Back to Issue - 24

கொலை

September 4, 2023

அர்ச்சனா ஆதவன்

வடிவழகன் கொல்லப்பட்டுக் கிடந்தான்.

முகத்திலும் மார்பிலும் நான்கைந்து வெட்டுக்காயங்கள் இருந்தன.

தலை முடி எல்லாம் பிய்த்தெடுக்கப்பட்டு, வடிவழகனுக்கு அழகு பெயரில் மாத்திரம் எஞ்சியிருந்தது. இரவு அடித்த பெரு மழையில் இரத்தம் வழித்துக் கழுவப்பட்டிருந்தது. அருகிலிருந்த மரத்தடியில் அமர்ந்திருந்த நர்சிகா அழுதுகொண்டிருந்தாள். இரவு நிகழ்ந்த சம்பவங்கள் கொடுத்த அச்சத்தில் அவளது உடல் இன்னமும் நடுங்கிக்கொண்டிருந்தது.

சற்று நேரம் கொலை நிகழ்ந்த இடத்தைப் பார்வையிட்ட பின்னர் இன்ஸ்பெக்டர் சிருகாலன் நர்சிகாவிடம் வந்தார்.

“நீங்கள்..”

“நர்சிகா”, விசும்பியபடியே சொன்னாள்.

“இது பொருத்தமான நேரமில்லை என்பது புரிகிறது. ஆனாலும் கேட்கவேண்டும். எந்தக் கொலையிலும் அது நிகழ்ந்து இருபத்து நான்கு மணி நேரங்களுக்குள்தான் கொலையாளியைப் பிடிப்பதற்கான சாத்தியங்கள் அதிகம். அதனால் நாங்கள் விரைந்து செயற்பட வேண்டும் நர்சிகா.”

“சொல்லுங்கள்”

“கொன்றவன் யார் என்று தெரியுமா?”

கொன்றவள். பெண். ஆமாம், ஒரு பெண்தான் கொலையைச் செய்தாள். அதுவும் வயதான ஒரு கிழவி”

“கிழவியா? உண்மையாகத்தான் சொல்கிறீர்களா? நம்பமுடியவில்லையே? வேறு அடையாளங்கள் உண்டா?”

”பரட்டை நரை முடி. கொஞ்சம் கூனல். கையில் இரும்பு ஆயுதம் ஒன்றை வைத்திருந்தாள்”

”உங்களை அவள் காணவில்லையா?”

“இல்லை நான் படிக்கட்டுக்குக் கீழே பதுங்கிவிட்டேன்.”

”நல்லது, வேறு தகவல்கள் ஏதும் உள்ளதா?”

“ஞாபகமில்லை. பயங்கர மழை. இருட்டு. எதுவுமே தெரியவில்லை”

“சரி, நீங்கள் வீட்டுக்குச் செல்லலாம். உங்களுக்கு இப்போதைக்கு ஒரு காவலரைத் துணைக்கு அனுப்புகிறோம். அச்சப்படத் தேவையில்லை. ஏதாவது ஞாபகம் வந்தால் எங்களுக்குத் தகவல் தாருங்கள்.”

சிருகாலன் விடைபெற்றுக்கொண்டு மீண்டும் வடிவழகனின் உடல் கிடந்த இடத்திற்குத் திரும்பினார். மறுபடியும் கூர்ந்து கவனித்தபோது வயிற்றுப்பகுதியில் சிறு கத்தியால் சடசடவெனக் குத்தியது போன்று குறுங் காயங்கள் பல தெரிந்தன. இது எப்படி நடந்திருக்கும் என்று அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர் யோசைனயோடு தன் செல்பேசியில் சில புகைப்படங்கள் எடுத்தார்.

“இன்ஸ்பெக்டர் சிருகாலன்”

குரல் வந்த திசையில் திரும்பியபோது நர்சிகா நின்றிருந்தாள்.

“சொல்லுங்கள் நர்சிகா”

“அது வந்து, அந்தக் கிழவியோடு ஒரு இராட்சத பறவையும்…”

“என்ன?”

“நான் அதை என்னுடைய பிரமை என்று தான் யோசித்தேன். ஆனால் அந்தப் பறைவயும் அவளோடு சேர்ந்து வடிவழகனைத் தாக்கியதைக் கண்டேன்.”

“மெய்யாகத்தான் சொல்கிறீர்களா?”

“நூறு வீதம் உண்மை”

“என்ன பறவை?”

“இருட்டில் சரியாகத் தெரியவில்லை. ஆனால் அதன் சத்தத்தைப் பார்த்தால் காகம்போல…”

“காகமா?”

