Back to Issue - 24

மை வண்ணம்

September 4, 2023

விஜி ராம்

கொரோனாவும் கடவுளும் ஒன்றே என்று தோன்றுகிறது. எங்கும் நீக்கமற நிறைந்திருப்பான். தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் காற்றிலும் இருப்பான் ஆனால் கண்களுக்குப் புலப்படமாட்டான்.  வாழ்க்கையை முழுவதுமாய் திருப்பிப்போட்ட அந்த நாட்களை நினைக்கும் தோறும் தீயாய் ஒரு அச்சம் என்னை அறியாமல் என்னுள் வந்துபோகிறது. வெகு இயல்பாய் போய்க்கொண்டிருந்த வாழ்க்கை வேறொரு புதிய வடிவம் கொண்டதானது.  திடீரென வாழ்க்கை முற்றிலும் வேறானதாக மாறிவிட்டது. சுமார் இரண்டு வருடங்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடந்த நீண்ட நாட்கள். எங்குக் கேட்டாலும் உயிர்களின் இழப்பு. வீட்டில் அமர்ந்து தொலைக்காட்சிப் பெட்டியைத் திறந்தால் சாவு வீட்டினுள் உலவுவது போல் ஒரு அச்சம் ஆட்கொள்ளும். தொலைப்பேசி முழுதும் மரணச் செய்திகளால் நிறைந்திருந்தது. யமனோ யமியோ பல லட்சம் அவதாரங்கள் எடுத்து ஓவர் டைம் செய்து தீவிரமாகக் கடமை ஆற்றினார்கள் என்று தோன்றியது. மனம் பயத்தினால் பீடிக்கப்பட்டிருந்தது. ஊரில் எல்லோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அப்பா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அந்தத் தருணம் ஏன் இங்கு வந்தோம், அங்கிருந்தால் அப்பாவைப் பார்த்துக்கொண்டிருக்கலாம் என மனம் பரிதவித்தது. எவ்வளவு சுயநலம் என்று என் மீதே வெறுப்பு தோன்றியது. பாட்டி கொரோனாவால் இறந்த செய்தி கிடைத்த போது அதிர்ந்துபோனேன்

உற்றார், பெற்றார் அனைவரையும் விட்டு தனிமையில் எங்கோ தொலைவில், முற்றிலும் வேறுபட்ட மண்ணில் 27 வருடங்கள் கழித்தாயிற்று என்று எண்ணும்போது பெரும் ஆச்சரியமாகவும் சற்று கவலையாகவும் இருந்தது. அடிக்கடி இந்தியா செல்ல இயலவில்லை என்றாலும் இரண்டு வருடத்திற்கு ஒருமுறையேனும் சென்றுவருவோம். திரும்பி வந்த பின் கொஞ்சக் காலம் இந்திய வாழ்க்கை ஆஸ்திரேலிய வாழ்க்கையை விடச் சுகம் என்று தோன்றும். அங்கே குளிர் இல்லை, இங்கே கடுங்குளிர், அங்கே வீட்டு வேலைக்கு ஆள் கிடைப்பார்கள், இங்குச் சமையல் முதல் சாக்கடை சுத்தம் செய்வது வரை நாமே செய்து கொள்ளவேண்டி இருக்கிறது.  உடன்பிறந்தவர்கள், சொந்தபந்தங்கள் சூழ பேசி சிரித்து, வேலைகளைப் பகிர்ந்துகொண்டு மகிழ்ச்சியோடு எல்லோரோடும் வெளியே போவதும் வருவதும், அந்த வாழ்க்கை ஒரு வரம் எனத் தோன்றும். பெற்றவர்களுக்கு உடல் நிலை சரியில்லாது போகும் போதும், திருமணம் போன்ற விசேடக் காரியங்களில் கலந்துகொள்ள இயலாதபோதும் சீ என்ன வாழ்க்கை என்று ஆஸ்திரேலியா சலிப்பு தட்டும். பொருளாதார நெருக்கடியின் காரணத்தினால் நமக்கு விதித்திருப்பது இங்குதான் என்று சமாதானப்படுத்திக்கொண்டு மீண்டும் இந்தியா செல்லும் வரை அந்த இனிய பயணத்திற்காகக் காத்திருப்பது பழகிவிட்ட ஒன்று.

