Back to Issue - 24

அதிசய நந்தப் பறவை

August 9, 2023

திவா விவேகானந்தன்

மனித சலனமேயற்ற அடர்காடு. நடுச்சாமம். மழை ‘ஓ’ என்று அலறிக்கொண்டிருந்தது.

இராட்சத இடிமுழக்கங்களின் சத்தத்திற்குப் பயந்து சிங்கக் கூட்டங்கள் எல்லாம் குகைக்குள் சென்று பதுங்கியிருந்தன. யானைகள் பிளிறின் வௌவால்கள் அச்சத்தில் அலறி அடித்துக்கொண்டு குறுக்கும் நெடுக்குமாகப் பறந்தன. அப்போது வானத்தைக் கிழித்துக்கொண்டு ஒரு பெரு மின்னல் தோன்றி மொத்தக் காட்டையும் வெளிச்சம் போட்டுக் காட்டியது. கண நேரம் தான். அதற்குள் சிருகாலன் அந்த மலையைக் கவனித்துவிட்டான்.

காட்டின் நடுவே தனியே அந்த மலை நின்றுகொண்டிருந்தது. அங்குதான் உளுந்தூர் நாட்டு இளவரசியைச் சூனியக்காரி கடத்தி வைத்திருக்கிறாள். சிருகாலன் விறுவிறுவென அந்த மலையை நோக்கி நடக்கத் தொடங்கினான். மழை சற்றே அடங்கியிருந்தாற் போலத் தோன்றியது. சிருகாலன் வழியில் இருந்த சிறு பாறை ஒன்றின் மேலே ஏறி கண்களைக் கசக்கி, தான் வைத்திருந்த மூங்கில் குழலினூடாக மலையுச்சியினைக் கூர்ந்து அவதானித்தான்.

மலையின் உச்சியிலே கொட்டில் ஒன்று போடப்பட்டிருந்தது. அதன் நடுவே பெரும் அடுப்பு மூட்டப்பட்டு, மேலே இராட்சத தாழி ஒன்று ஏற்றப்பட்டிருந்தது. தாழியிலிருந்து கொதிக்கும் எண்ணெயின் ஆவி மலையெங்கும் பறந்து கொண்டிருந்தது. அருகிலேயே இருந்த ஒரு கம்பத்தில் உளுந்தூர் இளவரசி கட்டப்பட்டிருந்தாள். இதுகாலும் காடு மலையெல்லாம் அல்லற்பட்டுத் தேடிய இளவரசியை ஒருவாராக சிருகாலன் கண்டுபிடித்துவிட்டான்.

விடிந்தால் அந்தக் கொதி எண்ணெய்க்குள் சூனியக்காரி இளவரசியைப் போட்டுவிடுவாள். அதற்குள் சிருகாலன் அவளை மீட்டாக வேண்டும். அவனுக்குப் பதற்றம் தொற்றிக்கொண்டது. மூங்கில் குழலை மறுபடியும் தன் இடை வாளோடு சேர்த்துச் செருகிவிட்டு, அவன் மலை உச்சியை நோக்கி விரைந்து நடக்க ஆரம்பித்தான்.

மறுபடியும் ஒரு பெரும் மின்னல்.

அந்த மின்னல் ஒளியில், வானத்தில் ஓர் இராட்சத, கருநிற நந்தப் பறவை ஒன்று வேகமாக மலையை நோக்கிப் பறந்து வந்து கொண்டிருந்தது தெரிந்தது.

சிருகாலன் அதிர்ந்துபோய் வேகமாக ஓட ஆரம்பித்தான்.

வேகமாக ஓடிய அவனின் முன் சித்தர் ஒருவர் திடீரெனத் தோன்றினார். அவன் நின்றபின், முனிவர் “மகனே, நீ எதற்காகப் பதட்டமாக ஓடுகிறாய்? உனக்கு என்ன நேர்ந்தது?” என வினவினார். சிருகாலன் அவருடைய காலடியில் விழுந்து வணங்கினான். பின், எழுந்து நடந்தவற்றை விளக்கிக் கூற ஆரம்பித்தான். அமைதியுடன் அவன் கூறியதைக் கேட்ட சித்தர், “இக்காட்டில் வாழும் சூனியக்காரியைக் கொல்வது மிகக் கடினமானது. உனது வாளினால் அவளைக் கொல்லவும் முடியாது. அவளது உயிர் அவளிடம் இல்லை. அதை அவள் ஓர் இரகசியமான இடத்தில் பாதுகாப்பாக மறைத்து வைத்திருக்கிறாள்” என்று கூறினார்.

