– ச. சத்தியன் –
பத்து வருடங்களுக்கு முன்னர் நான் அவுஸ்திரேலியாவிற்குக் குடிபெயர்ந்து, வேலை தேடி அலைந்து, பல தடைகளின் பின் ஒரு வேலையில் இணைந்தேன். புதிய நாடு, புரியாத மொழி, புதிய பண்பாடு, பழக்கவழக்கங்கள் எனப் பல நடுக்கங்களுடன் முதல் நாள் வேலையில் நுழைந்தேன்.
புன்முறுவலுடன் “Good Morning”, “How are you?” எனச் சிறப்பான வரவேற்பு கிடைத்தது. மனதில் பல கற்பனைகளுடன் ஏதோ ஒன்றைச் சாதித்தது போன்ற உணர்வுடன் எனது மேசையில் அமர்ந்து வேலையைத் தொடங்கினேன். சில நாட்களில் சக வேலையாட்கள் நான் அமர்ந்திருந்த இருக்கைக்கு வந்து பல விடயங்களைப் பேசத்தொடங்கினார்கள். அவர்களில் பலர் “Where are you from?” என்ற கேள்வியைக் கேட்கத்தவறவில்லை. மனதில் பல மாறுபட்ட சிந்தனைகளுடன் “from Sri Lanka” எனக் கூறியதும் அடுத்த கேள்வி “Are you from Colombo?” என்று வந்தது. “No, I am from Jaffna” எனப் பதில் கூறியதும் முதலில் எழுந்த கேள்வியே “Are you tamil? Did you come by boat?” என்பதே. அக்கேள்வியை மனதினுள் உள்வாங்கவே சில நிமிடங்கள் பிடித்தன.
அவுஸ்திரேலியா வருவதானால் இலங்கையில் கிடைத்ததைவிட நல்ல வேலையும் நல்ல வாழ்க்கையும் வேண்டும், இல்லாவிட்டால் வரமாட்டேன் என இருந்தவன் நான். அப்படி ஆயிரம் யோசனைகளுக்குப் பின்னர் இங்கு குடியேறி வந்து, ஒருவாறு வேலைக்குச் சென்றால் முதல் அனுபவமே என்னை ஏதோ ஒரு மூலையில் முடக்கியதுபோல உணர்த்தியது. ஏன் இப்படிக் கேட்கிறார்கள்? இதற்கு எப்படியான பதிலைச் சொல்லவேண்டும்? எனச் சிந்தித்தபடியே இருந்தேன். விளைவு, பின்னைய நாட்களில் என்னைப்பற்றியும் நான் எப்படி அவுஸ்திரேலியா வந்தேன் என்பதைப் பற்றியும் நம் தாயகத்து நிலைமையையும் விரிவாக வேறு சமூகத்தினருக்குத் தெரியப்படுத்தத் தொடங்கினேன்.
அதே நேரம் அவுஸ்திரேலிய மக்களில் பெரும்பான்மையானவர்கள் குடியேறிகள் என்பதை மறந்துவிடலாகாது. அவுஸ்திரேலியாவின் பூர்வீகக் குடிமக்களைத் தவிர இங்குள்ள பெரும்பான்மையான வெள்ளை இனங்கள் அத்தனையும் ஏதோ ஒரு வகையில் பல வருடங்களுக்கு முன்னர் இங்கு அகதிகளாகவோ, படைவீரர்களாகவோ அல்லது தொழிலாளராகவோ கப்பலில் வந்தவர்கள்தான். இவர்கள் இன்று இந்த நாட்டை ஆக்கிரமித்து, பொருளாதார, சமூக, அரசியல் அந்தஸ்தை அடைந்ததும் புதிதாக இங்கு குடியேறுபவர்களைப் பார்த்து விமர்சிக்கிறார்கள். படகில் வரும் தஞ்சக் கோரிக்கையாளர்களை எள்ளி நகையாடுகிறார்கள். இவர்கள் மட்டுமா, எம்மவர்களில் சிலரும் இந்த வேலையைச் செய்து தம்மேல் வெள்ளைச்சாயம் அடித்துக்கொள்வதையும் இங்கே குறிப்பிட்டேயாகவேண்டும்.