அந்த எண்ணத்தில் ஒரு மாற்றம் ஏற்பட்டது கொரோனா காலத்தில் தான். ஆஸ்திரேலிய அரசு மக்களை நோயினின்று காத்த விதம், அளித்த சலுகைகள், மருத்துவ வசதி இவையெல்லாம் இந்தியாவோடு ஒப்பிட்டுப் பார்த்தால் மலைக்கும் மடுவிற்குமான இடைவெளி. வளமான நாடுகளே இந்தக் கிருமியின் பிடியினின்று தப்பிக்க இயலவில்லை.

ஒருவரை ஒருவர் பார்ப்பதே தொற்றுக்குத் தீனி என்பதால் 5 கிலோமீட்டர் சுற்றுக்குள் தொடர்ந்து சுமார் 200 நாட்கள் சிறைவைக்கப்பட்டோம். வாழ்க்கை நின்றுவிடவில்லை. வீட்டிலிருந்த படியே வேலை செய்யும் நிலை உண்டானது. zoom ஒரு வரப்பிரசாதம் போல் வாய்த்தது. வகையாகச் சமையல், தோட்டவேலை, புத்தகம் வாசிப்பது, netflix, prime பார்ப்பதுமாக நகர்ந்தது. இந்த இயந்திர வாழ்க்கையில் நம் குடும்பத்தினரையே அவ்வளவு அருகிலிருந்து நிதானமாகப் பார்த்துப் பேசி நேரம் செலவிட அரிய வாய்ப்பு கிடைத்தது போல் இருந்தது.

கோவிட் தொற்று எனக்குள் ஏற்கனவே இருந்த பயத்தை, பதற்றத்தை, நிலையின்மையை விஸ்வரூபம் எடுத்துக்காட்டியது என்று நினைக்கிறேன். இந்தப் பிரபஞ்சத்தின் நிலையின்மையின் முன்னால் செய்ய முடிவது ஒன்றே ஒன்றுதான். சேர்ந்திருந்து, பகிர்ந்து, ஒருவருக்கொருவர் அன்பாயிருத்தலை விட வேறொன்றும் செய்துவிட முடியாது. முடிந்த வரை நம்மாலான நிதி உதவி செய்து, உலக நன்மை கருதி நாம் வணங்கும் கடவுளர்களிடம் பிரார்த்தனை செய்யலாம். இதைச் செய்து கொஞ்சம் ஆறுதலானேன்.

எனக்கு எப்போதும் வீட்டை விட்டுப் போவதென்றால் அறவே பிடிக்காது. அதனால் கோவிட் எனக்குச் சாதகமாக அமைந்தது என அவ்வப்போது எண்ணத் தோன்றும். இந்தச் சமயம் யாரும் வீடு தேடி வரப்போவதில்லை, நாமும் எங்கும் செல்லவேண்டியதில்லை என்பதால் ஆடை, அலங்காரம் என எதற்கும் கவலைப்படாது, இந்தியப் பெண்களின் தேசிய உடையாம் nighty அணிந்து கொண்டு கழித்த நாட்கள் அவை. உண்மையைச் சொல்லவேண்டுமானால் நான் நானாக இருந்த நாட்கள். வாழ்க்கை இவ்வளவுதான் என்று ஒரு அயர்ச்சி கொண்டு அந்த இரண்டு வருடத்தில் மனம் கொஞ்சம் முதிர்ச்சி கண்டதென்னவோ நிஜம் தான்.

தடுப்பூசி போட்டுக்கொண்டு ஓரளவு தொற்றின் வீரியம் குறைய ஆரம்பித்தது. மரண எண்ணிக்கை கணிசமாகக் குறைய ஆரம்பித்தது. தொற்று முடக்கம் நீக்கப்பட்டு கொஞ்சமாக அனைவரும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப ஆரம்பித்த காலம். அந்தச் சமயம் தான் கன்னட வட்டத்தில் நெருங்கிய தோழி கீதா தன் மகள் மைதிலிக்கு திருமணம் வைத்திருந்தாள். வீடு தேடி வந்து பத்திரிகையுடன் புடவை, வேட்டி கொடுத்து அழைத்துவிட்டுச் சென்றாள். ஆஸ்திரேலியா வந்து 25 வருடங்களுக்கு மேலாகியும் நாம் நம் கலாச்சாரத்தைக் காப்பாற்றிக் கொண்டு தான் இருக்கிறோம் என்பதற்கு இவை எல்லாம் கண்கூடான சாட்சிகள்.

