Back to Issue - 24

எங்களை வாழவிடுங்கள்

September 4, 2023

மெர்சி விக்டர்பாபு

என்றும் மனிதனின் பேராசையைத் தூண்டும் நிலையான பொருள் ஒன்று இந்த உலகத்தில் சுதந்திரமாக வலம் வருகின்றது என்றால் அது பணத்தைத் தவிர வேறு எதுவும் இருக்க முடியாது. இந்த வேகமான உலகில் நாம் மனிதர்களாக அல்ல இயந்திரங்களாகவே செயல்படுகின்றோம்.

பணம் இல்லையென்றால் நமக்கு வாழ்வே இல்லை. உலகில் வல்லரசு நாடுகளில் ஒன்றான ஆஸ்திரேலியாவில் வாழும் தமிழர்கள் தங்கள் பிள்ளைகளை சுயமாகச் சம்பாதிக்க அவசரப்படுத்துவது ஏன்?  இரண்டாம் தலைமுறையினராகிய நாங்கள் எங்களுக்குப் பிடித்த வாழ்க்கையை விடப் பெற்றோருக்குப் பிடித்த வாழ்க்கையை வாழ எத்தனை சவால்களை எதிர்கொள்கின்றோம் தெரியுமா?  எவ்வளவு இன்னல்களைச் சந்திக்கின்றோம் தெரியுமா?  பிள்ளைகள் சிறிது காலத்தில் நல்ல ஊதியம் பெற வேண்டும், நல்ல அழகான வீட்டைக் கட்ட வேண்டும், தரமான மகிழுந்தை வாங்க வேண்டும் என்று பெற்றோர்கள் வற்புறுத்துகிறார்கள். ஆனால் இத்தனையும் எங்களுக்கு எவ்வளவு மன அழுத்தத்தைக் கொடுக்கின்றது என்பதைச் சிறிதும் உணராதவர்கள்தான் பெற்றோர்கள்.

ஆஸ்திரேலியா நாட்டில் வாழும் இரண்டாம் தலைமுறையினருக்குத் தெரிந்ததெல்லாம் நன்றாகப் படித்து, உயர்தரப் பரீட்சையில் தேர்ச்சி பெற்று, புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் தங்கள் பட்டப்படிப்பை முடித்துவிட்டு பெரிய நிறுவனங்களில் வேலை செய்வதுதான். இதைச் சொல்லும் போதே மூச்சு விட முடியவில்லை. இன்று தமிழர்கள் பொறியியல், தொழில்நுட்பம் போன்ற பல துறைகளில் சாதனை புரிகிறார்கள். ஆனால், கலை ஓவியம் போன்ற துறைகளில் வேலை செய்வதில்லை. ஏனென்றால் இந்தத் துறைகளில் வேலை செய்வதால் வாழ்க்கையில் முன்னேற முடியாது எதிர்காலமே கிடையாது என்ற சிந்தனையைப் பெற்றோர்கள் கற்பிக்கிறார்கள்.

எங்களுடைய எதிர்காலத்தைப் பற்றி அதிகம் சிந்திக்கும் பெற்றோர்கள் எங்கள் சந்தோஷத்தைப் பற்றிக் கவலைப்படுவதே இல்லை. பெற்றோர்கள் தங்களுடைய தனிப்பட்ட ஆசைகளையும், கனவுகளையும் எங்கள் மீது திணிக்கிறார்கள். அதிகமான எதிர்பார்ப்புகளும் கட்டுப்பாடுகளும் எங்களுடைய ஆசைகளுக்கு முட்டுக்கட்டையாக உள்ளன. இதனால் பெற்றோர்களுக்கு எந்தத் துன்பமும் இல்லை. பாவம் பிள்ளைகள்தான் அதிகத் துன்பத்தை அனுபவிக்கிறார்கள். எரிச்சல், மனச்சோர்வு, வெறுப்பு ஆகியவற்றால் தவறான முடிவுகளை எடுத்து தங்கள் உயிர்களைப் பறிகொடுக்கும் இளைஞர்கள்தான் ஏராளம்.  எங்களைப் போன்ற இளைஞர்களுக்கு இருக்கும் ஒரே கேள்வி இதுதான், ஏன் பெற்றோர்கள் எல்லோரும் ஒரு குறுகிய வட்டத்துக்குள் வாழ்கிறார்கள்? இதற்குப் புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழ்ந்த சூழல் தான் காரணமா? பெரும்பாலும் பெற்றோர்கள் சற்று கடுமையான வாழ்க்கை முறைகளையும் வறுமை போன்ற துன்பங்கள் நிறைந்த வாழ்க்கையே வாழ்ந்தவர்கள், இதனால் வெளிநாடுகளுக்குச் சென்று அதிகமான பணத்தைக் கண்டு பேராசை கொள்கிறார்கள் இதன் தாக்கம்தான் எங்களைப் போன்ற இளம் தலைமுறையினருக்குத் தடையாக இருக்கிறது.

பெற்றோர்கள் வாழ்ந்த காலம் வேறு, பிள்ளைகள் வாழும் காலம் வேறு என்பதைப் பெற்றோர்கள் உணர வேண்டும்.

புலி பசித்தாலும் புல் தின்னாது.  பணமோ செல்வமோ குறைவாக இருக்கின்ற காரணத்திற்காக எங்கள் இலட்சியத்தையும் விருப்பங்களையும் விட்டுக் கொடுக்க மாட்டோம்.

பெற்றோர்கள் எங்கள் மீது வைத்திருக்கும் அன்பையும் அக்கறையும் நாங்கள் புறக்கணிக்கவில்லை. ஆனால் அவர்களைப் போல் இயந்திரங்களாக வாழ்வது எப்படி என்ற அறிவுரையைத் தான் வெறுக்கிறோம்.  பிள்ளைகள் நல்ல வாழ்க்கையை விரைவில் அமைத்துக் கொள்ள வேண்டிய அவசரம்தான் புரியவில்லை. காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்ற பழமொழி காற்று அடிக்கும் நேரத்தில் நம்மை விழிப்பாக இருக்கச் சொல்கிறது. ஆனால் நாம் நினைக்கின்ற திசையிலும் நேரத்திலும் காற்றடிக்கும் என்ற உறுதியைத் தருகிறதா?

பெற்றோர்களே! தயவு செய்து இதைச் சிந்தித்துப் பாருங்கள். யாருடைய தயவும் இன்றி வாழ வேண்டும் என்று அவசரப்படும் பெற்றோர்களும் ஆடிப்பாடித் திரியும் வயதில் வேலையா?  என்று தயங்கும் பிள்ளைகளும் தினமும் போர்க்களத்தில் சந்திக்கிறார்கள்.

எப்படி நாய் வாலை நிமிர்த்த முடியாதோ அதே போல் எங்களையும் மாற்ற முடியாது. எனவே பெற்றோர்களின் விருப்பமும் உங்களுடைய பிள்ளைகளின் விருப்பமும் ஒன்றல்ல என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.