இந்நிலை மாறவேண்டும். எவ்வாறு மாற்றலாம்? இக் கேள்விகளை எவ்வாறு எதிர்கொள்ளலாம் என நாம் ஒரு சமூகமாகச் சிந்தித்து இக்குறுகிய மனப்பான்மையிலிருந்து வெளிவர வேண்டியது எமது இனத்தின் பொறுப்பல்லவா?
நாமும் இந்த நாட்டின் அரச அதிகாரக் கட்டமைப்பில் பங்கெடுக்கவேண்டும். கொள்கை மற்றும் தத்துவரீதியான முடிவுகளில் நம் கருத்துகளும் எடுத்துக் கொள்ளப்படவேண்டும். பிறருக்கு இதுபற்றிய சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். அவுஸ்திரேலியச் சமூகத்தின் நிஜமான அங்கத்தவர்களாக நாம் மாறவேண்டும்.
அதற்கு அரசியலில் நாம் பங்களிப்பு செய்வது மிக முக்கியமாகும்.
சொல்லப்போனால் அந்த நிலைமை இன்று கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பித்துவிட்டிருக்கிறது. துணிவாக, தெளிவாக, கர்வத்துடன் நான் ஒரு இலங்கைத் தமிழன் எனக் கூறுவது மட்டுமின்றி தமிழர் அடையாளமான எமது கலாச்சார உடையுடன் பல நிகழ்வுகளில் பங்குபற்றும் அளவிற்கு நிலைமை மாறிவிட்டது. நாம் மட்டுமல்ல, இங்குள்ள அரசியல்வாதிகளும் நம் கலாச்சார உடையில் வரத்தொடங்கும் அளவும் எங்களது முக்கியத்துவம் கூடியிருக்கிறது.
இது எவ்வாறு நிகழ்ந்தது?
இன்று தமிழருக்கென ஒரு தமிழ்க் கலாச்சார மண்டபம் பல மில்லியன் செலவில் நிமிர்ந்து நிற்கிறது. தென் கிழக்கு மெல்பேர்னின் இதயப் பகுதியான டாண்டினோங்கில் பல சமூகத்தவரும் பயன் பெறும் வண்ணம் அக்கட்டடம் பூர்த்தியாகித் தமிழ் அடையாளத்தை உயர்த்தி நிற்கின்றது. ஆங்கிலம் அல்லாத மொழி பேசுவோர்களில் தமிழ் பதினான்காவது இடத்தில்தான் உள்ளது. ஆனாலும் அகதிப் படகில் வந்தவர்கள் எனக் கூறப்பட்ட இந்த மக்களால் எவ்வாறு இவ்வாறான ஒரு மிகப் பிரம்மாண்டமான சமூக மண்டபத்தினை அமைக்கமுடிந்தது? காரணம் அவுஸ்திரேலிய அரசின் பங்களிப்பு ஆகும். பல மில்லியன் டொலர்களை அரசாங்கம் இந்த முயற்சிக்கு வழங்கியிருக்கிறது. மேலும் வழங்க உறுதியளித்தும் உள்ளது. இப்போது தமிழர் என்றால் அவர்களின் அடையாளமாக எமது சமூக சேவைகள் பல அரச மட்டத்தில் பேசப்படுகிறது. இதற்கு மேலும் வலுச் சேர்க்கும் வகையில் தமிழர் திருநாள் இன்று மிகப்பெரும் விழாவாக, ஒரு பல்கலாச்சார நிகழ்வாக, பல இனத்தவரும் பங்கு கொள்ளும் விழாவாக மாறி உள்ளது. இதற்குக்கூட அரசு தொடர்ச்சியாக உதவி வழங்குவதாக உறுதியளித்துள்ளது.
இது எவ்வாறு நிகழ்ந்தது?
இப்போது தமிழர் என்றால் அவர்களின் அடையாளமாக எமது சமூக சேவைகள் பல அரச மட்டத்தில் பேசப்படுகிறது. இதற்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையில் தமிழர் திருநாள் இன்று மிகப்பெரும் விழாவாக, ஒரு பல்கலாச்சார நிகழ்வாக, பல இனத்தவரும் பங்கு கொள்ளும் விழாவாக மாறி உள்ளது. இதற்குக்கூட அரசு தொடர்ச்சியாக உதவு வழங்குவதாக உறுதியளித்துள்ளது.
இது எவ்வாறு நிகழ்ந்தது?
