்டாதான், ஒரு அணியா அவங்க வெற்றி பெற முடியும். இதையெல்லாம் நீ எங்கே போய் படிச்சு உன் பசங்களுக்கு சொல்லித் தர முடியும், சொல்லு? இன்றைய தலைமுறைல இந்த மாதிரி குணங்களோட பசங்களப் பாக்குறதே கொறைச்சல்தானே”     

“ரொம்ப சுவாரஸ்யமாவும், அதே நேரம் வாழ்க்கைக்கு ரொம்பவே உபயோகப்படற பண்புகள்ண்ணே… ஆமா, இந்த (விளையாட்டு) உலகத்தில, Parents ஆ, நீங்க, அண்ணி எல்லாரும் எப்படி கலந்தீங்கண்ணே? இதுல, நமக்கு என்ன இருக்கு?”

“இந்தா, அடுத்து அந்த ஜாலியான விஷயத்துக்குத்தான் வர்றேன்… விஜயகாந்த் ஸ்டைல்லே சொல்றேன்… வாராவாரம் நாங்க match விளையாடப் போற Dandenong Stadium ல, 10 Basketball Court இருக்கு. காலைலே 8 மணிக்கு முதல் match தொடங்கும்… ஒரே நேரத்துல 1 match க்கு, பத்தும், பத்தும் 20 பேர், அவங்க கூட வந்த Parents ன்னு இன்னொரு 20 பேர், முந்தைய match ஆளுங்க, அடுத்த match ஆளுங்கன்னு மொத்தமா 10 match க்கு, 400 – 500 பேர் இருப்பாங்க… பசங்க வர்றதும், விளையாடறதும், போறதும்ன்னு அசத்தலா இருக்கும்… வாராவாரம், இந்த மாதிரி 1 மணி நேரமோ, 2 மணி நேரமோ போயிட்டு மேட்சையும் பாத்துட்டு, நம்ம அணியை சேர்ந்த மத்த பெற்றோர் கூட கதை அடிச்சிக்கிட்டு ஜாலியா பொழுதை போக்கிட்டு வரலாம். சும்மா ‘கலகல’ ன்னு திருவிழா மாதிரி இருக்கும்”

“நம்ம பசங்களுக்கும் அவங்க ஸ்கூலுக்கு வெளியே இன்னொரு நண்பர்கள் வட்டம் கிடைக்கும்… பெரும்பாலும் இந்த நட்பு வட்டம் பசங்க பெரியவங்க ஆன பிறகு கூட தொடரும்… ஒவ்வொரு சீசனும் கிட்டத்தட்ட 6 மாசம் போகும். நடுவுலே, Bendigo, Geelong, Adelaide மாதிரி வெளியூர்களுக்கு கூட மேட்ச் விளையாட போவோம். ஆக, அந்த 6 மாசமும், ஒரு குடும்பம் போல எல்லாரும் கூடிப் பேசி, சிரிச்சி சந்தோசமா இருப்போம். அது ஒரு வகையான அனுபவம். அண்ணிக்கும், அவங்களோட வழக்கமான வீட்டு வேலைகள்ல இருந்து மாறுதலான அனுபவமா இருந்ததால இது புடிச்சுப் போச்சு.” 

“இதுல, பெற்றோர்களா நாமளும் சில விசயங்களைக் கத்துக்குவோம், தெரியுமா?”

“அப்படியா, அது என்னதுண்ணே?”

“கடைசியா எப்போ நீ இன்னொரு குழந்தையை, பையனோ, பொண்ணோ பாராட்டியிருக்கே? நான் குழந்தைகளை கொஞ்சுறதை பத்தி கேக்கலே… பாராட்டுனது பத்தி கேக்கறேன்…”

மிக சாதாரண கேள்வி. ஜெகா ஆழ யோசித்து, சுமார் 2 நிமிடங்கள் கழித்து, நம்பிக்கையில்லாமல் உதட்டை பிதுக்கி, தலையை இடதும், வலமும் ஆட்டினான். “அண்ணே, வாழ்க்கையில எத்தனை முறை இன்னொருத்தர் மகனையோ, மகளையோ பாராட்டியிருப்பேன்னு யோசிச்சு பாத்தா, கிட்டத்தட்ட “இல்லை”ன்னுதான் சொல்லணும்”

“கவலையே படவேண்டாம் ஜெகா. நான் மேல சொன்ன அந்த “குடும்ப” சூழல்ல இதுக்கு வாய்ப்புகள் நிறைய கிடைக்கும். ஏன்னா, உன் பையனை அவன் நல்லா விளையாடினான்னு மத்த பெற்றோர்கள் பாராட்டும்போது, நீயும் அந்த அணியிலே இருக்கிற மத்தவனை பாராட்ட ஆரம்பிப்பே… அந்த மாதிரி ஒரு mutual appreciation உன் பையனுக்கு கிடைக்கும்போதும், நீ மத்தவங்களுக்கு தரும்போதும் ஒரு மன நிம்மதி கிடைக்கும்… அது ஒரு தனி அனுபவம்…”

இதெல்லாம் போக ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம் இருக்கு… அவுஸ்திரேலியா க்ளைமேட் (weather) நம்ம ஊரு மாதிரி கிடையாதுதானே… அங்கேன்னா அடிக்கிற வெயிலுக்கு உடம்பு நல்லா வியர்க்கும், உடம்புலே இருந்து கழிவு எல்லாம் வெளியேறும்… இங்கேதான் வியர்வைங்கற பேச்சே இல்லையே. ஆனா, விளையாடினா உடம்பு நல்லா வியர்த்து, உடம்பு நல்லா ஆரோக்கியமா இருக்கும். “A Sound Mind in a Sound Body” ன்னு கேள்விப்பட்டிருப்பே. இங்கே, நான் சொல்றபடி, விளையாட்டில இருக்கிற பசங்களுக்கு அது நிச்சயம் நடக்கும். அதனாலே, பசங்களுக்கு மனபலமும், உடல் வலிமையும் ஒரு சேர கிடைக்கும்.