இதைக் கேட்ட சிருகாலன் அதிர்ச்சியாலும், ஆச்சரியத்தாலும் வியப்படைந்து சித்தரைப் பார்த்தான். வியப்படைந்த அவனது முகத்தைக் கண்ட சித்தர், “அவளது உயிர் இருக்கும் இடத்தைச் சொல்கிறேன். மிகவும் கவனமாகக் கேள்” என்று அருகே வந்து கூறினார். சிருகாலனும் ஆர்வத்துடன் அவர் அருகே வந்து அவர் கூறுவதைக் கவனமாகக் கேட்க ஆரம்பித்தான். “மகனே, இம்மலையின் இரு பக்கங்களிலும் பல குகைகள் உள்ளன. அவற்றிலே உயரத்திலும், அகலத்திலும் பெரிதாக உள்ள குகையினுள் ஒரு பெரிய பருந்து உள்ளது. அது மரக் கிளை ஒன்றில் உறங்கிக்கொண்டிருக்கும். அதன் கழுத்திலே நீல நிறமான பெரிய மணி பிரகாசித்துக்கொண்டிருக்கும். அந்த மணியை உன் வாளினால் வெட்டி வீழ்த்தி அதைத் துண்டாக்கினாயானால் சூனியக்காரி இறந்து விடுவாள். இப்போது நீ பார்த்த நந்தப் பறவையின் வடிவில் இருப்பவளும் அச்சூனியக்காரியே தான். பறவையின் வடிவிலிருக்கும் பொழுது அம்மணியை உடைத்தால் அவளது உயிர் இலகுவாகப் பிரியும். ஆதலால், பொழுதை வீணாக்காமல் நீ விரைவாகச் செல், என் ஆசி முழுவதும் உனக்கே!” என வாழ்த்தி அனுப்பினார்.

அவரை வணங்கி விடைபெற்றான் சிருகாலன். சிறிது தூரம் சென்ற பிறகு, அவன் திரும்பிப் பார்த்த பொழுது சித்தரைக் காணவில்லை. சித்தரின் மகத்துவத்தை எண்ணி வியந்து, குகையைத் தேடி விரைந்து சென்றான். மலையின் அடிவாரத்தை அடைந்த பொழுது, பல குகைகள் அவனது கண்களில் தென்பட்டன! ஒவ்வொரு குகையினுள்ளும் வரிசையாகச் சென்று பார்க்க நேரமோ அரிது. ஆனால், அவன் முன் தென்பட்ட குகையினுள் ஒன்று மட்டுமே கண்களைக் கவர்ந்தது. மற்ற குகைகளை விட அகலத்திலும், உயரத்திலும் பெரிதாகக் காட்சி அளித்தது. மகிழ்ச்சியுடன் மிக மெதுவாக நகர்ந்து சென்ற அவன் குகையினுள் நுழைந்தான். சுற்றும் முற்றும் பார்த்த பொழுது அவனது கண்களில் பாறை இடுக்கொன்றில் வளர்ந்த மரத்தின் கிளையில் ஓர் அற்புதமான காட்சியைக் கண்டான்.

உருவத்தில் மிகப் பெரிய ஒரு பருந்தையும், அதன் கழுத்தில் இருந்த மணியிலிருந்து வீசிய ஒளி குகையெங்கும் பரவியதையும் கண்டு பிரமித்தான். மெது மெதுவாகச் சென்ற அவன் அருகிலிருந்த பெரிய பாறை ஒன்றில் ஏறி இடையில் செருகியிருந்த அவனது வாளை உருவினான். உருவிய வாளுடன் ஊர்ந்து ஊர்ந்து சென்று பறவையின் கழுத்தை ஒரே வெட்டினால் துண்டாக்கினான். குகையின் சுவரெங்கும் இரத்தம் தெறித்தது. பறவையிலிருந்து குதித்த மணியைச் சிதைப்பதற்குத் தகுந்த வழியைத் தெரிவு செய்து, அருகே இருந்த ஒரு பாறாங்கல்லைத் தலையின் மேல் தூக்கினான். பாறையிலிருந்து குதித்து மணியின் மீது அதை விரைந்து போட்டான்.

மணி துண்டு துண்டாகச் சிதறியது. இருள் குகையைச் சூழ்ந்தது. உடனே, ஒரு பெண்ணின் அலறல் ஒலி கேட்டது. விரைந்து பதட்டத்துடன் குகையை விட்டு வெளியேறிய சிருகாலன் நந்தப் பறவையின் வடிவிலிருந்த சூனியக்காரி உயிரற்ற சடலமாகக் கீழே கிடப்பதைக் கண்டான். மலை உச்சியை நோக்கி விரைந்து சென்று இளவரசியின் கட்டுக்களை அவிழ்த்து அவளை மீட்டான்.

பிறகென்ன, உளுந்தூர் இளவரசியை மீட்ட சிருகாலன் உளுந்தூர் நாச்சு மன்னனிடம் அவளை ஒப்படைத்த பொழுது, மன்னன் மகிழ்வடைந்து தன் நாட்டுக்கே அவனை மன்னனாக்கி தன் மகளை அவனுக்குத் திருமணம் செய்துவைத்ததை நான் சொல்லவும் வேண்டுமோ.