எல்லாவற்றிற்கும் பதில் அரசியல்தான். அரசியலில் இன்று தமிழர் பற்றிய பார்வை மாற்றம் பெற்றுள்ளது. இது வெறுமனே ஓரிரு நாட்களில் நடைபெறவில்லை. இதற்காகப் பலர் பல வருடங்களாகப் பல்வேறு வகையில் அரசாங்கங்களுடன் கடினமாக வேலை செய்துள்ளனர். தமிழர்களில் பலர் அரசியலிலும் ஈடுபட்டுள்ளனர். உள்ளூராட்சி மன்றங்கள், மாநில அவைகள், பாராளுமன்றம் என அனைத்து சனநாயக மட்டங்களிலும் தமிழர்களின் பிரதிநிதித்துவம் இருக்கிறது. பல உள்ளூர்ப் பிரதிநிதிகளின் வெற்றியைத் தீர்மானிக்கும் கிங் மேக்கர்களாகத் தமிழர்கள் இருக்கிறார்கள். சிறுகச் சிறுக நிகழ்வுகளைப் பல வருடங்களாக நடாத்தி, பின்னர் அந்த நிகழ்வுகளிற்கு அரசியல்வாதிகளையும் அரச உத்தியோகத்தவர்களையும் அழைத்து, அவர்களை எமது முயற்சிகளைப் பார்வையிடவைத்து, பின்னர் அவர்களுடாக ஏனைய அரச மற்றும் அரசியல்வாதிகளையும் இணைத்து பெரும் நிகழ்வுகளாக மாற்றி, எமது மாநில அரச தலைவரையும் அழைத்து, எம்மீதான கவனிப்பை அதிகரித்திருக்கிறார்கள். இதனூடாகத் தமிழர்களின் வாக்கு வங்கியும் உணர்த்தப்படுகிறது. நமக்கும் கொஞ்சம் அரசியல் அறிவு உயர்ந்திருக்கிறது. இது இந்த நாட்டின் கட்சிகளுக்கும் புரிந்ததால்தான் அவர்களும் நம் வழிக்கு அடிக்கடி வருகிறார்கள். நம் சமூகத்துக்கான தேவைகளை அவ்வப்போது நிறைவு செய்கிறார்கள்.
இன்று தமிழர் என்றால் கடின உழைப்பாளர்கள், சிறந்த சமுக சேவகர்கள், தமது இன அடையாளத்திற்காகவும் இனக் கலாச்சாரத்தினை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சொல்வதற்கும் கடினமாக உழைப்பவர்களாக எடுத்துக் காட்டப்படுகிறார்கள்.
ஒரு சமுகத்தின் அல்லது ஒரு இனத்தின் இருப்பென்பது வெறும் பொருளாதார, கல்வி, மற்றும் ஏனைய சமூக அடையாளங்களில் மட்டும் தங்கியிருப்பதில்லை. மாறாக இன அடையாளத்துக்கும் அதன் நீட்சிக்கும் முக்கியமான துணைகளுள் ஒன்றாக இருப்பது அவ்வினத்தின் அரசியல் நிலைப்பாடும் அரசியல் ஞானமுமாகும்.
நமது இனப்போராட்டம் காரணமாகப் பல லட்சக்கணக்கான தமிழர் புலம்பெயர்ந்து பல்வேறு நாடுகளில் இன்று வசிக்கிறார்கள். அவர்களின் அடுத்த இரண்டு தலைமுறையினர்கள் இப்போது இளைஞர்களாகப் பல்வேறு துறைகளில் புலம்பெயர்ந்த நாடுகளில் மிக உச்சப் பதவிகளில் திறமையாகத் தமது அடையாளங்களை வெளிப்படுத்துகிறார்கள். ஆனாலும் கனடா தவிர்ந்த பிற நாடுகளில் அவர்கள் அரசியலில் இன்னும் முழுமையாகக் கால்பதிக்கவில்லையோ என எண்ணத்தோன்றுகிறது.
