Back to Issue - 23

குழந்தைகளின் நடத்தைகளை நாம் எவ்வாறு அணுகுவது? – ஒரு பொது மருத்துவரின் பார்வை

February 12, 2023

How do you deal with behavioural issues in early childhood? – A General practitioner’s view

-மருத்துவர் சிவகாமி ஐங்கரன் –

ஏழு வயதுக் குழந்தை

அவருக்குக் கூச்ச சுபாவம் (shy) அதிகம். பேசுவதற்குச் சற்றுச் சிரமப்படுவார். பள்ளியில் ஆசிரியர்கள் இதனை அவதானிக்க ஆரம்பித்தனர். நாளடைவில்  அவரின் உடலில் மேலும் சில உடல் உபாதைகளுக்கான (physical symptoms) சில அறிகுறிகளும் ஏற்படத்தொடங்கின. அடிக்கடி தலைவலி வந்தது. குமட்டல் எடுத்தது. ஆசிரியர்கள் பெற்றோர்களிடம் இதுபற்றி எடுத்துச்சொல்ல அவர்களும் இந்தக்  குழந்தையை ஒரு பொது மருத்துவரிடம் (GP) அழைத்துச்சென்றனர். அவரின் பள்ளி அவரைப்பற்றிய ஒரு விரிவான அறிக்கையையும் மருத்துவரின் கவனத்துக்கென வழங்கியிருந்தது. மருத்துவர் மூன்றுமுறை  அவரை தொடர்ந்து பரிசோதித்தார். கூடவே பள்ளியின் அறிக்கையையும் கவனத்தில் எடுத்து  அவரின் நடத்தைச் சிக்கல் குணாதிசயங்களை (behavioural disorder) உறுதிசெய்தார். அடுத்தகட்டமாக ஒரு குழந்தை மருத்துவரிடம் கொண்டுசெல்லவேண்டும் என்று பெற்றோருக்குப் பரிந்துரைத்தார். 

பெற்றோரும் பொது மருத்துவரின் ஆலோசனைக்கு  ஒப்புக்கொண்டு குழந்தை வைத்தியரிடம்  குழந்தையைக் கூட்டிச்சென்றனர். இருப்பினும் அந்தக் குழந்தை வைத்தியரின் ஆலோசனைக்கமைய மருந்துகளைத் தொடங்கவோ அல்லது முன்மொழியப்பட்ட வேறு எந்தத் திட்டங்களுடனும் உடன்படவோ அக்குடும்பம் ஆர்வம் காட்டவில்லை. இதனால் குழந்தை மருத்துவரின் முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தன.

இதேவேளை குழந்தையின் நிலைமையில் எந்த முன்னேற்றமும் ஏற்படுவதாயில்லை.

குடும்பத்தினர் மீண்டும் பொது மருத்துவரிடம் சென்றனர். குழந்தை மருத்துவரின் ஆலோசனை குறித்து உரையாடினர். இம்முறை பொது மருத்துவர் வேறோர் முயற்சியைச் செய்தார். பிறிதொரு விதமாக இச்சிக்கலை அணுகக்கூடிய மற்றொரு குழந்தை வைத்தியரை அவர் பரிந்துரை செய்தார். மேலும் குழந்தையை ஒரு குழந்தை உளவியலாளரிடம் அனுப்பி அவரின் நிலைமையை மதிப்பீடு செய்வதற்கு ஏற்பாடு செய்தார்.

இந்தத்தடவை பெற்றோர் வைத்தியரின் ஆலோசனையை அப்படியே பின்பற்றினர். தொடர்ச்சியான பரிசோதனைகளுக்குப் பிறகு குழந்தைக்கு ஒன்றுக்கு மேலதிகமான சிக்கல்கள் (behavioural disorder and neurological and developmental disorder) இருப்பது கண்டறியப்பட்டது.  இந்தக் குழந்தை இப்போது பொது மருத்துவர், குழந்தை மருத்துவர், குழந்தை உளவியலாளர் என்ற மூன்று மருத்துவர்களின் பராமரிப்பின் கீழ் இருக்கிறார். அத்துடன் இந்தக் குழந்தை அவருக்கு உகந்த பாடசாலையில் படிப்பதோடு, அவருக்குத் தேவையான special teachers போன்ற மேலதிக உதவிகளைப் பாடசாலையிலும் speech therapy, occupational therapy, psychologist counselling போன்ற சேவைகளை வெளியிலும் பெறக்கூடியதாக உள்ளது.

