Back to Issue - 24

மலை உச்சி சூனியக்காரி

September 4, 2023

யுவன்

மனித சலனமேயற்ற அடர்காடு. நடுச்சாமம். மழை ‘ஓ’ என்று அலறிக்கொண்டிருந்தது.

இராட்சத இடிமுழக்கங்களின் சத்தத்திற்குப் பயந்து சிங்கக் கூட்டங்கள் எல்லாம் குகைக்குள் சென்று பதுங்கியிருந்தன. யானைகள் பிளிறின் வௌவால்கள் அச்சத்தில் அலறி அடித்துக்கொண்டு குறுக்கும் நெடுக்குமாகப் பறந்தன. அப்போது வானத்தைக் கிழித்துக்கொண்டு ஒரு பெரு மின்னல் தோன்றி மொத்தக் காட்டையும் வெளிச்சம் போட்டுக் காட்டியது. கண நேரம் தான். அதற்குள் சிருகாலன் அந்த மலையைக் கவனித்துவிட்டான்.

காட்டின் நடுவே தனியே அந்த மலை நின்றுகொண்டிருந்தது. அங்கு தான் உளுந்தூர் நாட்டு இளவரசியைச் சூனியக்காரி கடத்தி வைத்திருக்கிறாள். சிருகாலன் விறுவிறுவென அந்த மலையை நோக்கி நடக்கத் தொடங்கினான். மழை சற்றே அடங்கியிருந்தாற் போலத் தோன்றியது. சிருகாலன் வழியில் இருந்த சிறு பாறை ஒன்றின் மேலே ஏறி கண்களைக் கசக்கி, தான் வைத்திருந்த மூங்கில் குழலினூடாக மலையுச்சியினைக் கூர்ந்து அவதானித்தான்.

மலையின் உச்சியிலே கொட்டில் ஒன்று போடப்பட்டிருந்தது. அதன் நடுவே பெரும் அடுப்பு மூட்டப்பட்டு, மேலே இராட்சத தாழி ஒன்று ஏற்றப்பட்டிருந்தது. தாழியிலிருந்து கொதிக்கும் எண்ணெயின் ஆவி மலையெங்கும் பறந்து கொண்டிருந்தது. அருகிலேயே இருந்த ஒரு கம்பத்தில் உளுந்தூர் இளவரசி கட்டப்பட்டிருந்தாள். இதுகாலும் காடு மலையெல்லாம் அல்லற்பட்டு தேடிய இளவரசியை ஒருவாராக சிருகாலன் கண்டுபிடித்துவிட்டான்.

விடிந்தால் அந்தக் கொதி எண்ணெய்க்குள் சூனியக்காரி இளவரசியைப் போட்டுவிடுவாள். அதற்குள் சிருகாலன் அவளை மீட்டாக வேண்டும். அவனுக்குப் பதற்றம் தொற்றிக்கொண்டது. மூங்கில் குழலை மறுபடியும் தன் இடை வாளோடு சேர்த்துச் செருகிவிட்டு, அவன் மலை உச்சியை நோக்கி விரைந்து நடக்க ஆரம்பித்தான்.

மறுபடியும் ஒரு பெரும் மின்னல்.

அந்த மின்னல் ஒளியில், வானத்தில் ஒர் இராட்சத, கருநிற நந்தப் பறவை ஒன்று வேகமாக மலையை நோக்கிப் பறந்து வந்து கொண்டிருந்தது தெரிந்தது.

சிருகாலன் அதிர்ந்துபோய் வேகமாக ஓட ஆரம்பித்தான்.

சிருகாலனுக்கு அந்தக் கருநிற நந்தப்பறவையைப் பற்றி ஏற்கனவே தெரிந்திருந்தது கருநிற நந்தப்பறவையானது நிலவொளியில் மிக அதிகச் சக்தியுடன் செயல்படக் கூடியது. பெரிய மலையைத் துவம்சம் செய்யக்கூடியது.  ஆனால் சூரிய வெளிச்சத்தை அதனால் தாங்க முடியாது, குகைக்குள் ஓடி மறைந்து விடும்.