அரசியல் என்பது மனித வாழ்க்கையிலிருந்து பிரிக்க முடியாத ஒரு தத்துவம், கொள்கை மற்றும் விஞ்ஞானம். அரசியல் என்பது ஒருவிதமான வாழ்க்கைமுறை அல்லது நம் வாழ்க்கைமுறையைத் தீர்மானிக்கக்கூடிய கருவி. அரசியல் என்பது அமைதியான சமுதாய வாழ்க்கைக்கும் நெறிகளுக்கும் அறமான சமூகத்துக்கும் பொருளியல் ஒழுங்கியல் முறைமைகளுக்கும் வழிவகுக்கிறது. சரியான நேரத்தில் சரியான காலத்தில் எடுக்கும் அரசியல் முடிவுகள் ஒரு இனத்தின் தலைவிதியை மாற்றவல்லது. இன்று நம் கண் முன்னேயே பல சிறிய நாடுகள் மற்றும் இனக்குழுக்கள் தாம் எடுத்த சில முடிவுகளால் வேறு தளங்களுக்கு மாற்றமடைவது நிகழ்கிறது அல்லவா?
அவுஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்த பல இளைஞர்களுடன் பேசும்போதும் பழகும்போதும் அவர்களுக்கு அரசியலில் அதீத ஆர்வம் இருப்பதாகத் தெரியவில்லை. குடியேறிய முதலாம் தலைமுறையிடமும் அந்த முனைப்பு இல்லை. பொதுவாகவே நம்மிடையே அவுஸ்திரேலிய, உலக அரசியல் பற்றிய அறிவும் மிகக் குறைவாகவுள்ளது. நமக்கு நமது தாய் நிலத்தில் நிகழும் அரசியலும் திரைத்துறையுமே இரண்டு கண்களையும் நிறைத்திருக்கிறது. ஆனால் அங்குள்ள அரசியலைப் பின்பற்றுவதுபோல அல்லது அதனைவிட மேலாகவும் நாம் வாழும் சூழலின் அரசியலைப் பின்பற்றுவதும் மிக முக்கியமல்லவா?
இங்கே மேற்குறிப்பிடப்பட்ட கலாச்சார மண்டபத்தின் எழுச்சியோ அல்லது தமிழ் அமைப்புகளுக்குக் கிடைக்கும் மானியமோ ஒரு சமூகத்துக்கு அரசு தரும் அங்கீகாரம்தான். அதற்கு நமது அரசியலும் ஒற்றுமையும் முக்கியமானதுதான். ஆனால் நம் அரசியல் ஈடுபாடு அதற்காக மாத்திரம் இருக்கக்கூடாது.
அரசியல் என்றால் அது எமக்கானது அல்ல, அது யாரோ ஒருவருக்கானது என்ற எண்ணம் மாற்றமடைய வேண்டும். அரசியலில் ஈடுபடுவதன் மூலம் ஒரு இனமாக அரசியல்வாதிகளின் பார்வை கிட்டும் என்பது மட்டுமல்ல, இந்த அரசியல் பங்களிப்பு எமது இனத்தையும், மொழியையும், வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தும் என்பதையும் நாம் அறியவேண்டும். யாரோ ஒரு இனம், மொழி, கலாச்சாரம் புரியாத ஒருவர் எமக்காகச் சிந்திக்காமல் எமது இனத்திலிருந்து ஒருவர் அந்த இடத்தில் இருப்பின், அவரின் செயற்பாடுகள் மூலம் எமக்கான கொள்கைகள், எம் நம்பிக்கைகள், அறம், அபிவிருத்தி, பொருளியல், நிதி நிர்வாகம் என்பவற்றை மிகச்சிறப்பாக எட்ட முடியும். நம் வாழ்க்கையைத் தீர்மானிப்பவரை நாம் தீர ஆராய்ந்து தேர்ந்தெடுக்காமல் விடுதல் நாம் நமக்கே வைத்துக்கொள்ளும் கொள்ளியல்லவா?
ஆக அரசியலில் ஈடுபாடு கொள்வோம். நமக்கும் நம்மைச்சுற்றி ஏராளம் பிரச்சனைகள் உண்டு. அவற்றில் பலவற்றை அரசியல்மூலமே நாம் தீர்த்துக்கொள்ளமுடியும். நாம், நம் இனம், நாம் வாழும் சூழல், நாம் வாழும் இத்தேசம், இவ்வுலகம், இவ்வுலகத்தின் எதிர்காலம் என எல்லாவற்றிலும் அரசியலின் தாக்கம் இருக்கிறது. அதனை வெறும் பார்வையாளராக இருந்து கடந்துபோவதில் யாருக்கு நட்டம்?
அரசியல் செய்வோம்.