மற்றொரு தோழி சித்ரா, மகள் அஞ்சுக்கு இரண்டு வருடங்களுக்கு முன் திருமணம் முடித்திருந்தாள். அஞ்சுவின் திருமணத்தில் நாங்கள் ஒரே ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் தான். எங்கள் நட்பு வட்டத்திலே முதல் திருமணம். மகிழ்ச்சியில் திளைத்தோம். அஞ்சு ஒரு குஜராத்தியைக் காதலித்து மணமுடித்திருந்தாள். மைதிலியோ அவர்கள் இனத்திலேயே தேடிக் கொண்டுவிட்டாள் என்ற பெருமை உள்ளூர கீதாவுக்கு இருந்தது. அஞ்சுவின் திருமணத்தை விட மைதிலியின் திருமணத்தை விமரிசையாகச் செய்துவிட வேண்டும் எனும் லட்சியத்துடனே கீதா எல்லா ஏற்பாடுகளும் செய்துகொண்டிருப்பதாக சித்ரா கூறினாள். இவர்களுக்கு எல்லாவற்றிலும் போட்டி.

உறவினர்களை விட நண்பர்களே மனதிற்கு அருகில் இருப்பவர்கள். தமிழர்கள், கன்னடர்கள் என எனக்கு இரண்டு நட்பு வட்டம் இருந்தது. என்னைப் பொறுத்தவரை கன்னடர்கள், பொதுவாக நல்ல குணம் படைத்தவர்கள். உதவி என்றால் தயங்காமல் முன்வருவார்கள். ஆனால் தமிழ் வட்டத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது அவர்களுக்குள் போட்டி அதிகம். டிவி, கார், வீடு, நகை என ஒருவர் ஆரம்பித்தால் வரிசையாக வாங்கிக்கொள்வார்கள். பேஷன் சென்ஸ் அதிகம், modern ஆக இருப்பார்கள். இந்தியா சென்று திரும்பும்போது ஒவ்வொருமுறையும் போட்டிப் போட்டுக்கொண்டு புடவை, நகை என்று வாங்கிவருவார்கள்.  அன்றைய தேதியின் லேட்டஸ்ட் ஸ்டைலில் இருப்பார்கள். என் கணவர் சில காலம் பெங்களூரில் வேலை செய்திருந்தார். அவர் அடிக்கடி சொல்லுவது, சென்னையை வாசிகளை விட பெங்களூர் வாசிகள் 10 வருடம் பேஷனில் முந்தி இருப்பார்கள் என்று.  அதை நான் இங்கு வந்தபோது கண்கூடாகப் பார்த்துப் புரிந்து கொண்டேன். லிப்ஸ்டிக் போட்டுக்கொள்வது, பாப் கட் வைத்துக்கொள்வது மற்றும் wine அருந்துவது எல்லாவற்றிலும். பக்தியும் அவர்களுக்கு அதிகம். வருடம் ஒருமுறையேனும் சத்யநாராயணப் பூஜை செய்து எல்லோரையும் அழைத்து நல்ல விருந்து கொடுப்பார்கள். அதனால் அவர்களை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். இவை எல்லாம் என் தமிழ் நட்புவட்டத்தில் காண்பது அரிது.

கடந்த இரண்டு வருடத்தில் இவை எதுவும் இல்லை. இப்போது மைதிலியின் திருமணம். இப்படியான ஒரு தருணத்திற்காகவே நானும் காத்திருந்தேன். திருமண வைபவம் என்றால் கேட்கவே வேண்டாம். நாளொரு மேனி, பொழுதொரு வண்ணம். ஒருவரை ஒருவர் பார்த்துப் பேசி பல வருடங்களாகிவிட்டது போலத் தோன்றியது. இரண்டு வருடங்களுக்குப் பிறகு இப்போது மீண்டும் அப்படி ஒரு மகிழ்ச்சி எல்லோர் மனத்திலும்.