இன்ஸ்பெக்டர் சிருகாலனுக்கு எதுவுமே புரியவில்லை.

உடனடியாகத் தனது உதவியாளரிடம் வடிவழகன் உடலை அகற்றி முழு இடத்தையும் படம் எடுக்கச் சொன்னான். ஏதாவது தடயம் இருக்குமா என்று பார்த்தான். எல்லோரையும் உடனடியாகப் போகச் சொன்னான்.

சிருகாலனுக்குத் தலை சுற்றுவது போல் இருந்தது. பசியும் தாகமும் எடுக்கத் தனது வண்டியை நோக்கி நகர்ந்தான். பெரிய சிந்தனையுடன் வண்டியை ஓட்டினான். வீடு சென்று கதவைத் தட்ட சிருகாலனின் மனைவி கல்பனா கதவைத் திறந்தாள். சிருகாலன் முகம் கழுவி கல்பனாவின் சாப்பாட்டை உண்ணத் தொடங்கினான், என்றாலும் அவனது மனம் வடிவழகன், நர்சிகா பற்றியே எண்ணியது.

மனைவி கல்பனாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. கல்பனா சிருகாலனைத் துருவித் துருவிக் கேட்டாள். ஆனால் சிருகாலன் ஒன்றுமே சொல்லாமல் தூங்கி விட்டான்.

அதிகாலை எழும்பி உடனடியாகக் கொலை நடந்த இடத்தை நோக்கி விரைந்தான். கொலை நடந்த இடத்தை ஆழ்ந்து பார்த்தான். அந்த இடம் நேற்று பெய்த மழையால் ஈரமாக இருந்தது. சிருகாலன் மனம் குழம்பி இருந்தது. ஒரு தடயமும் கிடைக்கவில்லை. மனைவி கல்பனாவின் தொலைபேசி அடிக்கிறது. அதை எடுக்கும் எண்ணம் இல்லை, ஆனாலும் அவளின் கோபமான முகம் மனதில் தெரிந்தது. உடனடியாக மனைவியுடன் கதைத்து சில நிமிடம் அமைதியானான். கல்பனாவின் கனிவான பேச்சு மூளைக்கு உற்சாகமாக இருந்தது. மீண்டும் கொலை நடந்த இடத்தைச் சுற்றிப் பார்க்கிறான். மனைவி சொன்ன ”கத்தி வாங்கி வரவும்” என்ற சொல் மூளையில் பொறி தட்டியது.

நர்சிகாவின் பதிலும் மாறி மாறி இருந்தது. சிருகாலனின் மனம் காகம் என்ற சொல்லை நம்ப மறுத்தது. பறவைகளின் எதுவித அடையாளமும் கிடைக்கவில்லை. சிருகாலனின் கண்ணில் உடைந்த காப்பும் தூரத்தில் தென்பட்டது. அந்த இடத்தில் கலவரம் நடந்த தடையமும் இருந்தது. சிறு கத்தியின் பாகமும் இருந்தது. அதை எடுத்துக்கொண்டு வாகனத்தை நோக்கி விரைவாக நடந்தான். வாகனத்தை வடிவழகன் வீட்டை நோக்கித் திருப்பினான். அவனது முகத்தில் சிறு தெளிவு தெரிந்தது. வடிவழகன் வீட்டுக்குச் சிறு தூரத்தில் நிறுத்தினான். வடிவழகனின் அயலவர்களை விசாரித்தான். எல்லோரும் வடிவழகன் நர்சிகாவின் தினசரி சண்டைகளைப் பற்றிக் கூறினார்கள். உடனடியாக மெதுவாக வடிவழகன் வீட்டை நோக்கி நடந்தான். நர்சிகா அழுது வீங்கிய முகத்துடன் உள்ளே வரச்சொன்னாள். சிருகாலன் நர்சிகாவுடன் தனியே பேச அனுமதி கேட்டார். உள்ளே சென்றதும் சிருகாலன் பேச முதல் நர்சிகா விக்கி விக்கி அழத் தொடங்கினாள். வடிவழகன் ஒவ்வொரு நாளும் குடித்துவிட்டு வந்து தன்னை மிகவும் கொடுமை செய்தபடியால், தான் வடிவழகனைக் கத்தியால் குத்தி விட்டதாகச் சொன்னாள்.

சிருகாலன் மனம் பாரம் குறைந்தது. மெதுவாகக் காவல் நிலையத்தை நோக்கி நடந்தான். குடி குடியைக் கெடுக்கும்.