Back to Issue - 24

இனியும் வரும் வசந்தகாலம்

September 4, 2023

ஜூட் பிரகாஷ்

“ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு; வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு.

பிறக்க ஒரு காலமுண்டு, இறக்க ஒரு காலமுண்டு, விதைக்க ஒரு காலமுண்டு, விதைத்ததை அறுவடை செய்ய ஒரு காலமுண்டு” என்கிறது வேதாகமம் (பிரசங்கி 3:1-2).

உண்மைதான், நாங்கள் பிறப்பதற்கு ஒரு காலம் இருந்தது, பிறந்து வளர்வதற்கு ஒரு காலம் இருந்தது, வளரும் போது படிப்பதற்கு ஒரு காலம் இருந்தது, படித்த பின் வேலை செய்வதற்கு ஒரு காலம் இருந்தது, வேலை செய்து கொண்டு குடும்பம் உருவாக்குவதற்கு ஒரு காலம் இருந்தது, இப்பொழுதோ எப்பொழுதோ நாங்கள் இளைப்பாறுவதற்கும் ஒரு காலம் வந்து தான் விடப் போகின்றது.

போர்ச் சூழலில் வளர்ந்து ஆளான எங்கள் வாழ்க்கையில் பல விடயங்கள் எங்களை அறியாமலேயே எங்கள் கட்டுப்பாட்டில் இல்லாமலே நடந்தேறி விட்டன. நாளைக்கு நாங்கள் உயிர் வாழ்வோமா இல்லையா என்று அறியாமலேயே வாழ்ந்த காலத்தில், என்ன படிக்கப் போகின்றோம், என்ன வேலை பார்க்கப் போகின்றோம், என்ற திட்டமிடலைக் கொஞ்சமும் சிந்திக்கவே முடியாத சூழலிலேயே நாங்கள் வாழ்ந்தோம், வளர்ந்தோம்.

அடிபாடுகளுக்குள் அடிபட்டு அலைந்து திரிந்து, இடம்பெயர்ந்து எங்கோ அகதி முகாமில் வாழ்ந்து, நிவாரண வரிசையில் நின்று, ஆமிட்டயும் ஈபிட்டயும் பிடிபட்டும் பிடிபடாமலும் தப்பி, யார் யாருடைய வீடுகளில் வாழ்ந்து, யார் யாரையோ சந்தித்து, எப்படியோ புலம்பெயர்ந்து, புலம்பெயர்ந்த தேசத்திலும் முட்டி மோதி வாழ்க்கையைச் சீராகக் கொண்டோடப் படாதபாடு பட்டு, கொஞ்சம் ஆசுவாசமாக மூச்சு விடலாம் என்று யோசிக்க, இளைப்பாறும் காலம் கண்ணுக்கெட்டிய தூரத்தில் தெரிய ஆரம்பிக்கிறது.

போராட்டக் காலத்தில் வாழ்ந்த எங்கள் வாழ்க்கையே போராட்டமாகிப் போன எங்களுக்கு, எதையுமே திட்டமிட்டுச் செய்த பழக்கமும் இல்லை, திட்டமிடுவதற்கான எண்ணம் எழவுமில்லை, அவ்வாறு எழுந்தாலும் அந்தத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான சந்தர்ப்பச் சூழ்நிலை எங்களுக்கு அமைந்ததும் இல்லை.

இன்னும் சொல்லப்போனால் திட்டமிடல் என்பதற்கான அகச் சூழலும் புறச்சூழலும் இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து பழகிவிட்ட எங்களுக்கு, திட்டமிடுதல் அதிகம் அவசியப்படப் போகும் இளைப்பாறுதல் எனும் காலகட்டம் ஒரு பெரும், மாபெரும் சவாலாகத்தான் இருக்கப் போகின்றது.