3 நாள் திருமண நிகழ்ச்சிகளாம். டாண்டினாங் மென்சிஸ் ஹாலில் சங்கீத், வீட்டிலேயே மெஹந்தி, வான்டினா கேத்தி’ஸ் லேன் ஹாலில் திருமணம். எங்களுக்கு 3 நாட்களுக்கான அழைப்பும் வந்திருந்தது. ஷோபா திடீரென ஒரு நாள் தொலைப்பேசினாள். அவளை மெஹந்திக்கு அழைக்கவில்லையாம். 20 வருடங்களுக்கு முன் தன் வீட்டில் கீதா குடும்பத்தார்க்கு உப்புமா, டீ எல்லாம் செய்து கொடுத்து உபசரித்த கதையெல்லாம் சொன்னாள். அவர்கள் இவள் மனதைப் புண்படுத்திவிட்டதாகப் புலம்பினாள். சகுந்தலா திடீரென்று போன் செய்து கீதா திருமணத்திற்கு யாருக்கெல்லாம் புடவை கொடுக்கிறாள் என்று கேட்டாள். அது தெரிந்தால் தான் என்ன பரிசு வாங்கலாமென முடிவு செய்யமுடியும் என்பதை நாசூக்காய் சொன்னாள். ஷர்மதா வாட்ஸ் ஆப்பில் என்னுடைய பட்ஜெட் என்ன என்பதை மறைமுகமாகக் கேட்டிருந்தாள். நான் எதற்கும் நேரடியான பதில் சொல்லவில்லை. எனக்கேன் வம்பு. சித்ராவிடம் அவகாசம் கிடைக்கும்போது சொல்லிவிடவேண்டும் என்று மனதிற்குள் நினைத்திருந்தேன்.

முதலில் சங்கீத், ஒரு வாரம் கழித்து மெஹந்தி, மெஹந்தி முடிந்து இரண்டாம் நாள் திருமணம். கொடுமை என்னவென்றால் எல்லா வைபவங்களுக்கும் டிரஸ் கோட் மற்றும் கலர் கோட் இருந்தது. நானும் சங்கீத்துக்கு காக்ரா (தங்கை மகளிடம் கடன் வாங்கி இருந்தேன்), மெஹந்திக்கு நல்ல சுடிதார், வெட்டிங்குக்கு பட்டுப் புடவை என்று எல்லாம் தயார் செய்து வைத்துக் கொண்டேன். சங்கீத்க்கு ஆன்டிஸ் (Aunties) நடனமும் இருந்தது. நான் அதில் கலந்துகொள்ளவில்லை. நடனத்திற்கும் எனக்கும் ரொம்பத் தொலைவு.  நடன ஒத்திகை எனும் பெயரில் இவர்கள் தினமும் கூடுவதும் கூத்தடிப்பதும் வாட்ஸ் ஆப்பில் பார்த்தவண்ணம் இருந்தேன். கொரோனாவின் பிடியிலிருந்த நாட்களை நினைத்துப் பார்ப்பேன். “காயமே இது பொய்யடா வெறும் காற்றடைத்தப் பையடா”, மெய் என்று மேனியை யார் சொன்னது? போன்ற தத்துவார்த்த வரிகள் நினைவில் எழும். பீதியில் மனம் பதைக்கும்.

அன்று சங்கீத். நான் நினைத்தபடி தயாராகி மாலை 6 மணிக்கெல்லாம் சென்றுவிட்டேன். 7 மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பம். எல்லோரும் மெதுவாக வந்தவண்ணம் இருந்தனர். மாலதி, பானு, மஹாலக்ஷ்மி, சுமதி என எல்லோரும் வந்திருந்தனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு நேரில் பார்க்கிறேன். சிலர் கொஞ்சம் ஒல்லியாகத் தெரிந்தனர். தினமும் நீண்ட நடைப்பயணம் காரணமாக இருக்கலாம். சிலர் குண்டாகத் தெரிந்தனர். youtube உபயத்தில் வகை வகையாகச் சமைத்துச் சாப்பிட்டவர்கள் போலும். சிலர் வயது போனவர்கள் போல் தெரிந்தனர். இரண்டாண்டில் அது இயற்கை தானே. சிலர் அந்த இரண்டாண்டுகள் அப்படியே உறைந்துவிட்டனரோ என்று எண்ணவைத்தனர். அவர்களின் DNA அமைப்பு எனச் சமாதானப்படுத்திக்கொண்டேன். ஆனால் எல்லோரும் பியூட்டி பார்லர் சென்று வந்திருந்தனர் என்பது அவர்கள் போட்டிருந்த மேக்கப் மற்றும் சிகை அலங்காரத்தில் ஐயமின்றித் தெரிந்தது.