“அண்ணே, ஏதோ ‘நாலும், நாலும் எட்டு, அதான் விளையாட்டு’ ங்கற மாதிரி ஆரம்பிச்சு, இது வேற லெவல் வாழ்வியல்ன்னு புரிய வச்சிட்டீங்கண்ணே. கடைசியா இன்னொரு கேள்வி… ஒருக்கால், பையன் ஒரேயடியா விளையாட்டுன்னு இறங்கி, படிப்புல சரியா கவனம் செலுத்தாம கோட்டை விட்டா என்னண்ணே பண்றது?”

“ஜெகா, நீ என்னா வெள்ளக்காரன் மாதிரியா தினந்தினம் பசங்களை கண்ணே, மணியே, தேனே, மானே ன்னு கொஞ்சிட்டு இருக்கே… நம்மாளுங்க பத்திதான் தெரியுமே… ‘நல்லாப் படிச்சாதான் விளையாட அனுப்புவேன்னு சொல்லு… உன் பையன் நல்ல விளையாட்டு வீரன்னா, அவங்க பயிற்சியாளரே உன்னை தேடி வந்து என்ன பிரச்னை, ஏன் இவன் விளையாட வரலை, நான் என்ன உதவி பண்ணட்டும்ன்னு கேப்பாங்க… அதனாலே அந்த பயமே வேண்டாம். அது போக, ஊர்லேதான் பசங்க டாக்டர் ஆகணும், என்ஜினீயர் ஆகணும்ன்னு பிரஷர் போடறாங்கன்னா, இங்கேயும் அதையே செய்யலாமா, சொல்லு? விளையாட்டு வீரர்களுக்கும் நல்ல எதிர்காலம் இருக்குப்பா… விளையாட்டையே Career ஆ எடுத்த எத்தனை Professional Athletes / Players இருக்காங்க தெரியுமா?”

“அதனாலே கவலையே வேணாம். நான் முன்னாடி சொன்னா மாதிரி, Obedience, Discipline, Leadership Qualities, Give & Take, Caring & Sharing, Self Confidence, Self-Belief, Fun, Satisfaction இது கூட நல்ல நண்பர்கள், உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம்ன்னு இவ்ளோ நல்ல விஷயங்களை சும்மா அப்படி சாதாரணமா தர்ற விளையாட்டை உன் பசங்களுக்கு கத்து கொடுத்து சிறந்த மனிதர்களாக அவங்களை உருவாக்கலாம். பணமும், புகழும் கிடைச்சா அது போனஸ்… என்னா நான் சொல்றது?”

நான் பேசி முடிக்கவும், ஜெகா சற்றே உணர்ச்சிவசப்பட்டவனாக, “அண்ணே, உண்மையிலேயே என் சின்ன வயசுலே ஏன் விளையாடாம போயிட்டேன்னு இப்போ வருத்தப்படறேன். நீங்க சொன்னது சாதாரண விஷயமே கிடையாது… நிச்சயம் என் பசங்களை விளையாட அனுப்புவேன். அவங்க முன்னேறி சிறந்த விளையாட்டு வீரர்களா வர்றதுக்கு என்ன செய்யணுமோ, அதை கட்டாயம் செய்வேன்… ரொம்ப ரொம்ப நன்றிண்ணே. உங்களாலே, இன்னைக்கு ரொம்ப உருப்படியான ஒரு விஷயம் தெரிஞ்சிகிட்டேன்”

அப்போது, ‘The next Station is Parliament’ எனும் அறிவிப்பு வரவும், “சரி ஜெகா, நான் இறங்கணும்… சொன்னது ஞாபகம் வச்சிக்கோ. எதாச்சும் தகவல் வேணும்ன்னா கேளு” என்றபடி எழுந்தேன்…

“ஏண்ணே… ஒண்ணு பண்ணுவோமா… இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை நீங்களும் அண்ணியும் நம்ம வீட்டுக்கு வாங்க. ஒரு பிரியாணியை போடுவோம். அப்படியே, நீங்களும் சித்ரா கிட்ட இதை பத்தி பேச்சு ஆரம்பிச்சு அவளையும் நம்ம சைடு இழுத்துடுவோம்… சரியா” என்றான்…

சிரித்தபடியே, கட்டை விரலை உயர்த்தி காண்பித்து, ‘Done’ என்று சொல்லிவிட்டு, எதிர்காலத்தில் நல்ல மனிதர்கள் / விளையாட்டு வீரர்கள் உருவாக ஒரு காரணியாக, நல்லதொரு விதையை தூவின திருப்தியில் இரயிலை விட்டு இறங்கினேன்.