இளைப்பாறுதல் அல்லது ஓய்வு பெறுதல் என்பது career அல்லது தொழில் சம்பந்தமான ஒன்றாக இருக்க வேண்டுமே அன்றி வாழ்க்கை முறை சம்பந்தமான ஒன்றாக இருக்கக் கூடாது, இருக்கவும் முடியாது. எந்தத் தொழிலில் இருந்தாலும் வயதாகும் போது எங்களை விடத் திறமையான, எங்களிலும் இளமையான, எங்களை விடக் குறைவான சம்பளங்களை பெறும் இளையவர்கள் நிறுவனங்களில் இணைந்து கொள்ளும் பொழுது எங்களது தேவை அந்த நிறுவனங்களுக்கு அவசியமற்றதாக அல்லது அவசியம் குறைந்ததாக மாறும் காலமே இளைப்பாறுவதற்கான காலம் என்று கருதிக் கொள்ளலாம்.

நாங்கள் விரும்பியோ விரும்பாமலோ அந்த இளைப்பாறுதலுக்கான காலம் எங்களை நெருங்கிவிட்டது. அந்தக் காலத்தின் நீட்சி சிலருக்கு ஐந்து வருடங்களாக இருக்கலாம், சிலருக்கு 10 வருடங்களாக இருக்கலாம், இன்னும் சிலருக்கு அதைவிட அதிகப்படியாக இருக்கலாம். ஆனால் யாராக இருந்தாலும் அந்த இளைப்பாறும் காலம் எப்போதும் எப்படியோ வந்துதான் விடப் போகின்றது.

இந்த ஓய்வு பெறுதலுக்கான கால கட்டத்திற்கான திட்டமிடல் பன்முகங்களைக் கொண்டது. ஒருவரின் குடும்பச் சூழ்நிலை, பிள்ளைகளின் வயது, நிதி வளம், தொழில், உடல் ஆரோக்கியம் என்று பல விடயங்கள் இந்த இளைப்பாறுதலிற்கான திட்டமிடலின் பின்னணியில் செல்வாக்கு செலுத்தவல்ல முக்கிய காரணிகளில் அடங்கும்.

இளைப்பாறுதலில் இந்தப் பன்முகக் காரணிகளின் முக்கியத்துவம் ஒரு பக்கம் இருக்க, இவை எல்லாவற்றையும் விட முக்கியமானது ஒருவரின் இளைப்பாறுதலிற்கான mindset என்பது தான். புறக் காரணிகள் பலமாக இருந்தாலும் ஒருவரின் mindsetதான் அவரின் இளைப்பாறுதலை நிம்மதியாகவும் இனிமையாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும்.

இளைப்பாறுதலிற்கு உத்தமமான mindsetஐ உருவாக்குவதில் மிகவும் முக்கியமானது எங்களது நட்பு வட்டாரமும் உறவுகள் வட்டாரமும்தான். இவ்வளவு கால வாழ்க்கை அனுபவமும் இந்த வட்டாரங்களில் யார் எவர் எப்படிப்பட்டவர் என்ற அனுபவங்கள் எமக்கு நல்ல பட்டறிவை நிச்சயமாகத் தந்திருக்கும்.

ஒருவரைச் சந்திக்கும்போது அல்லது அவரிடம் இருந்து அழைப்பு வரும்போதோ உங்கள் உள்ளம் உவகை கொள்கிறது என்றால் அவர் இனியும் உங்கள் தொடர்பு வட்டாரத்தில் இடம்பிடிக்க வேண்டும். அவ்வாறான ஒருவருடன் நீங்கள் கதைக்கும் பொழுதுகள் இனிமையாகவும் மகிழ்ச்சி நிறைந்ததாகவும் இருக்கும். அந்தப் பொழுதுகளை உங்கள் உள்ளம் மீண்டும் மீண்டும் இரை மீட்டும், உவகை கொள்ளும்.

ஒருவரிடம் இருந்து அழைப்பு வரும் போதோ அவரை எங்காவது காணும் போதோ “ஐயோ இவனா… அலுப்பன்” என்று உங்கள் உள்ளம் பதைபதைத்தால் அவ்வாறன நபர் உங்கள் வட்டாரத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக கழற்றபட வேண்டியவராகிறார். இவ்வாறான நபர்கள் உங்களது நிம்மதியான இளைப்பாறூதலுக்கு அவசியமான அந்த அற்புதமான retirement mindsetஐ நாசமாக்க வல்லவர்கள்.