எனக்கிருந்த அதே அளவு ஆர்வம் எல்லோரிடமும் கண்டேன். பேச்சும் சிரிப்பும் என எங்கும் ஓசை. அன்பின் அலை. ஆரவாரங்கள். ஒருவரை ஒருவர் ஆரத்தழுவிக்கொண்டனர். உவகை கொண்டனர். அன்பின் வழியது உயிர்நிலை அன்றோ. என்ன இருந்தாலும் மனிதர்கள் அன்பிற்காக ஏங்கும் படைப்புகள் தான் எனத் தத்துவம் மின்னி மறைந்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு சுதந்திரக் காற்றை அனுபவிக்கும் சிறைக் கைதியின் மனநிலையில் எல்லோரும் இருந்தது போல் உணர்ந்தேன். நாம் குழுக்களாக வாழ்ந்தவர்கள் அல்லவா. கூட்டுக்குடும்பங்கள் சிதைந்து போய் நியூகிளியர் குடும்ப அமைப்பு வந்துவிட்டாலும் நாம் ஒருவரை ஒருவர் சார்ந்தும், அன்பு செய்தும் வாழ்வது தானே நிறைவான வாழ்க்கை. 200 நாட்களில் சொந்த பந்தங்களை இழந்தபோதும், உடன்பிறப்புகள் கொரோனா நோயில் வாடிய போதும் கையாலாகாது பிரார்த்தனை செய்துகொண்டு எம்மிடம் தானே அவர்கள் துக்கத்தைப் பகிர்ந்துகொண்டனர். இனி அப்படி ஒரு துயர்மிகு காலம் யாருக்கும் வரக்கூடாது என மனதில் நினைத்துக்கொண்டேன்.

எல்லோரும் உண்டு களித்து மீண்டும் உரையாடல். கூடிக் கூடிப் பேசினோம். ஒரு சில முகாந்திரங்களுக்குப் பின் அவர்கள் முக பாவங்களில் சில மாற்றம் கண்டேன். விசித்திரமாகப் பார்த்தார்கள். சிலர் எனக்குச் சுகவீனமா என வினவினர். சிலர் எனக்கும் கணவருக்கும் ஏதும் மனக்கசப்பு உள்ளதா என விசனப்பட்டனர். சிலர் சம்பந்தமில்லாமல் என்னருகில் வந்து, குழந்தைகள் பெரியவர்களை மதிப்பதில்லை எனச் சமாதானக் குரலில் கிசுகிசுத்தனர். சிலர் பரிதாபமாகப் பார்த்தனர். பலர் என் முகத்தைப் பார்க்கவே கவலைப்பட்டனர். முதலில் அதன் காரணம் புரியவில்லை. பின்னர் சந்தர்ப்பம் கிடைத்தபோது தனித்தனியாக வந்து என்னிடம் எல்லோரும் ஒரே கேள்வியைக் கேட்டது எனக்கு எரிச்சலைத் தந்தது.

முதலில் ஒருவர் கேட்டபோது அறியாமை என நினைத்தேன். அடுத்து ஒருத்தி கேட்டபோது ஆதங்கம் என எண்ணினேன். மூன்றாவதாக மற்றொருத்தி கேட்டபோது அனுதாபம் கொண்டேன். ஆனால் சொல்லி வைத்தாற்போல் ஒவ்வொருவராகக் கேட்ட போது ஆத்திரம் அடைந்தேன். அழுகையும் வரத் தயாராக இருந்தது. சுதாரித்துக்கொண்டேன். இவர்கள் யார் என்னிடம் இப்படிக் கேட்பதற்கு. நான் ஏன் இவர்கள் நினைக்கும் விதத்தில் இருக்கவேண்டும். இவர்கள் ஏன் என்னை எடைபோடவேண்டும். யார் இவர்களுக்கு இந்த உரிமை அளித்தது. இதைத் தான் பொதுப்புத்தி என நினைத்துக்கொண்டேன். குரங்கு குல்லாத் தூக்கிப்போட்ட ஒன்றாம் வகுப்புப் பாடம் நினைவிற்கு வந்தது. மனித இனம் இன்னும் பரிணாம வளர்ச்சி அடையவே இல்லையோ எனச் சந்தேகம் எழுந்தது.

நிகழ்வு முடிந்து வரும் வழியில் என் கணவரிடம் இதைப் பற்றிச் சொல்லிப் புலம்பினேன். அவர் நக்கலாக DO OR DYE என்றார். இவர்கள் அத்தனைப்பேர் முகத்திலும் கரியைப் பூசவேண்டும் எனும் வைராக்கியத்தில் கொண்டேன்.

மறுநாள் தலைக்கு மை தடவிக் கொண்டு மெஹந்திக்குக்குச் சென்றேன்.