 

இந்தக் குழந்தை இப்போது நன்றாகச் செயற்பட ஆரம்பித்துள்ளார்

நான்கு வயதுக் குழந்தை

அதீதச் சுட்டித்தனமும் சுறுசுறுப்பும் அந்தக் குழந்தையிடத்தில் இருந்தது. அது சற்று இயல்புக்கு மீறி இருந்ததால் அவரது பெற்றோர்  கவலைப்பட ஆரம்பிக்கிறார்கள். பெற்றோரின் கவலைக்கு  வேறு  ஒரு காரணமும் இருந்தது. அவர்களின் குடும்பத்தில் ADHD (Attention Deficit Hyperactivity Disorder) எனப்படுகின்ற  நடத்தைச் சிக்கல் (behavioural disorder) வரலாறு உண்டு. அதனால் தாமதிக்காமல் அவர்கள் தமது குடும்பப் பொது வைத்தியரை அணுகுகிறார்கள். வைத்தியர் குழந்தையைப் பரிசோதித்துவிட்டு அவருடைய வயதுக்கேற்ற செய்கைகள்தான் இருக்கின்றன என்றும் அவரின் செயற்பாடுகளைப்பற்றி அதிகம் கவலைப்படத் தேவையில்லை என்றும் உறுதி செய்கிறார். 

சில குழந்தைகள் சுட்டித்தனமாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பதுண்டு. அதற்காக அவர்கள் எல்லோருக்குமே ADHD இருக்கிறது என்ற அர்த்தம் இல்லை. ஆனால் சந்தேகம் ஏற்பட்டால் தாமதிக்காமல் வைத்தியரை நாடுவது எப்போதுமே நல்லது. இந்தக் குழந்தையின் பெற்றோருக்கு வைத்தியர் ‘இயல்பான நடத்தைகள் மற்றும் நடத்தைக் கோளாறுகள்’ பற்றிய அறிவுசார் உபயோகமான புத்தகங்களின் பெயர்களையும் இணையத்தளங்களையும் கொடுக்கிறார். ஏதேனும் புதிதான அறிகுறிகள் எதிர்காலத்தில் அவரிடத்தில் ஏற்பட்டால் உடனேயே வைத்தியரை அணுகுமாறும் அவர் கேட்டுக்கொள்கிறார்.

ஏழு வயது இன்னொரு குழந்தை

இவரின் குடும்பத்தில் நடத்தை சிக்கல் குடும்ப வரலாறு உள்ளது. இவரும் ADHD இன் சில அறிகுறிகளைக் காட்டத்தொடங்கினார்.குடும்பத்தினர்  தாமதிக்காமல் பொது வைத்தியரை அணுகினர். அந்தப் பொது வைத்தியர் ஒரு நடத்தைக் குழந்தை வைத்தியரிடம் அனுப்பிவைத்தார். இந்தக் குழந்தைக்கு மருத்துவ மதிப்பீடு ஆரம்பிக்கப்பட்டுச் சிகிச்சையும் வழங்கப்பட்டது. ஆனால் கொடுக்கப்பட்ட மருந்து அக்குழந்தைக்கு ஒத்துக்கொள்ளவில்லை. ஆனாலும்  அவர் தொடர் வைத்தியக் கண்காணிப்பில் உள்ளார் . 

A picture containing linedrawing

Description automatically generated

இப்போது குடும்ப மருத்துவர்(GP), குழந்தை மருத்துவர்(Paediatrician), குழந்தைகளுக்கான உளவியல் நிபுணர்(Child Psychologist), பாடசாலை ஆசிரியர், பெற்றோர் போன்றோரின் பராமரிப்பின்கீழ் மருந்து தவிர்த்த ஏனைய சாத்தியமான முறைமைகளை அவர் கடைப்பிடித்து வருகிறார். அந்தக் குழந்தையின் முன்னேற்றம் தொடர்ச்சியாகக் கவனிக்கப்பட்டு வருகிறது. வைத்தியர்கள் உரியத் தருணத்தில் தகுந்த சிகிச்சைகளை வழங்குவார்கள்.

இந்தக் குழந்தைகள் எல்லோரதும் நிலைப்பாடுகளை ஆராய்ந்தால் ஒரு விசயம் புலப்படும். ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானது. ஒவ்வொரு குழந்தைக்கான மருத்துவ நிலையும் சிகிச்சையும் வேறு வேறானது. 