இனிமேல் யாரோடு அதிகம் பழகவேண்டும் யாரோடு அளவோடு பழக வேண்டும் யாரோடு அறவே பழகக் கூடாது என்ற பட்டறிந்த தெரிவுதான் அந்த அழகான retirement mindsetஇற்கான அற்புதமான அத்திவாரம். எப்பவும் எதையும் பற்றிக் குறைவாகப் பேசுபவர்களும், தங்களை உயர்த்திப் பிறரைத் தாழ்த்திப் பேசுபவர்களும், எதிலும் குற்றம் குறை காணுபவர்களும், வாழ்க்கையை எதிர்மறையான negative mindsetஇல் நோக்குபவர்களும் இல்லாத, இல்லை குறைவாகத் தாக்கம் செலுத்தும் சூழலே நிறைவான அந்த இளைப்பாறுதலிற்கான உகந்த புறச்சூழலை ஏற்படுத்தவல்லது.

எங்களின் நீண்ட கால நட்புக்கள், நாங்கள் வாழ விரும்பும், வாழ நினைக்கும் வாழ்க்ககையோடு இணைந்து பயணிக்கும் mindset உடையவர்களாக இல்லாமல் இருக்கவும் வாய்ப்புக்கள் உண்டு. அதே நேரத்தில் நாங்கள் வாழும் சூழலில், எங்கள் வாழ்க்கை முறையோடு ஒத்துப் பயணிக்கக் கூடிய புதிய நட்புக்களிற்கும், குறிப்பாக பிற இனங்களைச் சார்ந்தவர்களை எங்கள் நட்பு வட்டாரத்தில் இணைத்துக் கொள்ளவும் நாங்கள் எங்களை தயாராக்குவதும் இளைப்பாறுதலிற்கான உகந்த புறச்சூழலை ஏற்படுத்தவல்லது.

வேலையில் இருந்து இளைப்பாறப் போகும் காலங்களில் எங்களைச் சூழ இருப்பவர்கள் எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியமானது எங்களது நேரத்தை எவ்வாறு கழிக்கப் போகிறோம் என்பது பற்றிய சிந்தனையோட்டம். பலரின் இப்போதைய பகல் பொழுதுகள் வேலையிலேயே கழிக்கப்பட்டிருக்க, வெற்றிடமாகப் போகும் அந்தப் பொழுதுகளை எவ்வாறு அனுபவிக்கப் போகிறோம் என்பதிலும் mindset முக்கிய பங்கு வகிக்கும்.

நவீன தொழில்நுட்ப யுகத்தில் எங்கள் பொழுதுகளை நாசமாக்க இருக்கும் சமூக வலைத்தளங்களைத் தாண்டி, எங்களுக்கு விருப்பமான ஒரு துறையையோ, பழக்கத்தையோ பொழுது போக்கையோ தேர்ந்தெடுப்பது எங்கள் mindset சார்ந்த இன்னுமொரு முக்கியமான முடிவாக அமையும். இவ்வாறு நாங்கள் விரும்பியே தேர்ந்தெடுக்கும் துறையோ பழக்கமோ எங்களது உடலையும் உள்ளத்தையும் புத்துயிர்ப்போடு வைத்திருந்து, எஞ்சியிருக்கும் எங்கள் வாழ்க்கையை அனுபவித்து வாழ வழிசமைத்துத் தரும்.

இனிவர இருக்கும் இளைப்பாறும் காலத்தை வசந்த காலங்களாக்குவது, எங்களது வங்கி நிலுவையிலோ இல்லை பென்சன் பணத்திலோ தங்கியிருப்பதை விட, எங்கள் mindset இலேயே பிரதானமாக தங்கியிருக்கும்.