Back to Issue - 23

பெற்றோரின் அதீத பாதுகாப்பு அவசியமா?

January 1, 2023

என்னுடைய நண்பனின் பெயர் குகன். குகன் ஒரு புத்திசாலி. அவனை நான் முதல் முதலாக பத்து வயதில்தான் சந்தித்தேன். பாடசாலையில் எந்தச் சோதனை வந்தாலும்கூட குகன் அதில் நூறு சதவீதம் பெறுவதில் சந்தேகமே இல்லை. ஆனால் அவனின் பெற்றோர்கள் எப்போதும் மிகக் கண்டிப்பாக இருப்பதனால் அவனால் எங்களுடன் கொண்டாட்டங்கள் போன்றவற்றிற்குப் பெரிதளவில் வர முடியாமல் இருந்தது.  

நானும் என் நண்பர்களும் அடிக்கடி ஒவ்வொருவரின் வீட்டிற்குச் சென்று விளையாடுவது வழக்கம். ஆனால் நாம் குகனை எப்போது அழைத்தாலுங்கூட “என்னால் வர முடியாது”, “என் பெற்றோர் என்னை அனுமதிக்க மாட்டார்கள்” என்று சோகத்துடன் கூறுவான். இவ்வாறே பல வருடங்கள் கடந்தன. நானும் குகனும் பன்னிரண்டாம் வகுப்பில் காலடி எடுத்து வைத்தோம். அனைவரும் VCE பரீட்சைக்காகத் தீவிரமாகப் படிப்பது மட்டுமல்லாமல் எல்லோரும் தங்கள் பாடசாலை வாழ்க்கையின் இறுதி வருடத்தை நண்பர்களோடு ஆனந்தமாய்க் கொண்டாடும் வகுப்புதான் பன்னிரண்டாம் வகுப்பு. இருப்பினும் குகன் மாத்திரம் எங்களைப் பெரிதளவில் சந்திக்க முடியாமல் வீட்டில் படித்துக்கொண்டே இருந்தான். மாதங்கள் செல்லச் செல்ல, அவனுக்கும் அவன் நண்பர்களுக்கும் இடையிலே இருந்த இடைவெளி அதிகரித்தது. அவர்களுக்கிடையே ஓர் விசாலமான பாலமே உருவானது.

VCE பரீட்சைகளும் முடிவடைந்தன. நாம் அனைவரும் எதிர்பார்த்தவாறே, குகன் சாலச்சிறந்த புள்ளிகளைப் பெற்றான். அப்போதுதான் என் பிறந்தநாள் கொண்டாட்டம் வந்தது. குகன் தன் பெற்றோரிடம் கெஞ்சி மன்றாடி என் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு வரும் அனுமதியை ஆச்சரியமாகப் பெற்றான். நாம் அனைவரும் பூரிப்பில் குதூகலம் அடைந்தோம். ஆனால் குகன் என் வீட்டிற்கு வந்திருந்த சமயம் மிகவும் சங்கடப்பட்டான். ஒரு காலத்தில் மூச்சு விடாமல் உரையாடிய நண்பர்களோடு இப்போது என்ன கதைப்பது என்றே அறியாமல் தடுமாறினான். திடீரென்று குகன் ஓரமாக விலகிச் சென்றான். என்ன நடந்தது என்று விசாரிக்கச் சென்றபோது அவன் கூறிய வார்த்தைகள் இப்போதும் என் மனதை வருத்தத்திற்கு உண்டாக்குகிறது. “என் பெற்றோர் நான் அதிகமாகப் பார்ட்டிக்குச் செல்லக்கூடாது, அளவுக்கதிகமாக நண்பர்களைச் சந்திக்கக் கூடாது என்று அக்கறையோடு என்னைக் கண்டித்தார்கள். ஆனால் அதே அக்கறைதான் என்னை என் நண்பர்களுடன் நெருக்கமாகப் பழகமுடியாமல் தடுக்கிறது. இந்த அறையில் எத்தனையோ நபர்கள் இருந்தாலுங்கூட நண்பர்கள் இல்லாமல் தனிமைப்பட்டது

போலவே உணருகிறேன்” என்று குகன் கூறினான்.

இன்று அவுஸ்திரேலியாவில் என்னைப்போன்ற தமிழ் இளைஞர்கள் தங்கள் நண்பர்களோடு கொண்டாட்டங்களுக்குச் செல்வதும் ஒருவர் மற்றவர் வீட்டிற்குச் செல்வதும் சர்வ சாதாரணமானதாக உள்ளது. ஆனால் ஈழம், இந்தியா போன்ற தமிழ் பேசும் நாடுகளில் எம் பெற்றோர் வளர்ந்து வரும் காலத்தில், பிள்ளைகள் தங்கள் நண்பர்களைச் சந்திப்பது, partyக்கு போவது போன்ற பழக்கங்கள் வழக்கத்திற்கு மாறாக இருந்தன. இதனாலேயே குகனின் பெற்றோர், தங்கள் தாய்நாட்டில் தாங்கள் எவ்வாறு சமுதாயத்தில் பழகி நட்பு பாராட்டினார்களோ அவ்வாறே குகனும் நடந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்து, அவனின் சமூக வாழ்க்கையில் தாங்களே ஓர் தடைக்கல்லாக உருமாறி நிற்கிறார்கள். 

“செயற்கரிய யாவுள நட்பி னதுபோல்

வினைக்கரிய யாவுள காப்பு…” (திருக்குறள், 781)

அதாவது, நட்பைப்போல் தேடி அடைய வேண்டிய சிறந்த பொருள் வேறொன்றும் இல்லை. சமயத்தில் பகைவரிடமிருந்து காப்பு அளிக்க நட்பைப்போல் உயர்ந்த பொருள் கிடைப்பது அரிது. நட்பு ஒருவரின் வாழ்வில் அத்தியாவசியமானது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. ஆனால் அந்த நட்பை எவ்வாறு பாராட்டுகின்றோம் என்பது ஒவ்வொரு நாட்டுடனும் காலத்துடன் மாறக்கூடியது. இலங்கையில் நண்பர்கள்போலவே இங்கு அவுஸ்திரேலியாவின் முற்றிலும் வேறுபட்ட கலாச்சாரத்தில் வாழும் இளைஞர்களும் நண்பர்களுடன் பழக வேண்டும் என்று எதிர்பார்ப்பது யதார்த்தமற்றது.

தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை எண்ணிப் பெற்றோர்கள் கண்டிப்பாக இருப்பது தவறில்லை. ஆனால் தங்கள் பிள்ளைகள் தங்களைப் போலவே சமுதாயத்துடன் பழகவேண்டும் என்ற எதிர்பார்ப்பு நியாயமற்றது. எங்கள் இளைய தலைமுறையின் ‘சமூக வாழ்க்கை (social life)’ காலத்துடன் மிக வேகமாக மாறி வருகிறது. அதைப் பெற்றோர்கள் புரிந்துகொண்டால், தங்கள் பிள்ளைகளின் சமூக வாழ்க்கைக்குத் தடையாக நில்லாமல், அதை மெருகேற்றுவதிற்கு உதவ முடியும்.

– ஹரிஜன் பசுபதிதாசன் –