குழந்தைகள் காண்பிக்கின்ற அறிகுறிகள் சமயத்தில் பெற்றோருக்கும் உடனிருப்பவர்களுக்கும் குழப்பத்தை ஏற்படுத்துவது சகஜம்தான். ADHDயின் பொதுவான அறிகுறிகளான “அதீதச் சுறுசுறுப்பு” (hyperactive behaviour), “கவனக்குறைவு” (inattention) பல குழந்தைகளுக்கு இயல்பான நடத்தைகளாகவும் அமைந்துவிடுவதுண்டு. இதனால் எது ADHD, எது இயல்பான நடத்தை என்பதைச் சாதாரண, இதில் பயிற்சி பெறாத மனிதர்களால் இனங்காணுவது கடினம். இவற்றுக்கு வீட்டிலேயே சுயமாகச் சிகிச்சை செய்வதும் நடத்தைக் கட்டுப்பாடு பண்ண முயல்வதும் உசிதமானதல்ல. 

குழந்தைகளுக்கும் இவற்றைப் புரியவைப்பது கடினமானது. அந்தச் சிறிய மனங்கள் பொதுவாகப் பிரச்சனைகளைக் கையாளச் சிறிதளவான திறனையே கொண்டுள்ளன. நாங்கள் குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை எங்கள் பார்வையிலன்றி அவர்களின் பார்வையில் புரிந்துகொள்வது முக்கியம். எங்களின் சமூக நிலை, சக மனிதர்கள் எங்களை எப்படி அணுகுவார்களோ என்ற தயக்கங்களெல்லாம் குழந்தையின் பிரச்சனையை எந்த வகையிலும் முன்னேற்றப்போவதில்லை. சொல்லப்போனால் இவையெல்லாம் பிரச்சனையை மேலும் அதிகமாக்கவே சந்தர்ப்பம் அதிகம். அதனால் தயக்கமின்றித் திறந்த மனதுடன் இவற்றை அணுகுங்கள். 

உங்களின் நோக்கம் குழந்தையின் நடத்தைக்கான உண்மையான காரணத்தை அறிந்துகொள்வதாகவே இருக்கவேண்டும். ஏனெனில் அதுதான் அவர்கள் எந்தவகையான சிகிச்சைகளைப் பெறுகிறார்கள் என்பதையோ அல்லது சிகிச்சையே தேவையில்லை என்பதையோ தீர்மானிக்கப்போகிறது. இது தவறும் பட்சத்தில் சிகிச்சைகள் தவறாகிப்போகும். அல்லது சிகிச்சையே நிகழ்த்தப்படாமல்போகும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டுவிடும்.  

A picture containing linedrawing

Description automatically generated

அவற்றின் சில உதாரணங்கள் இங்கே. 

Over Diagnosis: நடத்தை பிரச்சனை இல்லாது இருந்தாலும் இருப்பதாக முடிவெடுப்பது. இது குழந்தைக்குத் தேவையில்லாத இடையூறுகளை விளைவிக்கும்.

Under diagnosis: நடத்தைப் பிரச்சினை இருக்கும்போது இல்லை என முடிவு செய்வது. இது குழந்தையின் எதிர்காலத்தை மிகவும் பாதிக்கும். குழந்தைப் பருவத்தில் தொடங்கப்படும் மேலதிக உதவிகளான கல்வி மற்றும் மருத்துவ உதவிகள் தகுந்த வயதில் கிடைக்காமல் போகும்.

Misdiagnosis: குழந்தைகளுக்கு நடத்தைக் கோளாறு இருப்பதாகத் தவறாகக் கண்டறிதல். ஆனால் உண்மையான பிரச்சனை வேறாகவும் சிலவேளைகளில் பாரதூரமானதாகவும் இருக்கவும் சந்தர்ப்பம் உள்ளது . உதாரணமாக மனநலப் பிரச்சினைகள் (psychiatric illness), குழந்தை துஷ்பிரயோகம் (child abuse), புல்லியிங் (bullying)  போன்ற பிற கடுமையான பிரச்சினைகளை அது மறைத்துவிடக்கூடும்.

மேலே குறிப்பிட்டுள்ளபடி, சரியான வயதில் சரியான நோயறிதல் (correct  diagnosis at the appropriate age) மிக முக்கியமானது. இல்லையேல் அவர்களுக்கே அது அதிகத் தீங்கு விளைவிக்கும். அவர்களின் கல்வி அனுபவத்தைப் பாதிக்கும். அவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும்.