உளுந்தூர் இளவரசியைக் கருநிற நந்தப் பறவை ஒன்றும் செய்யக்கூடாது என்று மலைத் தெய்வத்தை மனதுக்குள் வேண்டிய படியே சிருகாலன் மலை மீது சரசரவென ஏறினான்.  சிறிது நேரத்தில் கருநிற நந்தப் பறவை அவனது பார்வையை விட்டு மறைந்தது. சிருகாலனுக்கு எங்கிருந்துதான் அவ்வளவு சக்தி வந்ததோ  மிக வேகமாக மலை ஏறத் தொடங்கினான்.  திடீரென மலை மீது இருந்து கூச்சல் சத்தம் கேட்டது. சிருகாலனின் நெஞ்சுக்குள் படபடவென்று அடித்தது.  குத்துமதிப்பாக இளவரசி இருந்த திசையை நோக்கி உயரத்தில் தன் குறுவாளை விட்டெறிந்தான். அடுத்த நொடி வானமே அதிரும்படி ஒரு சத்தம் கேட்டது.

 கருநிற நந்தப் பறவை சிருகாலனை நோக்கி (வாள் வந்த திசையில்) கோபமாகப் பறந்து வந்தது.  சிருகாலனுக்குத் தான் நிச்சயமாக உயிரோடு இந்த மலையை விட்டுத் திரும்ப முடியாது என்று தெரிந்தது.  அவனிடம் கையில் எந்த ஆயுதமும் இல்லை. ஓடி ஒழிய வழியும் இல்லை. முடிந்த வரையில் எதிர்த்துப் போராடலாம் என்று மனதுக்குள் நினைத்தபடியே சினம் கொண்ட சிங்கமாய் சீற்றத்துடன் நந்தப் பறவையை எதிர்க்க ஆரம்பித்தான்.  பாவம் அவனும் மனிதன் தானே! எவ்வளவு நேரம் தான் எதிர்க்க முடியும். அவனுடைய நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக மறைய ஆரம்பித்தது.  நந்தப் பறவையின் கோபத்தையும் வேகத்தையும் தாங்க முடியாத சிருகாலன் தரையில் சரிந்து மல்லாந்து விழுந்தான்

விழுந்த நொடியில் அவனது வலியையும் மீறி அவன் முகத்தில் புன்னகை மலர்ந்தது. காரணம் சூரிய வெளிச்சம்.  மழையும் நின்றிருந்தது.  கருநிற நந்த பறவையும் குகையை நோக்கிப் பறந்தது. பறவையிடமிருந்து உளுந்தூர் இளவரசியைக் காப்பாற்றிய சிருகாலன் சூனியக்காரியிடமிருந்து இளவரசியை எப்படிக் காப்பாற்றுவது என்று தெரியாமல், உடம்பில் பட்ட காயங்களோடு திணறினான்.   கரிகாலன், சிருகாலனின் ஆசைக் குதிரை அப்போது அங்கே வந்தது. அதைப் பார்த்தவுடன் சிருகாலனுக்குச் சிறு நம்பிக்கை மனதுக்குள் பிறந்தது. மெதுவாகக் கரிகாலனின் முதுகில் ஏறிய சிருகாலன் மனதுக்குள் திட்டமிட்டபடியே சூனியக்காரி இருந்த திசையை நோக்கி விரைந்தான். சூனியக்காரி குளித்து இளவரசியை எண்ணெயில் போடுவதற்கு ஆயத்தமாகி குடிசையை விட்டு வெளியே வந்தாள்.  குதிரையையும் அதன் மேலிருந்த காளையையும் பார்த்தவுடன் கோபமடைந்த சூனியகாரி அவர்களைக் கல்லாகும் படி சபித்தாள். இளவரசி குதிரை சிருகாலன் மூவரும் கல்லாக மாறினர். இளவரசியும் கல்லாக மாறுவாள் என்பதை எதிர்பார்க்காத சூனியக்காரி அதிர்ந்தாள்.   அவள் அதிர்ந்து நிற்கும் போது குகைக்குள் இருந்து சிங்கம் பசியோடு தன் இரையைத் தேடி வெளியே வந்தது. சிங்கத்தை எதிர்பார்க்காத சூனியக்காரியால் சிங்கத்தை எதிர்த்து மந்திரத்தைக் கூற இயலவில்லை. பாவம் சூனியக்காரி சிங்கத்தின் பசிக்கு இரையானாள். இரண்டு நாட்கள் கழித்து உளுந்தூர் ராஜா தன் படையுடன் மலையை அடைந்தார். கல்லாகிய தன் அன்பு மகளைப் பார்த்து சிலையாகி நின்றார். சிறிது நேரத்தில் சித்தம் தெளிந்த மகாராஜா மலைக்கோயிலை நோக்கி நடந்தார். மலைக்கோயில் மந்திரவாதியின் உதவியுடன் கல்லாகியவர்களை உயிருடன் மீட்ட மகாராஜா தன் படையுடன் உளுந்தூரை நோக்கி மகிழ்ச்சியுடன் புறப்பட்டார்.