எந்தவொரு குழந்தையும் நடத்தைச் சிக்கல் சார்ந்த அறிகுறிகள் எவற்றையும் காட்ட ஆரம்பித்தால் உடனடியாக வைத்தியரை அணுகுதல் அவசியம். எல்லா அறிகுறிகளும் சிகிச்சைக்குரியவை அல்ல. பல சாதாரணமான அறிகுறிகளாகவே இருக்கக்கூடும். ஆனாலும் வைத்தியரினூடாக அவற்றை உறுதிப்படுத்துதல் நல்லது அல்லவா? அதனால் குழந்தைப்பள்ளியின் ஆலோசனைகளைச் செவிமடுங்கள். வைத்திய ஆலோசனையையும் பின்பற்றுங்கள். குழந்தையும் ஒத்துப்போகக்கூடிய மருத்துவக் குழுவைக் கண்டறிய முயற்சி செய்யுங்கள்.

நடத்தைச் சிக்கல் மட்டுமன்றிக் கண், செவிப்புலன் தொடர்பான சிக்கல்களையும்  பாடசாலையில் நடக்கும் மனதைப் பாதிக்கக்கூடிய பிரச்சனைகள், வீட்டில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் என்பவற்றையும்  கருத்தில் எடுங்கள். ஏனென்றால் குழந்தைகளின் வேறு பிரச்சனைகளும் நடத்தை சிக்கலாக வெளிப்படச் சாத்தியம் உள்ளது

இன்னுமொரு முக்கியமான விடயம். குழந்தைகளிடன் அவர்களின் பெற்றோருக்கு மாத்திரமின்றி ஒரு சமூகமாகவும் நமக்கொரு கடப்பாடு உண்டு. துரதிட்டவசமாக இன்றும் குழந்தைகளின் நடத்தைச் சிக்கல் பிரச்சனை சம்பந்தமான ஒரு சமூக வடு நம்மிடையே உள்ளது. இதனைக் குறைப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

அதனை எப்படிச் செய்வது?

நீங்கள் யாராவது குழந்தைக்கு எதாவது பிரச்சனை இருக்கும் என்று சந்தேகப்பட்டால் அந்தக்குழந்தையின் பெற்றோரிடம் உண்மையான அன்புடனும் கரிசனத்துடனும் வெளிப்படுத்தலாம். அவர்கள் உரையாடலில் அக்கறை காட்டினால் நீங்கள் உரையாடலைத் தொடரலாம். அல்லையேல் விட்டுவிடவேண்டும். ‘விடுப்பு’ கதைப்பதும் வளர்ப்புமுறையைக் குறைபடுவதும் ‘நாங்களெல்லாம் குழந்தை வளர்க்கும்போது…’ என்று சுயபெருமை பேசுவதும் எதிர்மறையான விளைவுகளையே உருவாக்கும். மேலும் நீங்கள் குழந்தையை diagnose பண்ணுவது தவிர்க்கப்படவேண்டியது . குழந்தைகளின் முன்னே அவர்களைப் பற்றிக் கதைப்பதும் தவிர்க்கப்பட வேண்டும் .

குழந்தையின் குடும்பத்தினரும் குழந்தையின் நன்மையை மட்டுமே முதன்மைப்படுத்திச் செயற்படவேண்டும். ஊர் சொல்லும், உலகம் சொல்லும் என்று செய்யவேண்டியதைச் செய்யாமல் இருப்பதும் மறைப்பதும் உங்கள் குழந்தையை மட்டுமே ஈற்றில் பாதிக்கும்.

இந்தக் கட்டுரை குழந்தைகளின் நடத்தை சிக்கல் பற்றி ஓரளவு புரிந்து கொள்ள உதவியிருக்கும் என்று நம்புகிறேன் . உங்களுக்கு மேலதிகத் தகவல்கள் தேவைப்பட்டால் மருத்துவரை நாடுங்கள்.


கட்டுரையில் பயன்படுத்தப்பட்ட மருத்துவச் சொல்லாடல்கள்

மருத்துவச் சொல்லாடல்கள்

Autism spectrum disorder (ASD)

neurological and developmental disorder 

Common behavioural disorders

Attention Deficit hyperactivity disorder (ADHD)

Oppositional Defiant disorder (ODD),

Conduct Disorder (CD)


ஓவியங்கள்: சியாமளா சத்தியசுதன்